
தமிழ் சினிமாவில் அவ்வப்போது நல்ல கருத்துக்களை தாங்கி சில படங்கள் வெளியாகும். அவை சமூகத்தில் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தி சில மாற்றங்களை நிகழ்த்துவதும் உண்டு. அந்த வகை படங்களின் வரிசையில் வெளியாகியுள்ளது இந்த பயணிகள் கவனிக்கவும் திரைப்படம். அப்படி என்ன கருத்து இந்த படத்தில் இருக்கிறது...?
வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளிகளாக வித்தார்த், லட்சுமி பிரியா தம்பதியினர் ஒரு மகன், மகளோடு வாழ்ந்து வருகின்றனர். அதில் இவர்கள் மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதனால் மாற்றுத்திறனாளியான விதார்த்துக்கு சரியான தூக்கம் இல்லாமல் போகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது அசந்து சீட்டிலேயே படுத்து உறங்கி விடுகிறார். இதைக் கண்ட அலட்டல் பேர்வழியான கருணாகரன் அவரை படமெடுத்து குடிபோதையில் உறங்குவதாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுகிறார். இதனால் ஊர் முழுவதும் விதார்த்துக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விதார்த் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? இறுதியில் கருணாகரனின் நிலை என்னவானது என்பதே படத்தின் மீதி கதை.
எதையும் தீர விசாரிக்காமல் சமூக வலைதளங்களில் நாம் விளையாட்டாக பார்வர்டு செய்யும் விஷயங்கள் எவ்வளவு வினையாக மாறுகிறது என்ற சமூக கருத்தை மிக எளிமையாக எந்த சினிமாத்தனமும் இன்றி அழகான ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் எஸ்.பி சக்திவேல். விக்ரிதி என்ற மலையாள படத்தின் ரீமேக்கான இப்படத்தை அதே எதார்த்தத்துடனும் எளிய மக்களுக்கு புரியும் வகையில் ஸ்மூத்தான ஃபீல் குட் மூவியாக உருவாக்கியுள்ளார் இயக்குநர். நம் கண்முன் தினமும் கடந்து போகும் மனிதர்களின் வாழ்வியலை அப்படியே தத்ரூபமாக காட்டி பார்ப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை கொடுத்துள்ள இயக்குநர் அதை சற்று விறுவிறுப்பாகவும் கொடுத்து இருந்திருக்கலாம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எந்த இடத்திலும் திருப்பங்கள் இல்லாமல் ஃபிளாட்டாகவே கடந்து சென்று முடிந்துள்ளது. திரைக்கதையில் இன்னும் சுவாரசியங்களை கூட்டி இருந்தால் இன்னும் கூட அதிகமாக இப்படம் கவனம் பெற்றிருக்கும்.
காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் பின்னிப் பெடல் எடுத்துள்ளார் நடிகர் விதார்த். படத்துக்கு படம் இவரின் நடிப்பு மெருகேற்றிக் கொண்டே செல்கிறது. தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு நியாயம் செய்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் வரிசையில் இணைந்துள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளி நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமவுலி தனக்கு கொடுத்த வேடத்திற்கு சிறப்பு கூட்டியுள்ளார். பாத்திரமறிந்து நடித்திருக்கும் இவரின் நடிப்பு அனுதாபத்தை கூட்டியுள்ளது. ஃபாரின் ரிட்டர்ன் அலட்டல் பேர்விழியாக நடித்திருக்கும் கருணாகரன் சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களுக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்வக்கோளாறு இளைஞரின் சுபாவங்களையும், குணாதிசயங்களையும் இயல்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவரது நண்பராக நடித்திருக்கும் நடிகர் சரித்திரன் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். கருணாகரனின் காதலியாக நடித்திருக்கும் மசூம் சங்கர் வழக்கமான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களான ஆர்எஸ் சிவாஜி, கவிதாலயா கிருஷ்ணன், ரேகா நாயர் உட்பட பலர் தங்களுக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
ஷமந்த் நாக்கின் பின்னணி இசை படத்திற்கு அனுதாபத்தை கூட்டியுள்ளது. எஸ் பாண்டி குமார் ஒளிப்பதிவில் இன்டீரியர் காட்சிகள் மற்றும் விதார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் கவித்துவமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மீடியா கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் சமூகத்துக்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை இப்படம் கூறியதற்காகவே கண்டிப்பாக பார்க்கலாம்.
பயணிகள் கவனிக்கவும் - கண்டிப்பாக கவனிக்க வேண்டும்!