ஹாலிவுட்டில் தயாராகும் படங்களை தமிழுக்கு ஏற்றாற்போல் பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்குபவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். இவர் இயக்கத்தில் உருவான மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இவர் இதே பாணியில் 'டெடி' என்ற படத்தை உருவாக்கியுள்ளார். பேண்டஸி திரில்லர் படமாக OTT தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இப்படம் முந்தைய படங்கள் போலவே வரவேற்பை பெற்றதா..?
ஒரு விபத்தில் காயமடைந்த சாயீஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவர் கோமா நிலைக்கு செல்ல அவரை ஒரு கும்பல் கடத்தி விடுகின்றனர். அப்போது அவரின் ஆத்மா ஒரு 'டெடி' பியர் பொம்மைக்குள் புகுந்துகொள்கிறது. அதன்பிறகு அந்த டெடிக்கு நடக்கும், பேசும் திறன் கிடைத்துவிட, அது அதிமேதாவியான ஆர்யாவிடம் தன்னை காப்பாற்ற உதவி கேட்கிறது. ஆர்யாவும் உதவ முன்வருகிறார். இருவரும் சேர்ந்து சாயீஷாவை கண்டு பிடித்தார்களா, சாயீஷாவுக்கு என்ன ஆனது, அவர் ஏன் கடத்தப்படுகிறார், டெடிக்குள் சாயீஷா ஆத்மா எப்படி புகுந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஏற்கனவே பார்த்து பழகிய கதையில் ஒரு டெடி பொம்மையை புகுத்தி, அதை பேச வைத்து, நடிக்க வைத்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். பேண்டஸி திரில்லர் படமாக இருந்தாலும் அதில் நட்பு, காதல், சென்டிமென்ட், காமெடி என நமக்கு கனெக்ட் செய்யும்படியான விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆர்யா டெடி சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்திற்கு பலம் கூட்டியுள்ளது. டெடி கதாபாத்திரத்துக்கு அளிக்கப்பட்ட கிராபிக்ஸ் அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அதுவே படத்துக்கு பக்கபலமாகவும் அமைந்துள்ளது. அதேபோல் ஆர்யாவின் கதாபாத்திர தன்மையும் புதிதாக அமைந்து ரசிக்கவைத்துள்ளது.
இருந்தும் படம் முழுவதும் ஆர்யாவும், டெடியும் மட்டுமே நிறைந்து இருப்பது ஒரு புறம் ப்ளஸ் ஆக அமைந்தாலும் நாயகி உட்பட மற்ற காதாபாத்திரங்கள் யாருக்குமே அதிக முக்கியத்துவம் அளிக்காதது திரைக்கதையில் சற்று மந்த நிலையை ஏற்படுத்துகிறது. கூடவே டெடி பொம்மையின் நிறமும், தோற்றமும் பெண்மையை உணரவைக்க மறுக்கிறது. அதேபோல் சுவாரசியம் குறைவான பாடல்களும் படத்துக்கு வேகத்தடையாக அமைந்து அயர்ச்சியை ஏற்பத்தியுள்ளன. வெளிநாடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் லாஜிக் மீறல்களை சற்று தவிர்த்திருக்கலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
நடிகர் ஆர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு பொருந்தும்படியான கதையை கவனமாக தேர்வு செய்துள்ளார். அது அவருக்கு நல்ல பலனையும் கொடுத்துள்ளது. ஓசிடியால் பாதிக்கப்பட்ட அதிமேதாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்யா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அதற்கு அவருடைய உடல்மொழி நன்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. சாயீஷாவுக்கு படத்தில் அதிக வேலையில்லை. சிறிது நேரமே வந்துவிட்டு செல்கிறார்.
டெடி கதாபாத்திரத்துக்கு தன்னுடைய நடிப்பால் உயிர் ஊட்டியுள்ளார் நடிகர் ஈ.பி.கோகுலன். துறுதுறுவென அவர் செய்யும் சேட்டைகள் டெடி கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்துகின்றன. ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. வில்லனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குனர் மகிழ் திருமேனி சிறிது நேரமே வந்தாலும் பயமுறுத்திவிட்டு செல்கிறார். வழக்கம்போல் ஆர்யாவுக்கு நண்பர்களாக நடித்திருக்கும் சதிஷ் மற்றும் கருணாகரன் ஆகியோர் தங்களது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி வழக்கத்துக்கு மாறான வரவேற்பை பெற முயற்சி செய்துள்ளனர்.
எஸ்.யுவா ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளை அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார். டி.இமானின் பின்னணி இசை படத்தின் வேகத்தை கூட்டியுள்ளது. பாடல்கள் கேட்பதற்கும், காண்பதற்கும் நன்றாக இருந்தாலும் படத்தோடு ஒட்ட மறுக்கின்றன. தமிழ் சினிமாவுக்குப் புதியதான 'டெடி' கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அதிக வாய்ப்பு உள்ளது.