‘லட்சாதிபதி ஆக வேண்டுமா..? இப்போதே இணையுங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில்" இந்த வாசகங்களுடன் கூடிய கண்கவர் விளம்பரங்களைத் தினந்தோறும் காணாதோர் இருக்க முடியாது. சமூகவலைதளங்கள், எஸ்.எம்.எஸ்., தொலைக்காட்சி விளம்பரங்கள் என எங்கு பார்த்தாலும் பணத்தாசையைத் தூண்டும் இந்த விளம்பரங்கள் பளிச்சென கண்ணில்படும். இப்படி அனைத்து தளங்களிலும் எட்டிப்பார்க்கும் இந்த விளம்பரங்களைப் பலர் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவதுண்டு. ஆனால் சிலர், பணம் மீத ஆசை காரணமாகவோ, தேவை காரணமாக இதனுள் சென்று சிக்கிக்கொள்வதுண்டு. ஆசைக்காக விளையாட்டாக ஆரம்பிக்கும் இது, ஒருகட்டத்தில் இதில் சிக்கியவர்களைக் கடனாளியாக்கி, மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்வது வரை கொண்டுவிட்டுவிடுகிறது. இப்படி இந்த சூதாட்டத்திற்கு இரையான குடும்பங்கள் ஏராளம்.
கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டது முதல் இன்று கோவையில் இளைஞர் ஒருவர் இந்த விளையாட்டால் நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொண்டது வரை, இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம். இப்படி பலரின் உயிரைப் பறித்து அவர்களின் குடும்பத்தை ஏழ்மை குழிக்குள் தள்ளிவிடும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை நக்கீரன் தனது எழுத்து மூலம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ஆன்லைன் ரம்மி குறித்தும், அது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் நக்கீரனிடம் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் தனிநபர் மற்றும் வணிக சமூக தொழில்முனைவோருக்கு நிதி சேவை தீர்வுகளை வழங்கும் Loanschief நிறுவனத்தின் நிறுவனர் வைரவன் தங்கவேலு.
ஆன்லைன் ரம்மி குறித்து Loanschief நிறுவனத்தின் நிறுவனர் வைரவன் தங்கவேலு கூறுகையில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும், இது "கேம் ஆஃப் ஸ்கில்" என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. லாட்டரி போன்று அதிர்ஷ்டத்தைக் கொண்டு விளையாடும் "கேம் ஆஃப் சான்ஸ்" என்ற பிரிவின் கீழ் இது வகைப்படுத்தப்படவில்லை. உழைத்துச் சம்பாதித்த பணம் மற்றும் அழகான குடும்ப சூழ்நிலையை இழக்கும் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் சில மாநிலங்கள் லாட்டரிகளை தடை செய்துள்ளன.அதேபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் சூதாடுவது தடை செய்யப்பட்டு அதனை வெறும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு விளையாட்டாக மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி கேமில் வழங்கப்படும் ரேண்டம் எண் ஜெனரேட்டரின் ஆட்டோமேஷன் யாருக்கும் தெரியாது. இந்த விளையாட்டை ஒருவர் விளையாடும்போது தங்களது சீட்டை எதிராளிக்கு எதிராக எவ்வாறு நகர்த்த வேண்டும் என்பதும் தெரியாது. இது முற்றிலும் கணிக்க முடியாத விளையாட்டு. நாம் டிஜிட்டல் உலகை நோக்கி முன்னேற வேண்டும், ஆனால் நிச்சயமாக நமது புத்திசாலித்தனத்தை ஆன்லைன் லாட்டரி அல்லது ரம்மி விளையாடுவதற்காக மட்டுமே பயன்படுத்தக்கூடாது என்பது கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது. ஆன்லைன் ரம்மி நம் வாழ்க்கையை டம்மியாக மாற்றும்" எனத் தெரிவித்துள்ளார்.