தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தாற்போல அவ்வப்போது சில சிறிய பட்ஜெட் படங்கள் சிறந்த தரத்துடன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெறும். அப்படியான சிறிய பட்ஜெட் படமாக தற்போது ரெட்ரோ ஹைஸ்ட் திரில்லர் ஜானரில் ரிலீசாகியுள்ள போத்தனூர் தபால் நிலையம் படம் எந்த அளவு வரவேற்பைப் பெற்றது?
1990களில் போத்தனூரில் இருக்கும் ஒரு தபால் நிலையம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போய் நாயகனின் அப்பாவும் தபால் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டருமான ஜெகன் கிரிஷ் வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். அந்தத் தபால் நிலையத்தில் பணத்தை ஒரு செல்வந்தர் டெபாசிட் செய்கிறார். அந்த வாரத்தின் இறுதிநாளில் ஏற்பட்ட எதிர்பாராத சூழலின் காரணமாக மொத்தம் ஆறு லட்ச ரூபாய் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நாயகனின் அப்பா தன் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். இவர் வீட்டிற்குச் செல்லும்போது வழியில் ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் அவரிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதையடுத்து திங்கட்கிழமை காலை 7 மணிக்குள் அந்த பணத்தை எப்படியாவது தபால் நிலையத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற சூழலில், அதற்காக நாயகன், நாயகி மற்றும் அவரது நண்பன் ஆகியோர் பணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். நாயகனின் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? அவரது தந்தையின் நிலை என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு டீஸண்டான திரில்லர் படத்தைக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் நாயகனும், இயக்குநருமான புதுமுகம் பிரவீன். படத்தின் கதையும் கதைக்களமும் 90களில் நடக்கும்படி அமைந்துள்ளதால் அதற்கேற்றார் போல் காட்சி அமைப்புகளையும், கதாபாத்திர அமைப்புகளையும் சிறப்பாக அமைத்து கவனம் பெற்றுள்ள இயக்குநர், திரைக்கதையின் சில இடங்களில் ஏனோ சற்றே தடுமாறி உள்ளார். கதைக்களத்துக்கும், காட்சியமைப்புகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குநர் காட்சிகளை நகர்த்துவதில் சற்று தடுமாறி ரசிகர்களைக் கொஞ்சம் சோதித்துள்ளார். கதாபாத்திர தேர்வு, ஒளிப்பதிவு, கலை இயக்கம் என மற்ற விஷயங்களில் கவனமாக இருந்த இயக்குநர் திரைக்கதையிலும் அதே கவனத்துடன் செயல்பட்டு இருந்தால் இது ஒரு குறிப்பிடத்தக்க திரில்லர் திரைப்படமாக மாற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரவீன் தன் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ் வழக்கமான நாயகியாக வந்து சென்றுள்ளார். இவர்களுடன் நண்பராக நடித்திருக்கும் வெங்கட் சுந்தர் ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க வைக்கவும் சில இடங்களில் சோதிக்கவும் செய்துள்ளார். சில இடங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு ரசிக்கவைக்கிறது. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தபால் நிலைய ஊழியர்கள், நாயகனின் உறவினர்கள் ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரத் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளது படத்துக்குச் சற்று சாதகமாக அமைந்துள்ளது.
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆகப் பார்க்கப்படுவது படத்தின் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் தான். 90 களின் சூழலை அப்படியே கண்முன் நிறுத்தி காட்சியமைப்புக்குச் சிறப்பான பங்களிப்பு கொடுத்து, நம்மை அந்த காலகட்டத்துக்கே கூட்டிச் சென்றுள்ளனர் எனலாம். தென்மா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்.
நேர்மை, நியாயம், தர்மம் என இருக்கும் நாயகன் தன்னை சுற்றி இருக்கும் சமூகத்தால் எப்படிப் பாதிக்கப்பட்டு பாதை மாறுகிறான் என்பதைச் சரியான கதையுடன் அதேசமயம் சற்று அயர்ச்சி ஏற்படக்கூடிய திரைக்கதையுடன் கொடுத்து நம்மைப் பார்க்க வைக்கிறது இந்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம்.
போத்தனூர் தபால் நிலையம் - கொஞ்சம் பொறுமை தேவை