Skip to main content

தமிழ்ப் படமா? தெலுங்கு படமா? - 'சுல்தான்' விமர்சனம்!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

தமிழ்ப் படமா? தெலுங்கு படமா? - 'சுல்தான்' விமர்சனம்!

 

ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டால் அந்தப் படத்தினுடைய வெற்றி என்பது அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் படங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படி இந்த டிகேடின் மாபெரும் வெற்றிப் படங்களான 'பாகுபலி', 'கேஜிஎஃப்' படங்களின் தாக்கம் தற்போது தயாராகும் படங்களில் அதிகமாக தென்பட ஆரம்பித்துள்ளது. அது சில படங்களில் ரசிக்கப் பட்டாலும் பல படங்களில் சொதப்பலாக மாறிவிடுகிறது. அந்த வகையில், மேலே குறிப்பிட்ட வெற்றிப் படங்களின் தாக்கம் அதிகம் நிறைந்து தயாராகியுள்ள 'சுல்தான்' படம் ரசிக்க வைத்ததா அல்லது சொதப்பியதா...?


ஒரு மிகப் பெரிய ரவுடிக் கூட்டத்தைக் கட்டி மேய்க்கிறார் தாதா நெப்போலியன். ரவுடிசம் என்றாலே சுத்தமாகப் பிடிக்காத அவரது மகன் கார்த்தி, படிப்பை முடித்துவிட்டு வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வருகிறார். இதற்கிடையே ஒரு கிராமத்தை ஆட்டிப்படைக்கும் 'கேஜிஎஃப் புகழ்' ராமிடம் இருந்து கிராமத்தைக் காப்பாற்ற சில விவசாயிகளுடன் வந்த பொன்வண்ணன், நெப்போலியனிடம் உதவி கேட்கிறார். அவரும் ரவுடியிடம் இருந்து கிராமத்தைக் காப்பாற்றித் தருவதாக சத்தியம் செய்கிறார். இதற்கிடையே தாதா நெப்போலியனை போலீஸ் என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறது. மீதமுள்ள ரவுடிகளை என்கவுன்டரில் இருந்து காப்பாற்ற அனைவரையும் கூட்டிக்கொண்டு அந்த கிராமத்துக்குச் செல்கிறார் கார்த்தி. போன இடத்தில் ரவுடிசம் பிடிக்காத கார்த்திக்கு அப்பா செய்த சத்தியம் தெரியவர அந்தச் சத்தியத்தை கார்த்தி நிறைவேற்றினாரா, இல்லையா..? என்பதே சுல்தான் படத்தின் மீதிக் கதை.

 

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இருந்துவந்த வெட்டுக்குத்து நிறைந்த மசாலா படங்களின் படையெடுப்பு சமீப காலங்களாகக் குறைந்து நல்ல தரமான படங்கள் வந்து வெற்றிபெற ஆரம்பித்தன. இதற்கு நடுவே வெளியான பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற படங்கள் பெற்ற மாபெரும் வெற்றியால், மீண்டும் மசாலா படங்கள் சற்று துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதற்கு, பிள்ளையார் சுழி போடும்படி வெளியாகியுள்ள சுல்தான் படத்தின் திரைக்கதையை பல வெற்றிப்படங்களில் பார்த்த நல்ல நல்ல காட்சிகளை இன்ஸ்பயராக எடுத்துக்கொண்டு அதையெல்லாம் கோர்வையாகக் கோத்து மாலையாக அணிவித்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். இவை நன்றாக ரசிக்கும்படி இருந்ததா என்று கேட்டால் ஒகே! என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்தப் படத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழ் வாடை எங்குமே வீசவில்லை. அதே கிளிஷேவான பில்டப் காட்சிகள், அவ்வப்போது பதட்டத்தைக் குறைக்கும்படி வரும் காதல் காட்சிகள், மெய்சிலிர்க்கும்படி வரும் பஞ்ச் வசனங்கள், தியேட்டரை அதிரவைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் எனப் பழைய ஃபார்முலாவில் வெற்றிபெற்ற தெலுங்கு, கன்னடப் படங்களின் பாணியில் உருவாக்கியுள்ளார் இயக்குனர். கதை கருவாகப் பார்க்கும் பொழுது கைதட்டல் வாங்கும் இப்படம், திரைக்கதை என்று வரும்பொழுது கைதட்ட மறுக்கிறது. படத்தின் மேக்கிங்கை மட்டும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் படங்களின் பாணியில் உருவாக்கி, சுல்தானை ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். 

 

KARTHIK SULTHAN

 

'கைதி' வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு தியேட்டருக்குள் சென்றால், அங்கு அவர் மீண்டும் மசாலா படங்களின் ஹீரோ என்ன செய்வாரோ அதையே இப்படத்திலும் செய்துள்ளார். ஓப்பனிங் பாடல், நாயகியைச் சுற்றிச் சுற்றி காதலிப்பது, தந்தையுடனும், ஊர் மக்களுடனும் வரும் சென்டிமென்ட் காட்சி, அதிரவைக்கும் சண்டை என அக்மார்க் ஹீரோ என்ன செய்வாரோ அதையே செய்துள்ளார். கார்த்தியிடம் எதிர்பார்த்தது இதுதானா...?

 

நாயகி ராஷ்மிகா ஏனோ படம் முழுவதும் பல்லைக் கடித்துக் கொண்டே பேசுகிறார். அது சில இடங்களில் லிப் சின்க் ஆக மறுத்தாலும் அவர் சொந்தக் குரலில் டப் செய்திருப்பதால் சற்று ரசிக்க முடிகிறது. மற்றபடி கிராமத்து உடையில் அழகாக வந்து செல்கிறார்.

 

மிரட்டல் தொனியில் என்ட்ரி கொடுக்கும் வில்லன் கே.ஜி.எஃப் ராம், கடைசிவரை மிரட்டாமலேயே சென்றுவிடுகிறார். அவரது உச்சரிப்பில் கன்னடம் அதிகம் தென்படுகிறது. இது படத்திற்கு சற்று மைனஸ் ஆகவும் அமைந்துள்ளது. அவர் சொந்தக் குரலில் டப் செய்திருபதற்கு மட்டும் வாழ்த்துகள்.

 

அம்மா, அப்பாவாக வரும் நடிகை அபிராமி, நெப்போலியன் ஆகியோர் சிறிது நேரமே வந்து விட்டுச் செல்கின்றனர். யோகிபாபு எல்லாப் படங்களிலும் இருப்பதுபோல் இந்தப் படத்திலும் இருக்கிறார். சிரிக்க வைத்தாரா என்றால் கேள்விக்குறியே..?

 

முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், மனதில் நிற்கிறார். மேலும் பொன்வண்ணன், மயில்சாமி, சென்ராயன், சிங்கம்புலி, மாரிமுத்து அவரவர் வேலையை நிறைவாகவே செய்துள்ளனர்.

 

இப்படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையே. எந்தக் காட்சிக்கு எந்த இடத்தில் பில்டப் கொடுக்க வேண்டுமோ, அந்த இடத்தில் சரியாகக் கொடுத்து சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.  அதேபோல் காதல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகளில் வருடி உள்ளார். விவேக் மெர்வின் இசையில், 'எப்படி இருந்தோம் நாங்க', 'யாரையும் இவ்வளவு அழகா பாக்கல' போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

 

தமிழ்ப் படமா? தெலுங்கு படமா? - 'சுல்தான்' விமர்சனம்!

 

ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன் ரங்கஸ்தலம், கே.ஜி.எஃப் படப் பாணியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழ்ப் படமாக இது தெரியாததற்கு இவரது ஒளிப்பதிவும் மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருந்தும் அதைச் சிறப்பாகவே செய்து அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார்.

 

லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஜஸ்ட் ஒரு படமாகப் பார்த்தால், முதல் பாதி வேகமாகவும், இரண்டாம் பாதி சற்று நிதானமாகவும் சென்று கடைசியில், ஒரு சிலிர்ப்பைக் கொடுத்து முடிந்துள்ளது இந்த 'சுல்தான்'.

 

'சுல்தான்' - எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான 'பழைய' படம்!

 

 

 

 

சார்ந்த செய்திகள்