அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இளம் பெண்கள் மத்தியில் இவருக்கு செம்ம க்ரேஸ் இருப்பது உண்மை. 'நோட்டா', 'டியர் காம்ரேட்' என சற்றே வேறு பாதையில் போன விஜய் மீண்டும் தனது முழு காதல் பாதைக்கு வந்துள்ளார்.
தன் வேலையை விட்டுவிட்டு, தனது லட்சியமான எழுத்தை முயற்சித்துக்கொண்டு இருப்பவர் கெளதம் (விஜய் தேவரகொண்டா). அவருக்கு துணை நிற்பவர் காதலி யாமினி (ராஷி கண்ணா). லிவ்-இன் ஜோடியாக வாழும் இவர்களுக்குள் மெல்ல மெல்ல பிரச்னைகள் தோன்றுகின்றன. ரைட்டர்ஸ் பிளாக் (writers block) எனப்படும் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் சிந்தனை, கற்பனை தடை பிரச்னையால் எழுத முடியாமல், ஒரு ஆண்டுக்கு மேல் காலத்தை செலவு செய்துவிட்ட கெளதம் மீது யாமினிக்கு கோபம் வந்து ஒரு கட்டத்தில் அந்த உறவை முறித்துக் கிளம்புகிறார். பிரிந்த காதலிக்கு தனது காதலை புரிய வைக்கவும் தன்னை நிரூபிக்கவும் இரண்டு கதைகளை எழுதுகிறார் கெளதம். அந்தக் கதைகளின் தாக்கம் இந்தக் கதையை என்ன செய்தது என்பதுதான் இயக்குனர் க்ராந்தி மாதவ்வின் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்'.
விஜய் தேவரகொண்டாவின் எவர்க்ரீன் லவ்வர் இமேஜை பயன்படுத்தி அவரை 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' ஆக்கியிருக்கிறார் மாதவ். ராஷி கண்ணா, விஜய் தேவரகொண்டாவை பிரிய முடிவெடுக்கும் காரணம் வலிமையானது. விஜய் தேவரகொண்டா பாத்திரத்தின் வாழ்க்கை முறை நம்மையே வெறுக்கச் செய்கிறது. எழுத்தாளராக விஜய் தேவரகொண்டா எழுதும் கதைகளில், தெலங்கானா சுரங்க பின்னணியில் நடக்கும் விஜய் தேவரகொண்டா - ஐஸ்வர்யா ராஜேஷ் கதை சற்றே அழுத்தமுடையதாக ரசிக்க வைப்பதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய், ஐஸ்வர்யா இருவரது மிகச் சிறந்த நடிப்பு. அதே பகுதியில் வரும் கேத்ரின் தெரசாவும் நடிப்பில் ஓகே. எழுத்தாளர் எழுதும் இன்னொரு கதையில் வருவது விஜய் - இசபெல் ஜோடி. சற்றும் மனதில் ஒட்டாத இந்த டிராக்கில் நடிகர்களின் நடிப்பும் பெரிதாகப் பயன்படவில்லை. ராஷி கண்ணா, பாத்திரத்தின் ஏமாற்றத்தை, கோபத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் நான்கு நாயகிகளில் முதலிடம் ஐஸ்வர்யாவுக்குதான்.
காதலை மையமாகக் கொண்ட படத்தில் சிறந்த காதல் தருணங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரும் குறை. ஒரு காதல் படத்தில் நாயகனும் நாயகியும் எப்படியாவது சேர்ந்து விட வேண்டுமென்ற பதற்றம் பார்வையாளர்களுக்கு வர வேண்டும். ஆனால், இங்கு விஜய் தேவரகொண்டாவின் பாத்திர வடிவமைப்பு, நம்மை அப்படி உணர வைக்கவில்லை. சொல்லப்போனால், இவர்கள் பிரிவது நல்லதுதான் என்றெண்ண வைக்கிறது. இந்த அடிப்படை குறை, மற்ற எதையும் ரசிக்கவிடாமல் தடுக்கிறது. ரசிக்கவைக்காத காதல், சுவாரசியமில்லாத திரைக்கதை என செல்லும் படத்தில் காதல் வலியால் விஜய் தேவரகொண்டா கோபப்படும்போது நமக்கு பாவமாக இல்லை, அலட்சியமே வருகிறது. இப்படிப்பட்ட படம் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக நீள்வது இன்னுமொரு அயர்ச்சி.
விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சில இடங்களில் அர்ஜுன் ரெட்டியை நினைவுபடுத்துகிறது. 'ஒரு அர்ஜுன் ரெட்டி போதும் விஜய் தேவரகொண்டா' என சொல்லத் தோன்றுகிறது. கோபி சுந்தரின் இசையும் பெரிதாகக் கவரவில்லை. படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், அவை படத்துக்கு உதவவில்லை. படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வருகிறது 'இந்த பூமியில், ஒவ்வொரு நொடியிலும் லட்சக்கணக்கான கதைகள் பிறக்கின்றன' என்று. இயக்குனர் க்ராந்தி மாதவ், அதில் வேறு ஏதேனும் கதையை நல்ல திரைக்கதையுடன் எடுத்திருக்கலாம்.