கரோனாவிற்கு பிறகு ஓடிடிகளின் ஆதிக்கம் பெருமளவு அதிகரித்திருந்தாலும், துரதிருஷ்டவசமாக அவற்றில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையிலேயே அமைந்துவிடுகின்றன. இவற்றில் விதிவிலக்காக அவ்வப்போது அத்தி பூத்தார் போல் 'சே... இந்த படம் தியேட்டரில் வந்து இருக்கலாமே' என்ற எண்ணத்தைக் கொடுக்கும் சில படங்கள் வெளியாகி நமக்கு பரவசத்தைக் கொடுப்பதுண்டு. அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள டாணாக்காரன் விதிவிலக்காக அமைந்ததா?
போலீஸ் ஆக வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் விக்ரம் பிரபு அதற்கான தேர்வில் வெற்றிபெற்று காவலர் பயிற்சிப் பள்ளியில் சேருகிறார். அங்கு பயிற்சியாளராக இருக்கும் நடிகர் லால் பயிற்சிக்கு வரும் காவலர்களை அடிமைகளைப் போல நடத்தி மிரட்டுகிறார், அரசியல் செய்கிறார். இதனால் பயிற்சிக்கு வந்த விக்ரம் பிரபுவுக்கும் லாலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
ஒரு நல்ல படைப்பானது பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க, அழ வைக்க, கோபப்படுத்த, உணர்ச்சிவசப்பட, ஆசுவாசப்படுத்த, மெய்சிலிர்க்க வைக்க, பரவசப்படுத்த, சிந்திக்க வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு படம் கொடுக்கும்பட்சத்தில் அந்தப் படம் வெற்றிப் படமாக அமையும். 'ஜெய்பீம்' புகழ் போலீஸ்காரர் தமிழ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் டாணாக்காரன் திரைப்படம் மேற்குறிப்பிட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் நல்ல படங்களின் வரிசையில் இணைந்துள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், அவை பெரும்பாலும் ரவுடிகளை கொல்லும் போலீஸ் படங்களாகவும், அண்டர் கவர் ஆபரேஷன் செய்யும் ஹீரோவின் கதைகளாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து பெருமளவு வேறுபட்டு, போலீஸ் ஆவதற்கு முன்பு பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது டாணாக்காரன்.
தமிழ் சினிமாவில் பெரிதாகப் பேசப்படாத ஒரு கதையை மிக அருமையாகக் காட்சிப்படுத்தி புதுமையான விஷயங்களைக் கதைக்குள் புகுத்தி, திறம்படப் படத்தைக் கையாண்டு ஒரு நல்ல படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் தமிழ். போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களையும், மிரட்டல்களையும், அரசியலையும் நேரடியாகத் தோலுரித்துக் காட்டி, பார்ப்பவர்கள் மனதுக்குள் பல கேள்விகளை எழச் செய்துள்ளது இப்படம். முதல் பாதி வேகமாகக் கடந்து செல்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் சற்றே தொய்வுகள் தென்பட்டு அயற்சியைக் கொடுத்தாலும் இந்த கதைக் களமும் கதை சொல்லப்பட்ட விதமும் ரசிக்கும்படி அமைந்து படத்தை விறுவிறுப்பாக முடித்துள்ளது.
விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் எனப் படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே நடிப்பில் ஜொலித்துள்ளனர். அந்தளவு படத்தில் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. நாயகன் விக்ரம் பிரபு இப்படத்திற்குப் போட்ட உடல் உழைப்பாலும் நடிப்பாலும் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். பல நடிகர்கள் நடிக்கத் தயங்கும் இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து அசத்தி உள்ளார். இது போன்ற கதைகளை அவர் வரும் காலங்களில் தேர்வு செய்யும்பட்சத்தில் அவருக்கும் நல்லது, படம் பார்க்கப்போகும் நமக்கும் நல்லது.
பயிற்சியாளர் ஈஸ்வரமூர்த்தி ஆக நடிப்பில் மிரட்டியுள்ளார் நடிகர் லால். இவரது கம்பீரத் தோற்றமும், கணீர் குரலும், நிமிர்ந்த நடையும், வெறுப்பு உண்டாகும்படியான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்து மிரட்டியுள்ளன. இவரது கதாபாத்திரமும், விக்ரம் பிரபு கதாபாத்திரமும் படத்தில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதைப்போலத் தோன்றி, பார்ப்பவர்களைக் கதையோடு பயணிக்க வைத்துள்ளது. படத்தில் நாயகி இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார் நடிகை அஞ்சலி நாயர்.
ஒரு சிறந்த குணச்சித்திர நடிப்பை இப்படத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் எம்.எஸ். பாஸ்கர். இதேபோல மற்ற முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள மதுசூதன ராவ், பாவல் நவகீதன், போஸ் வெங்கட், பிரகதீஸ்வரன், கார்த்திக் ஆகியோரும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து கவனம் பெற்றுள்ளனர்.
பயிற்சிப் பள்ளியில் போலீசாக நடித்திருக்கும் நடிகர்கள் எந்த அளவு சிரமப்பட்டு நடித்தார்களோ, அதே அளவு சிரமப்பட்டுச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக அடிக்கின்ற வெயிலில் மைதானம் சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டு கைதட்டல் பெற்றுள்ளார். ஜிப்ரான் இசையில் பாடல் ஓகே. பின்னணி இசையானது காட்சிகளை மெருகேற்றி ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் சில காட்சிகளில் இவரது பின்னணி இசை பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்து நெகிழச் செய்கிறது.
மொத்தத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதாகப் பேசப்படாத ஒரு கதையைத் தேர்வு செய்து, அதனை சலிப்பு ஏற்படாத வகையில் கொடுத்ததற்காகவே இந்த படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்.
டாணாக்காரன் - வலிமையானவன்!