சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில் அதை வைத்து பல படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதில் சில படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தை தொலைக்க வைக்கிறது. சில படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே கடந்து சென்று விடுகிறது. அந்த வகையில் தற்போது அதே பாலியல் வன்கொடுமையை எதிர்த்து உருவாக்கப்பட்டு ரிலீசாகி உள்ள கார்கி திரைப்படம் பார்ப்பவர் தூக்கத்தை கெடுத்ததா? இல்லையா?
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு சிறுமியை நான்கு வடமாநில நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்து விடுகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைகள் செய்த அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். விசாரணை முடிவில் இதில் ஐந்தாவதாக அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு நபரும் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்த அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் சாய் பல்லவியின் தந்தை ஐந்தாவது நபராக கைது செய்யப்படுகிறார். தன் தந்தை நிரபராதி என்று உறுதியாக நம்பும் சாய்பல்லவி அவரை எப்படியாவது காப்பாற்ற சட்டரீதியாக போராடுகிறார். இந்தப் போராட்டத்தில் சாய்பல்லவி வெற்றி பெற்றாரா, இல்லையா? ஐந்தாவது குற்றவாளி யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக உருவாகியுள்ளது கார்கி திரைப்படம்.
இப்படி ஒரு அழுத்தமான கதையை அதன் அழுத்தம் குறையாத நேர்த்தியான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு பதைபதைப்பையும், சுவாரஸ்யத்தையும் கொடுத்து சமூகத்துக்கு அவசியமான ஒரு வெற்றி படமாக வெளியாகியுள்ளது கார்கி திரைப்படம். குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய திருப்பம் நிறைந்த கிளைமாக்ஸ் காட்சி மூலம் இந்த சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்தை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அழகாக பார்ப்பவர்கள் மனதுக்குள் ஊடுருவ செய்துள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.
அதேபோல் ஊடகங்கள் டிஆர்பி காக ஒரு செய்தியை பிரேக்கிங் நியூஸ் ஆக வெளியிடுவதால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் எதார்த்தமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்ற மிகப் பெரிய விழிப்புணர்வை இப்படம் மூலம் கொடுத்து தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்து உள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.
படம் ஆரம்பித்து சிறிது நேரம் மெதுவாக செல்லும் திரைக்கதை போகப்போக அழுத்தமும், திருப்பமும் நிறைந்த நேர்த்தியான திரைக்கதையால் வேகமெடுத்து இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு மிகப் பெரிய டிவிஸ்ட்டை கொடுத்து பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி படமும் பத்திரமாக கரை சேர்ந்துள்ளது. குறிப்பாக கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளும், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்துக்கு பிளஸ் ஆக மாறியுள்ளது.
ஒரு நடுத்தரக் குடும்பத்து பெண்ணாகவே தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளார் சாய் பல்லவி. தன் தந்தைக்காக காதலருடன் வக்காலத்து வாங்கும் இடத்திலும் சரி, போலீசிடம் பிடிபட்ட தந்தையிடம் காட்டும் பரிவிலும் சரி, கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் எடுக்கும் அதிரடி முடிவிலும் சரி, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். தந்தையை காப்பாற்ற துடிக்கும் பெண்ணாக நடித்திருக்கும் இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக அமைந்து நடுத்தர குடும்பத்து பெண்னை அப்படியே நம் கண்முன் பிரதிபலித்துள்ளது.
திக்குவாய் வக்கீலாக வரும் காளி வெங்கட் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து உள்ளார். இவரின் எதார்த்த நடிப்பும், அலட்டிக்கொள்ளாத உடல்மொழியும் காட்சிகளை எலிவேட் செய்து பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படாத வகையில் அமைந்துள்ளது. இவரின் இந்த யதார்த்த நடிப்பால் படத்தின் நாயகன் ஆகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருநங்கை நீதிபதியாக நடித்திருக்கும் கதாபாத்திரம் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள விதமும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமும் தியேட்டர்களை கைத்தட்டல் மூலம் அதிர செய்துள்ளது. இந்த மாதிரியான ஒரு முக்கியமான வழக்கில் திருநங்கையை நீதிபதியாக நியமித்து, அந்த கதாபாத்திரத்தை ஏற்று கொள்ளும்படியும் அமைத்து கைதட்டல் பெற்றுள்ளார் இயக்குநர். அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளார் திருநங்கை நடிகை. சாய்பல்லவியின் தந்தையாக வரும் ஆர்.எஸ் சிவாஜி தனது பரிதாபமான உடல் மொழியால் கவனம் பெற்றுள்ளார். அலட்டிக்கொள்ளாத இவரது நடிப்பும், கிளைமாக்ஸ் காட்சியில் உருகும் இடத்திலும் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ், சரவணன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி கௌரவ தோற்றத்தில் வந்து செல்கிறார்.
ஸ்ரையன்டி பிரேம் கிருஷ்ணா அக்கடுவின் ஒளிப்பதிவில் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. அதேபோல் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு இன்னொரு நாயகனாகவே மாரி எந்தெந்த காட்சிகளுக்கு எந்தெந்த உணர்வுகளை கடத்த முடியுமோ, அந்தந்த உணர்வுகளை அழகாக கடத்தி பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
சமூகத்துக்கு மிக அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான கதை இப்படத்தில் அமைந்ததற்காகவும், முக்கியமாக பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பத்திற்கு அவசியமானதாக இருப்பதற்காகவும், அதை நல்ல திருப்பங்களுடன் சுவாரசியமாக சொன்னதற்காகவும் இது தவிர்க்க முடியாத படமாக மாறியுள்ளது.
கார்கி - மிகவும் முக்கியமானவள்!