முதல் படத்தில் போதைப்பொருள் கடத்தல், இரண்டாம் படத்தில் சிறுமிகள் கடத்தல் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த நெல்சன், ஆள் கடத்தலை மையாக வைத்து எடுத்திருக்கும் படம் தான் பீஸ்ட். தனது ட்ரேட்மார்க்கான கடத்தல் கதையில் விஜய் எனும் மிகப்பெரிய நட்சத்திரத்தையும், தனது வழக்கமான காமெடி பட்டாளத்தையும் வைத்து பீஸ்ட் படத்தை எடுத்துள்ள நெல்சன், இம்முறை சக்சஸ் ரூட்டில் பயணித்தாரா? இல்லையா?
ஒரு பெரிய மால். அந்த மாலில் இருக்கும் மக்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தி விடுகின்றனர். சிறையிலிருக்கும் தங்களுடைய தலைவனை வெளியே விட்டால்தான் இவர்களை நாங்கள் விடுவிப்போம் என அறிவிக்கின்றனர். அந்த நேரம் அதே மாலில் மாட்டிக்கொண்ட இந்திய ராணுவத்தின் ரா ஏஜெண்ட் ஆன விஜய் மக்களைக் காப்பாற்றக் களத்தில் குதிக்கிறார். பின்னர் தீவிரவாதிகளைப் பிடித்து பணயக் கைதிகளை விஜய் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
முதலில் இப்படி ஒரு அரதப்பழசான கதையை ஒரு மாஸ் ஹீரோவான விஜய் எதன் அடிப்படையில் ஏற்றுக் கொண்டார் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய பல விஜயகாந்த் படங்களின் கதைகளைத் தழுவி அப்படியே லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து தனது ஸ்டைலில் ஒரு டார்க் காமெடி ஆக்ஷன் படமாகக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் நெல்சன். முதல் இரண்டு படங்களில் இவர் எடுத்துக்கொண்ட கதைக்களம் கடத்தலாகவே இருந்தாலும், கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதையால் அவை ரசிக்கும்படி அமைந்து வெற்றி பெற்றன.
ஆனால், அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு காமெடி காட்சிகள் குறைவாகவும் ஆக்சன் காட்சிகள் அதிகமாகவும் இருப்பது படத்தின் வேகத்தைக் குறைத்து ஆங்காங்கே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு காமெடி காட்சிகளாகப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளாகப் பார்ப்பதாக இருந்தாலும் சரி அவை தனித்தனியே பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருந்தாலும் ஒரு கோர்வையாக இல்லாததால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை. அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி அமைந்துள்ளதாலும் அதில் வரும் கதாபாத்திரங்களும் அடுத்து என்ன பேசப் போகிறது என்பதையும் யூகிக்க முடிவதால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் ஆங்காங்கே அடி வாங்குகிறது. குறிப்பாக கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பணயக் கைதிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பைத் திரைக்கதை கொடுக்க மறுத்துள்ளது படத்துக்குப் பின்னடைவைக் கொடுத்துள்ளது. பதைபதைப்பைக் கூட்டும் காட்சிகளில் சுவாரஸ்யத்தையும், ஆங்காங்கே சில ட்விஸ்டுகளையும் சேர்த்திருந்தால் படம் நன்றாக ரசிக்கப்பட்டிருக்கும்.
இருந்தும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருப்பது நடிகர் விஜய் மட்டுமே. எங்கெங்கெல்லாம் திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் விஜய் உடைய ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் தான் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றியுள்ளது. வயது கூடக்கூட அவருடைய அனுபவ நடிப்பும், தேர்ந்த பக்குவமும் காட்சிகளுக்கு பலம் கூட்டுகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் நடனக் காட்சிகளிலும் எப்போதும் போல் பரவசமூட்டும் பர்ஃபார்மென்ஸ் செய்து ரசிகர்களுக்கு சிலிர்ப்பூட்டுகிறார். இருந்தும் நெல்சன் பட ஹீரோக்கள் பாணியில் இவர் பல இடங்களில் பேசும் வசனங்கள் சற்றே படத்திலிருந்து நம்மை விலக்குகிறது. பழைய விஜயகாந்த் படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு என்ன வேலை இருக்குமோ அதே வேலையை இந்த படத்திலும் செய்துள்ளார் நாயகி பூஜா ஹெக்டே. சில காட்சிகளே வந்தாலும் விஜய்யைச் சுற்றிச் சுற்றி வந்து காதலித்துவிட்டுச் செல்கிறார்.
படத்தின் ஒரு சர்ப்ரைஸ் எல்மெண்ட் ஆக மாறி இருக்கிறார் நடிகர் செல்வராகவன். இவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்து வேகத்தைக் கூட்டியுள்ளதோடு பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தையும் கூட்டியுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு தேர்ந்த நடிகரைப் போன்ற ப்ரீ ஃப்லோவான நடிப்பை அசால்டாக செய்து அசத்தியிருக்கிறார். படத்தில் யோகி பாபு இருக்கிறார். ஆனால், அவரைக் காட்டிலும் விடிவி கணேஷ் பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டிச் சிரிக்க வைத்துள்ளார். இவருடன் சேர்ந்து நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் பல இடங்களில் கடுப்பேற்றும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகி பாபுவை போல் இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார். ஆனால் இவர்கள் காமெடி செய்தார்களா என்றால்? இல்லை! மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஷாஜி சென், அபர்ணா தாஸ் ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
இந்த படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்களும், பின்னணி இசையும் படத்தைத் தூண் போல் நின்று தாங்கிப்பிடித்துக் காப்பாற்றியுள்ளது. சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கும் இசையால் அதிரச் செய்துள்ளார் அனிருத். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதகளம். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சிகளைத் திறம்படக் கையாண்டுள்ளார்.
படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு பட்ஜெட்டை ஒரு தரமான இயக்குநரிடம் கொடுக்கும்பட்சத்தில், அதோடு சேர்த்து ஒரு மாஸ் ஹீரோவும் நடிக்கும் பட்சத்தில் அந்த படத்தை ஒரு தரமான பான் இந்தியா படமாகவே கொடுக்கலாம். ஆனால் அப்படி ஒரு காம்போ இந்தப்படத்தில் அமைந்தும் ஒரு நார்மலான படமாகவே இது இருக்கிறது என்பது சற்று ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் - நாட் தி பெஸ்ட்!