"நீ யாரா வேணும்னா இரு, ஆனா என்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு"
"நாம வாழுறதுக்கு நண்பன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு எதிரியும் முக்கியம்"
இவை சீமராஜாவில் சிவகார்த்திகேயன் (SK) பேசும் வசனங்களின் சாம்பிள். இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம், 'சீமராஜா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' வரிசையில் வெறும் காமெடி படமில்லை, அதுக்கும் மேல சிவகார்த்திகேயனை ஏற்றும் முயற்சியில் வந்திருக்கும் படமென்று.
திருநெல்வேலி பகுதியில், சிங்கம்பட்டி ஜமீனில் மன்னர் வம்சத்தில் இன்றைய ராஜா சீமராஜாவாக சிவகார்த்திகேயன். மன்னராட்சி ஒழிந்து அதிகாரங்கள் ஒழிக்கப்பட்ட சட்டம் வந்த பிறகு நிலத்தைப் பிரித்து ஊர்மக்களுக்கு கொடுத்துவிட்ட போதும் இன்னும் மக்களால் ராஜா என்று அழைக்கப்படும் நெப்போலியனின் மகனாக ஊரை (ரெண்டு கிராமங்கள்தான்) சுற்றி வருகிறார். ஸ்கூல் டீச்சர் சமந்தாவை காதல் செய்வது முழு நேர வேலை. இன்னொரு புறம் கறிக்கடை கண்ணன் (லால்) காத்தாடி கண்ணனாகி ஊரிலுள்ள ஏழை விவசாயிகளின் நிலங்களை ஆசை காட்டி வாங்கி ஏமாற்றி பணக்காரரானவர். தங்கள் வீரப் பரம்பரையின் பெருமையை உணர்ந்தாரா, வில்லனின் சதியை முறியடித்து விவசாய நிலங்களை காப்பாற்றினாரா, சமந்தாவை மணந்தாரா என்பதுதான் 'சீமராஜா'.
இயக்குனர் பொன்ராம் 'காமெடி' என்பதைத் தாண்டி அடுத்த கட்டமாக செல்ல முயன்றிருக்கும் படம், சிவகார்த்திகேயனை மாஸ் நடிகராக நிலைநாட்ட முயன்றிருக்கும் படம். பொன்ராமின் பலமான, இயல்பான கிராமத்துக் காமெடி என்பது இதில் கொஞ்சம் குறைவு. புதிதாக மன்னர் கால காட்சிகளை கையாண்டிருக்கிறார். கதையிலிருந்து திடீரென விலகிப்போகிறது என்பதைத் தவிர பெரிய குறையில்லாத படமாக்கல். பாகுபலியோடெல்லாம் ஒப்பிடக்கூடாது, இந்த அளவில் குறையில்லாத உழைப்பு. சிவகார்த்தியேனனின் பலம் அனைத்து தரப்பையும் ஈர்க்கும் நகைச்சுவை. இந்தப் படத்தில் அதுவும் குறைவாக இருக்கிறது. ஆனால் ஹீரோயிசம் அதிகம். அதையும் உறுத்தாமல் ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார். அங்கங்கே 'அண்ணாமலை' காலத்து ரஜினியை நினைவுபடுத்துகிறார். ட்ரைலர் வந்தபோது 'சிவகார்த்திகேயனுக்கு இது தேவையா?' என்றெல்லாம் கேள்விகள் வந்தன.வசனங்களும் சிவகார்த்திகேயனுக்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகளும் அவருக்கு அது தேவை என்பதை காட்டுகின்றன. அது முழுமையாக வொர்க்-அவுட் ஆகியிருக்கிறதா என்பது கேள்விக்குறி, ஓரளவு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
சமந்தா, அழகான சிலம்பாட்டக்காரியாக வருகிறார். சிலம்பத்துடன் சேர்த்து ரசிகர்கள் மனசையும் சுற்றுகிறார். சிம்ரனுக்கு இந்தப் பாத்திரம் தேவையா, இந்தப் பாத்திரத்துக்கு சிம்ரன் தேவையா என்பது போல அவரது பாத்திரம். சூரி சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ஆங்காங்கே சிரிப்பால் அதிர வைக்கிறார். சிக்ஸ் பேக் சூரி செம்ம, அவர் காட்டும் விறைப்பும் முறைப்பும், எங்கே அவரும் ஹீரோவாகி விடுவாரோ என்ற பயத்தை உண்டுசெய்கிறது நமக்கு. நெப்போலியன், லால் உள்பட அனைவரும் அவரவர் பாத்திரத்தில் ஓகே.
இமான் இசை வழக்கம்போலத்தான் என்றாலும் மூன்று பாடல்களில் ரசிக்க வைக்கிறது இமான்-யுகபாரதி கூட்டணி. பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. கலை இயக்குனரின் வேலை மன்னர் ஃபிளாஷ்பேக்கில் சிறப்பாக இருக்கிறது.
வளரியின் வரலாறு, சீமாராஜாவின் முன்னோர் கதை போன்ற விஷயங்களில் மெனக்கிட்டுள்ள பொன்ராம், ராமர் வேடத்தில் போய் லவ் பண்ணுவது, மாறுவேடத்தில் போய் சமந்தாவைப் பார்ப்பது போன்ற இடங்களில் சற்றே சறுக்குகிறார். காமெடிதான் என்றாலும் பார்த்ததையே பார்க்கும் சலிப்பு. தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இது அடுத்த லெவல் என்பதை வசனத்திலும் காட்சிகளிலும் மட்டுமல்லாமல் அடிப்படை கதை, கதையில் முக்கிய பிரச்சனை என்பதிலும் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். விவசாயத்தையும் தமிழையும் துணைக்கழைப்பது இப்போதைய கமர்ஷியல் படங்களின் வழக்கமாகிவிட்டது, இந்தப் படத்திலும் அது நடக்கிறது. சீமராஜா - வசூல் ராஜா, வலிமையான ராஜா அல்ல.