நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொங்கல் விடுமுறையில் அஜித் - விஜய் படங்கள் நேருக்கு நேர் மோதல். அஜித்துக்கு துணிவு, விஜய்க்கு வாரிசு. இதில் விஜய்யின் வாரிசு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
மிகப்பெரிய தொழிலதிபரான சரத்குமார் தனது இரண்டு மூத்த மகன்களுடன் கம்பெனியை நடத்தி வருகிறார். இவரது தொழில் போட்டியாளர்களை இவரது இரண்டு மகன்களை வைத்துக் காய் நகர்த்தியே மிக எளிதாக வெற்றி கொள்கிறார். தன் குடும்பம், தொழில் என இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் குடும்பத்தில் இருப்பவர்களையே சொந்தத் தொழிலிலும் ஈடுபடச் செய்து அதில் வெற்றியும் பெறுகிறார் சரத்குமார். இது சுத்தமாகப் பிடிக்காத சரத்குமாரின் கடைசி மகன் விஜய் சொந்தத் தொழில் செய்ய முடிவெடுக்கிறார். இது சரத்குமாருக்குப் பிடிக்காமல் போகவே அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு தொழில் போட்டியில் சரத்குமாருக்கு எதிரிகள் ஒருபுறம் அதிகரிக்க, இன்னொரு புறம் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, இவரது குடும்பமும் தொழிலும் சரிகிறது. இந்தச் சரிவை சரி செய்ய சரத்குமாரின் தொழில் வாரிசாகக் களம் இறங்கும் நாயகன் விஜய் தன் குடும்பத்தையும், தொழிலையும் சரிவிலிருந்து மீட்டாரா? இல்லையா? என்பதே வாரிசு படத்தின் மீதிக் கதை.
விஜய் என்ற ஒற்றை காந்த சக்தியை வைத்துக்கொண்டு மொத்த குடும்ப, ரசிகர் பட்டாளத்தையும் திரையரங்கிற்கு இழுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி. ஒரு ஹைடெக்கான குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை குடும்பத்தின் இளைய வாரிசு எப்படி தீர்த்து வைக்கிறார் என்ற ஒற்றை வரிக் கதையை மூன்று மணி நேரப் படமாகக் கொடுத்து ரசிகர்களை சோதிக்கச் செய்துள்ளது வாரிசு திரைப்படம். படம் ஆரம்பித்த முதல் பாதி முழுவதும் குடும்பம் சென்டிமென்ட் என மிக நீளமாக நகரும் திரைப்படம்., இரண்டாம் பாதியில் சற்றே வேகமெடுக்க ஆரம்பித்து மீண்டும் ஆங்காங்கே சில ஸ்பீடு பிரேக்கர்களுக்கு இடையே பயணித்து, சின்ன சின்ன கூஸ்பம்ப் காட்சிகளோடு இணைக்கப்பட்ட பாடல்களோடு படம் முடிவடைகிறது. ஒரு படமாகப் பார்க்கும் பொழுது ஆங்காங்கே வரும் சில எபிசோடுகள் மட்டும் கைதட்ட வைத்தாலும் மொத்தப் படமாகப் பார்க்கும் பட்சத்தில் மிகவும் இழுவையாக எடுக்கப்பட்ட படத்தின் நீளம் ரசிகர்களுக்கு அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. தெலுங்கில் நீண்ட நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ஹைடெக் குடும்ப கமர்சியல் சென்டிமென்ட் படங்களின் சாயல்களை உள்ளடக்கி ஒரு கலவையாகக் கொடுத்து அதைத் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகப்படுத்தி, அதை ரசிகர்களிடம் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளது வாரிசு திரைப்படம். கதையும், திரைக்கதையும் பழைய தெலுங்கு படங்களின் திரைக்கதை ரூட்டிலேயே பயணித்திருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏனோ சில விஷயங்கள் மிஸ் ஆவது போன்ற உணர்வைக் கொடுத்துள்ளது. படத்தின் பிளஸ் ஆக பார்க்கப்படுவது விஜய்யும், தமனின் இசையுமே. மற்றபடி கதையும், திரைக்கதையும் பழைய தெலுங்கு படங்களின் ரூட்டிலேயே பயணித்திருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
விஜய் எப்பொழுதும் போல் மிகவும் சார்மிங்காக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் தெறிக்கவிட்டுக் கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சில்லறைகள் சிதற விடச் செய்கிறார். மொத்தத்தில் விஜய் அவருக்கான வேலையைக் கணக் கச்சிதமாகச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். என்ன, கதைத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்! படத்தின் பெரும் பகுதி காட்சிகளில் வரும் அப்பாவுக்கும் மகனுக்குமான காட்சிகள், அம்மாவுக்கும் மகனுக்குமான காட்சிகள் விஜய்யின் சொந்த வாழ்க்கையையும் சற்று பிரதிபலித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுவே விஜய் இப்படத்தை தேர்வு செய்ததற்குக் காரணமாக இருக்குமோ என்ற எண்ணமும் ஒரு பக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாயகி ராஷ்மிகா மந்தனா வழக்கமான நாயகியாகவே வந்து செல்கிறார். படத்தில் இவர்தான் கதாநாயகி என்று சொல்ல வேண்டுமே என்ற காரணத்திற்காக அவருக்கென்று இரண்டு மூன்று காட்சிகளும், இரண்டு பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவருக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. வழக்கமான காமெடியனாக வந்து செல்லும் யோகி பாபு இந்த முறையாவது சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்க்க வைத்து மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். இவருக்கும் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், காமெடி காட்சிகள் என்னவோ கிச்சு கிச்சு மூட்ட மறுத்துள்ளது. விஜய்யின் தந்தையாக வரும் சரத்குமார் மற்றும் தாயாக வரும் ஜெயசுதா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாகத் தாயாக வரும் ஜெயசுதா பல இடங்களில் உருக வைக்கிறார். விஜய்யின் அண்ணன்களாக நடித்திருக்கும் ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் அவருக்கான வேலையைத் தனது அனுபவம் நடிப்பின் மூலம் சிறப்பாகச் செய்துள்ளார். மற்றபடி முக்கியக் கதாபாத்திரத்தில் வரும் பிரபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ், வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேஷ் மற்றும் இவர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பாக நடித்து படத்தைக் கரை சேர்க்க முயற்சி செய்துள்ளனர்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது. ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு எந்த அளவு ஃபிரேம் பியூட்டி வேண்டுமோ அந்தளவு சிறப்பாகக் கொடுத்து ஒரு பெரிய கமர்சியல் படம் பார்த்த உணர்வைத் தனது ஒளிப்பதிவு மூலம் கொடுத்திருக்கிறார் கார்த்திக் பழனி. படத்தில் விஜய்க்கு அடுத்து இன்னொரு பெரிய நாயகன் யார் என்றால் அது இசையமைப்பாளர் தமன் தான். இவரின் ஆராரோ, தீ தளபதி, ரஞ்சிதமே பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இவை ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளன. அதேபோல் பின்னணி இசையிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளார் தமன். இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி படத்தைக் கரை சேர்க்க முயற்சி செய்துள்ளது.
விஜய் என்ற ஒற்றை மந்திரத்தை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களுக்கும் பெண் ரசிகைகளுக்கும் ஓரளவு திருப்தி கொடுத்தாலும், பொதுவான ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
வாரிசு - கிரின்ஜி