இயக்குனர் மணிரத்னம், அவ்வப்போது எழுத்தாளர் மணிரத்னமாக செயல்படுவதுண்டு. சுகாசினி, பாரதிராஜா என தனக்கு நெருக்கமானவர்களுக்காக சில முறை. சுபாஷ், அழகம்பெருமாள் என தனது சீடர்களுக்காக சில முறை. இம்முறை தனது சீடர் தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார் மணிரத்னம். சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், பாலாஜி சக்திவேல், ஷாந்தனு, மடோனா என ஒரு பெரிய நடிகர் கூட்டம் நடிக்க தனா இயக்கியுள்ள 'மெட்ராஸ் டாக்கீஸ்' படம் 'வானம் கொட்டட்டும்'.
தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை வெட்டியவரை ஆத்திரத்துடன் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார் சரத்குமார். அந்த வன்முறை பின்னணியில் வளர்க்க விருப்பமில்லாமல் பிள்ளைகள் இருவரையும் தங்கள் கிராமத்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் ராதிகா. சென்னையில் வளரும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு புதிய தொழில் தொடங்குகிறார்கள். எல்லாம் நன்றாக செல்லும் வேளையில் பதினாறு வருட சிறை தண்டனை முடிந்து வெளியில் வருகிறார் அப்பா சரத்குமார். இத்தனை வருடங்களாக அவர் இல்லாமல் வாழப் பழகிய அந்தக் குடும்பத்தில் அவரது வரவு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதும் இன்னொரு புறம் சரத்குமாரை பழிவாங்கக் காத்திருப்பவர் என்ன செய்தார் என்பதே 'வானம் கொட்டட்டும்'.
படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு, நடிகர்கள். ஒரு படத்தின் முக்கிய நடிகர்கள் அத்தனை பேரும் இத்தனை சிறப்பாக நடிப்பதை பார்த்து சில காலம் ஆகிறது. முதல் காட்சியிலேயே, சரத்குமார் நம் மனதில் கம்பீரமாகப் பதிகிறார். இவரை ஏன் நாம் அடிக்கடி திரையில் பார்க்க முடியவில்லை என்ற கேள்வி ஏற்படுகிறது. ராதிகா, அதிர்ச்சியையும் அழுத்தத்தையும் அன்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். நடிப்பில் அத்தனை பரிமாணங்கள்! ஓவர் ஆக்ஷன் என்பது சிறிதுமின்றி மிக இயல்பாக அழுத்தமான நடிப்பை தந்து கவர்கிறார். விக்ரம் பிரபுவுக்கு வெகுநாள் இடைவெளிக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம், நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், எப்போதும் போல இயல்பான நடிப்பு. பாலாஜி சக்திவேல், ஒரு ஆச்சரியம். நடிகராக அசுரனின் அறிமுகமாகி இருந்தாலும் இதில் கிராமத்து பெரியப்பா பாத்திரத்தில் செம்மையாக நடித்து சிரிக்கவைக்கிறார், ரசிக்கவைக்கிறார், நெகிழ வைக்கிறார். ஷாந்தனு, மடோனா, அமிதாஷ் ஆகியோருக்கு பாத்திரங்கள் சிறிது என்றாலும் நடிப்பில் எந்தக் குறையுமில்லை. குழந்தைகளுடன் சென்னை வரும் ராதிகா, வாழும் இடம், வாழ்க்கை, அவரது தொழில் என அந்தக் களம் இயல்பாக ஈர்க்கிறது. விக்ரம் பிரபு செய்யும் தொழிலும் நாம் அதிகம் பார்த்திராதது. விரிவாக, சுவாரசியமாக காட்டப்பட்டிருக்கிறது.
இத்தனை நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் பல பாத்திரங்கள் அழுத்தமில்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் பெரும் குறை. சரத்குமார் - ராதிகா உறவு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா - பாலாஜி சக்திவேல் உறவு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா - சரத்குமார் உறவு... என இவையே ஆழமாக அழுத்தமாக சொல்லப்பட போதுமானதாக இருக்க, மற்ற டிராக்குகள் அத்தனையும் தேவையில்லாதது போன்ற உணர்வை அளித்து படத்தையும் பாதிக்கின்றன. மடோனா விக்ரம் பிரபுவிடம் உதவி கேட்பது போன்ற பல காட்சிகள் இயல்பை மீறி இருக்கின்றன. நந்தாவின் பழிவாங்கும் முயற்சியும் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கிறது. படத்தின் மைய நோக்கம் பலமாக இல்லாமல் பல பிரச்னைகளில் கவனம் செலுத்தி திடீரென முடிவை நோக்கிப் போவது போன்ற உணர்வால் படம் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் ஏற்படாமல் முடிகிறது.
சித் ஸ்ரீராமின் பாடல்களில் ஒரு புதிய தன்மை தெரிகிறது. கண்ணு... தங்கம்... பாடல் மனதில் ஒட்டினாலும் அது அடிக்கடி ஒலித்து நம்மை சோதிக்கிறது. சித் ஸ்ரீராம் - கே இணைந்து அமைத்துள்ள பின்னணி இசையில் ஆங்காங்கே சோதனையாக செய்யப்பட்ட புது முயற்சிகள் சில, நம்மை சோதிக்கின்றன. சில இடங்களில் அமைதியின் தேவை இருப்பதை உணர முடிகிறது. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு உயர்தரம். கோயம்பேடு மார்க்கெட் வாழைக்காய் கடையும் தேனி வாழைத்தோப்பும் விதம் விதமாக கண்ணை கவர்கின்றன.
நேர்மறையான பல விஷயங்கள் இருக்க, குறையாகத் தெரியும் சில விஷயங்கள் படத்தை பின்னுக்கிழுக்கின்றன. ஆனாலும் மொத்தத்தில் மோசமான அனுபவமில்லை 'வானம் கொட்டட்டும்'.