பல்வேறு அரசியல் காரணங்களால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த வடிவேலு நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். படத்தின் நாயகனாக ரிட்டர்ன் ஆகி இருக்கும் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தாரா?
குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கும் வேலராமமூர்த்தி, பைரவர் கோவிலுக்கு சென்று குழந்தை பாக்கியம் பெற வேண்டுகிறார். அப்பொழுது அங்கு வரும் சித்தர் வேலராமமூர்த்தியிடம் ஒரு நாயை பரிசளித்து இந்த நாயை நீங்கள் வைத்துக் கொண்டால் உங்களுக்கு சகல பாக்கியமும் கிடைக்கும் எனக் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். நாய் வந்த நேரம் வேலராமமூர்த்தி தம்பதிக்கு மகனாக வடிவேலு பிறக்கிறார். இதையடுத்து செல்வ செழிப்புடன் வளர்கிறது வடிவேலுவின் குடும்பம்.
அந்த நேரம் பார்த்து வீட்டில் வேலைக்காரனாக என்ட்ரி கொடுக்கும் ராவ் ரமேஷ் நாயை கடத்திச் சென்று மிகப்பெரிய செல்வந்தராக மாறிவிடுகிறார். இதையடுத்து வருடங்கள் கடக்க சமகாலத்தில் இருக்கும் வடிவேலு நாய்களை கிட்னாப் செய்து பணம் சம்பாதித்து பிழைப்பை நடத்துகிறார். ஒரு கட்டத்தில் தனது பிளாஷ்பேக் தெரிந்து தனக்கு சொந்தமான நாயைத் தேடி வடிவேலு அண்ட் டீம் ஹைதராபாத்துக்குச் செல்கிறது. போன இடத்தில் வடிவேலு தன் நாயை மீட்டாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
கரண்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர்களை புதிய கூட்டாளிகளாக இணைத்துக் கொண்டு வடிவேலு கம்பேக் கொடுத்து நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பழைய பார்முலாவில் உருவாகி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. கூட்டாளிகளும், கெட்டப்பும், கதையும் புதியதாக தென்பட்டாலும் திரைக்கதை என்னவோ அரதபழசாக அமைந்து பார்ப்பவர்களுக்கு அயற்சி கொடுத்துள்ளது. வடிவேலுவின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் நமக்கு பரவசத்தை கொடுத்தாலும், உடன் நடித்த நடிகர்களும் தன் பங்குக்கு அவரவர் வேலையை செவ்வனே செய்திருந்தாலும், காட்சிகளும் அதற்கான திரைக்கதையும் தற்போது உள்ள ட்ரெண்டிங்கில் இல்லாமல் போனது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருக்கிறது.
இருந்தும், ஆனந்தராஜ், வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆங்காங்கே சற்று நம்மை சிரிக்கவும் வைத்துள்ளது. ஆனால் அதை ரசிக்க நமக்கு அதிக பொறுமை தேவைப்படுகிறது. அதேபோல் இரண்டாம் பாதி படத்தில் வரும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் ஆங்காங்கே சற்று கிச்சு கிச்சு மூட்டி உள்ளார் வடிவேலு. ஆனால் அவையும் படத்தை காப்பாற்றி கரை சேர்க்க உதவி செய்ததா என்றால்? சற்று சந்தேகமே!. மற்றபடி வடிவேலுவின் கம் பேக், படத்தில் வரும் பாடல்கள் ஆகியவை சற்று பிரஷ்ஷாக அமைந்து ரசிகர்களுக்கு சற்று பரவசம் கொடுத்துள்ளது.
படத்தில் அரை டஜன் நடிகர்களுக்கு மேல் நடித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அவரவருக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து இருந்தாலும் அவர்களுக்கான ஸ்பேஸ் சரியாக அமையாததால் அவை ரசிக்க வைக்க சற்று மறுக்கிறது. அதேபோல் புதியதாக கூட்டணி அமைத்திருக்கும் இட்டீஸ் பிரசாந்த், சிவாங்கி தவிர்த்து ரெடீன் கிங்ஸ்லி மட்டும் பல இடங்களில் நம்மை சிரிப்பு மூட்டி காப்பாற்றியுள்ளார். அதே போல் உடன் நடித்த கே.பி.ஒய் பாலா, ராமர், சேசு, லொள்ளு சபா மாறன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், டைகர் கார்டன் தங்கதுரை உட்பட பல ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு எப்போதும் போல் தனது டிரேட்மார்க் ஆன நடிப்பை திகட்ட திகட்ட கொடுத்து ரசிகர்கள் போதும் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார். அதுவுமே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். ஒரு காமெடி படத்திற்கு என்ன தேவையோ அதற்கான பின்னணி இசையை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். தனக்கு கொடுத்த ஸ்பேசில் நிறைவாக வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு. வடிவேலு சம்பந்தப்பட்ட கிட்னாப் காட்சிகளை சிறப்பாக கையாண்டு உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு கம்பேக் கொடுத்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் எகிற வைத்த இயக்குநர் சுராஜ். அதே கம்பேக்கை திரைக்கதை காட்சிகளிலும் கொடுத்திருந்தால் இந்த படம் நன்றாக பேசப்பட்டிருக்கும்.
நாய் சேகர் - வெறும் வாய் சேகர்!