'ஏ1' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் - இயக்குநர் ஜான்சன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. முதல் படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், அதே வழியில் தொடர்ந்து பயணிக்க நினைத்த இவர்களின் 'பாரிஸ் ஜெயராஜ்' அதே வரவேற்பை பெறுமா?
யூ-ட்யூபில் கானா பாடல் சேனல் நடத்தி வரும் வடசென்னை பையன் சந்தானம், சஷ்டிகா ராஜேந்திரனைக் காதலிக்கிறார். சந்தானத்தின் தந்தை இவர்களின் காதலைப் பிரிக்கிறார். பிறகு சந்தானத்துக்கும், நாயகி அனைகா சோதிக்கும் காதல் ஏற்படுகிறது. அந்தக் காதல் திருமணம் வரை செல்ல, அதையும் சந்தானத்தின் தந்தை பிரிக்க முயற்சிக்கிறார். ஆனால் இந்தமுறை காரணம் மிகவும் புதியது. அந்தக் காரணம் என்ன, சந்தானத்துக்கும் நாயகி அனைகா சோதிக்கும் திருமணம் நடந்ததா இல்லையா என்பதே 'பாரிஸ் ஜெயராஜ்' கதை.
கொஞ்சம் மிஸ்ஸானாலும் கலாச்சார காவலர்களின் எதிர்ப்பைப் பெறக்கூடிய கதைக் களத்தை முகம் சுளிக்க வைக்காத அளவில் நகைச்சுவையுடன் சாதுர்யமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜான்சன். கதைக் கருவில் புதுமையும், வசனங்களில் டைமிங்கையும், ரைமிங்கையும் வைத்து ரசிக்க வைத்துள்ளார். இருந்தும் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்து இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் வேகமெடுத்துள்ளது படம். இடைவேளை ட்விஸ்ட் மிகப்பெரிய ஆறுதல். ஒவ்வொரு காட்சியும் தனித்தனியே ரசிக்க வைத்தாலும் ஒரு கோர்வையாகக் காட்சிகளை ரசிக்க மனம் ஏனோ மறுக்கிறது. காரணம் பலவீனமான திரைக்கதை. கதாபாத்திரங்களின் வித்தியாசமான தன்மைகள் மற்றும் லோக்கலான பன்ச் வசனங்களில் கவனம் செலுத்திய இயக்குனர் ஜான்சன், திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கானா பாடல்களுடன் ட்ராவல் செய்யும் சந்தானம் எப்போதும்போல் பன்ச் காமெடிகள் போட்டு ரசிக்க வைத்துள்ளார். ஹீரோவாக இத்தனை படங்கள் தாண்டியும் இன்னும் நடிப்பில் வெரைட்டி காட்ட மறுக்கிறார். சீரியஸ் காட்சிகளில் கூட அவரது நடிப்பு இன்னும் நிறைவாக இல்லை. ஆனாலும் தனக்குத் தோதான கதைகளை அவர் புத்திசாலித்தனமாக தேர்வு செய்வதால் இதெல்லாம் மறக்கடிக்கப்பட்டு அவரது நடிப்பு ரசிக்கப்படுகிறது. நாயகி அனைகா சோதி அனுதாபம் ஏற்படும்படியான கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். சந்தானத்தின் அப்பாவாக வரும் நடிகர் மாருதி, படத்தின் ஆணிவேராக இருந்து காத்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதி முழுவதும் இவரே படத்தை தாங்கிப்பிடித்துள்ளார். இவர், சந்தானம், நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பின் உச்சம். மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் ஒரு டீமாக அலப்பறை செய்துள்ளனர். அதேபோல் மற்றொருபுறம் நடிகர் கணேஷ், லொள்ளுசபா சேசு ஆகியோரும் கலகலப்பு கூட்டியுள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் காட்சிகள் படத்திற்குப் பலம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் படம் முழுவதும் கானா பாடல்களின் ஆதிக்கம். ரோகேஷ், அசல் கொலார் பாடல் வரிகளுக்கு சென்னையின் லோக்கல் கானா இசையில் பாடல்களை உருவாகியுள்ள சந்தோஷ் நாராயணன், அதை இன்னும் ரசிக்கும்படி கொடுத்திருக்கலாம். அதேபோல் பின்னணி இசையிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது.
கொஞ்சம் கவனம் சிதறினாலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பக்கூடிய கதையை சிறப்பாக கையாண்ட விதத்துக்கும், இன்டர்வெல்லுக்குப் பிறகு வரும் ட்விஸ்ட்டை கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதற்குமாக ஒருமுறை ரசிக்கலாம்.