நடிகர் விஷாலுக்கு இரும்புத்திரை படத்திற்குப் பிறகு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. அதேபோல் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' (ஏ.ஏ.ஏ) படம் செய்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த இருவரும் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப கூட்டணி அமைத்து உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்ததா, இல்லையா?
எப்படியோ பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு 1975 ஆம் ஆண்டு டைம் டிராவல் செய்யும் டெலிபோனை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். அதை வைத்து தன்னுடைய வாழ்வில் நடந்த துன்பமான நிகழ்வை மாற்றும் செல்வராகவன் சிறிது நேரத்திலேயே இறந்து விடுகிறார். இதைத் தொடர்ந்து இந்த டெலிபோன் 20 வருடங்களுக்குப் பிறகு 1995 ஆம் ஆண்டு ஆண்டனி விஷாலின் மகன் மார்க் விஷாலிடம் கிடைக்கிறது. மகன் மார்க் விஷால் இந்த டெலிபோனை பயன்படுத்தி தன்னுடைய வாழ்வில் நடந்த துன்பமான நிகழ்வை மாற்ற எடுக்கும் முயற்சியில் தன் கேங்ஸ்டர் அப்பா ஆண்டனி விஷாலின் தலையெழுத்தை மாற்றுகிறார். இதையடுத்து அப்பா ஆண்டனி விஷாலுக்கு என்னவாயிற்று? இதனால் மகன் விஷால் மார்க் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இவர்களுக்கு நண்பனாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா வாழ்க்கை எவ்வாறு மாற்றி அமைக்கப்படுகிறது? என்பதே மார்க் ஆண்டனி படத்தின் அதிரடியான மீதிக் கதை.
'ஏ.ஏ.ஏ' கொடுத்த பிளாக்பஸ்டர் தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சரியான கம்பேக் கொடுத்து தியேட்டரை கைதட்டல், விசில்களால் அதிரச் செய்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். தன்னுடைய பலம் அறிந்து தனக்கு என்ன வருமோ அதைச் சிறப்பாகத் திரை எங்கும் படரச் செய்து தியேட்டரில் திருவிழாவை உண்டாக்கியிருக்கிறார். இன்று இளைஞர்களின் பல்சை சரியாகப் பிடித்து, அவர்களுக்கு காட்சிக்கு காட்சி என்ன பிடிக்குமோ அதைச் சரியாக கனித்து அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைத்து படம் முழுவதும் சரியான இன்டர்வலில் கூஸ்பம் மொமெண்ட்ஸ்களை அள்ளித் தெளித்து இருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் எந்த அளவு நமக்கு பரவசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்ததோ படமும் அதே அளவு பரவசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு தியேட்டர் மொமென்ட்ஸ் மூலம் கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது ஒரு டைம் டிராவல் கதை என்றாலும் அதில் புதுமையான விஷயங்களை உட்புகுத்தி இதுவரை நாம் பார்க்காத ஒரு கதை அம்சத்துடன் கூடிய திரைக்கதையை உருவாக்கி அதை ரசிக்கும்படி கொடுத்து படத்தை ஜோராக கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவ்வளவு குழப்பமான ஒரு திரைக்கதையை புரியும்படி அதையும் ரசிக்கும்படி கொடுத்ததற்கே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள்.
தொடர் தோல்வி பாதையில் சென்று கொண்டிருந்த விஷால், சிம்புவை போல் டைம் டிராவல் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் சரியான கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு ட்ரெண்டிங்கான திரைக்கதை மூலம் சரியான வடிவம் கொடுத்து அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அப்பா மகன் என இரு வேடங்களில் வரும் விஷால் மகனைக் காட்டிலும் அப்பா வேடத்தில் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் தந்தை விஷால் அதகளம். இவருக்கு சரி சம போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா தான் இந்த படத்தின் முதன்மையான ஹீரோ என்றால் மிகை ஆகாது.
அப்பா - மகன் என இரு வேடத்தில் வரும் எஸ்.ஜே. சூர்யாவும் காட்சிக்கு காட்சி தன்னுடைய அக்மார்க் நடிப்பை மிக மிக சிறப்பாக வெளிப்படுத்தி தியேட்டரில் கைதட்டல் மட்டும் விசில்களைத் தெறிக்கச் செய்து தனது நடிப்பால் திரையரங்கை அதிரச் செய்துள்ளார். இவரும் விஷாலும் விடாக்கண்டன் தொடக்கண்டனாக மாறி மாறி நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா தான் இந்த படத்தின் ஹீரோ அண்ட் வில்லன் என்று சொல்லும் அளவிற்கு காட்சிக்கு காட்சி நம்மை தன் காமெடி வில்லத்தனத்தால் பரவசப்படுத்துகிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ், வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக மாற்றி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறகு இந்த படத்தின் மொத்த கிரெடிட்சையும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு விருதுகள் நிச்சயம். சிறிது நேரமே வந்தாலும் செல்வராகவன் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். அதேபோல் விஷால், எஸ்.ஜே. சூர்யா உடன் பயணிக்கும்படியான கேரக்டரில் வரும் தெலுங்கு நடிகர் சுனிலும் ஜெயிலர் படம் போல் இந்த படத்திலும் கவனம் பெற்றுள்ளார். வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் கலந்து கட்டி அசர வைத்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் வரும் ஒய்.ஜி. மகேந்திரன், கிங்ஸ்லி, அபிநயா, ரித்து வர்மா, நிழல்கள் ரவி, பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் அனைத்து பாடல்களுமே ஆட்டம் போட வைக்கும் ரகம். அதேபோல் பின்னணி இசையில் ரெட்ரோ ஸ்டைல் இசை அமைத்து தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக பழைய பாடல்களை உபயோகப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்து பின்னணி இசைக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் பழைய பஞ்சுமிட்டாய் ரீமிக்ஸ் பாடல் வேற ரகம். இருந்தும் படம் மிகவும் சத்தமாக இருக்கிறது. அதை மட்டும் சற்று கன்சிடர் செய்து இருக்கலாம். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஹீரோவும் வில்லனும் இரட்டை வேடம் என்பதால், ஆக்சன் காட்சிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
தான் இதற்கு முன் இயக்கிய படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத சூழலை உருவாக்கி இருந்திருந்தாலும், அதையெல்லாம் மார்க் ஆண்டனி மூலம் சரி செய்து, தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதேபோல் இந்த படத்தின் டிரைலர் எந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே எதிர்பார்ப்பை இந்த படமும் பூர்த்தி செய்து இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடங்களிலும் பெரிதாக தொய்வில்லாமல் மிக வேகமாகப் பயணித்து ரோலர் கோஸ்டர் ரைடு போல் படம் ஓடுகிறது. இதனால் சில இடங்களில் மட்டும் லாஜிக் மீறல்கள். ஆனால் அவை எதுவும் படத்தைப் பெரிதாகப் பாதிக்காததால் இந்த படம் வெற்றிகரமாக கரை சேர்ந்திருக்கிறது.
மார்க் ஆண்டனி - ஏ விஷால் - ஆதிக் கம்பேக்!