மிஷ்கின் - தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கி வைத்திருக்கும் படைப்பாளி. தேர்ந்தெடுக்கும் கதை, அதைச் சுற்றி பின்னப்படும் திரைக்கதை, அதை காட்சிப்படுத்தும் வித்தை இவற்றின் வாயிலாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்திய இயக்குனர். மிஷ்கின் படங்களுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே சமயம் கடைசியாக வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மிஷ்கின் முத்திரை இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்நிலையில் முதலில் சாந்தனு நடிப்பதாய் அறிவிக்கப்பட்டு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது சைக்கோ.
பல க்ரைம் படங்களை மிஷ்கின் கொடுத்திருந்தாலும் ஒரு சைக்கோ கொலைகாரன் களத்தை அவர் கையாள்வது இதுவே முதல் முறை. பெயரில், டீசரில் தெரியும் ஒற்றை வரிதான் கதை. இளம்பெண்களை கடத்தி அவர்கள் தலையை வெட்டி எடுத்து, உடலை மட்டும் பொது இடங்களில் போடும் ஒரு சைக்கோ கொலைகாரன். இவனிடம் மாட்டிக் கொண்ட தன் காதலியை மீட்கப் போராடும் கண் தெரியாத ஒரு இளைஞன். கொலைகாரனை பிடிக்க முயற்சி செய்யும் காவல்துறை. இவர்களை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது சைக்கோ.
ஒரு கொலையில் துவங்குகிறது படம். கொலை - போலீஸ் - காதல் என துண்டுத் துண்டாய் சின்ன சின்ன காட்சிகள் வரத்துவங்குகின்றன. இப்படிப்பட்ட காட்சிக் கோர்வைகள் மிஷ்கின் படத்தில் பெரும்பாலும் இடம்பெறாது. ஆனால் சைக்கோவில் முதல் பதினைந்து நிமிடங்கள் இதுபோன்ற காட்சியாலேயே நிறைந்திருக்கிறதே என்ற யோசனை எழும்போதே படத்தின் திருப்பம் நிகழ்கிறது. நாயகியை கடத்துகிறான் சைக்கோ கொலைகாரன். அதன் பின் மற்ற மிஷ்கின் படங்களைப் போல் நேர்கோட்டில் நகர்கிறது படம். சைக்கோ நாயகியை கொன்றானா, அவனை போலீஸ் பிடித்ததா இல்லை கண் தெரியாத நாயகன் பிடித்தானா என்பதை அடுத்த இரண்டு மணி நேரத்தில் சொல்கிறது சைக்கோ. (இது குழந்தைகள் பார்க்கக்கூடிய படமல்ல. பலவீனமான மனம் கொண்டவர்களுக்கும் உகந்ததல்ல.)
படத்தில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படவேண்டியது இளையராஜாவின் இசை. அது படத்தின் ஆகப்பெரும் சிறப்பம்சம். ட்ரெய்லரில் பீத்தோவனின் சிம்பனியை ஒலிக்க விட்டு, அதே காட்சிக்கு ராஜாவின் இசையை படத்தில் பார்க்கையில் எழும் உணர்வு அட்டகாசமான ஒன்று. அத்தகைய இசைமேதை எங்களிடமும் இருக்கிறான் என்பதுதான் மிஷ்கின் சொல்ல வருவதோ என்று தோன்றியது. 'நீங்க முடியுமா' பாடலின் சூழலில் உள்ள செயற்கைத்தனங்களையும் அந்த இசை மறக்கடித்து அதனோடு பயணிக்க செய்துவிடுகிறது. மிஷ்கினின் மற்ற படங்களில் இருக்கும் செய்நேர்த்தியும் தொழில்நுட்பத் தரமும் சைக்கோவிலும் தொடர்கிறது. குலுங்கி அழவேண்டிய காட்சியில் முகத்தை மூடி சமாளித்திருந்தாலும் கூட மற்ற எமோஷனலான காட்சிகளில் உதயநிதி சற்றே தவிக்கிறார். ஆனாலும் அவரது கேரியரில் சைக்கோ முக்கியமான படம். அதிதி, நித்யா மேனன் இருவரும் மிஷ்கினின் பாத்திரங்களாக உலவுகின்றனர். தன்வீரின் கேமரா மிஷ்கினின் பார்வையாக இருக்கிறது. இப்படி எல்லா அம்சங்களும் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு இயக்குனரின் பெயரை சொல்வது பலமென்றால் பலவீனமும் அதுவாகத்தான் இருக்கிறது.
மிஷ்கினின் துப்பறியும் படங்களின் சாயலில் நகரும் அந்த பகுதிகள் தான் படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக்குகின்றன. நாயகன் தன்னை நெருங்குகிறான் என்பதை வில்லன் உணரத் துவங்கும் தருணத்தில் வரும் இடைவேளையும் அந்த காட்சியும் இரண்டாம் பாதியின் மேல் முழு ஆர்வத்தையும் ஏற்றிவிடுகின்றன. நம்மை மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படவைப்பதும் ரசிக்கவைப்பதும் மிஷ்கினின் காட்சிமொழிதான். ஆனால் அது மட்டும் போதுமா? படத்தின் ஆதார மையமே நாயகன் நாயகிக்கு இடையேயான காதல்தான். அந்தக் காதல்தான் அடுத்தடுத்த சம்பவங்களை அரங்கேற்றுகிறது. சைக்கோ - நாயகி - நாயகன் மூவருக்கும் இடையே நிற்பதும் அந்த காதல்தான். இப்படி படத்தின் மிக மையச் சரடான அந்த காதல் எத்தனை ஆழமாக காட்டப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் படத்தில் அது மிகமிக மேலோட்டமாகவே காட்டப்பட்டுள்ளது. அந்த காதலின் அடர்த்தியை காட்ட ஒரே ஒரு பாடல் மட்டும் போதுமென்று மிஷ்கின் நினைத்து விட்டாரோ என்னவோ? அற்புதமான பாடலாகவே இருந்தாலும் கூட படத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது கொஞ்சம் சிறியதே.
பொதுவாக மிஷ்கின் படங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் மிடுக்காக, புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் கொலை நடந்த இடத்தை பார்வையிடுவதும், கொலையை பற்றி பேசுவதையும் தவிர்த்து காவல்துறைக்கு பெரிதாக வேலையில்லை. நாயகன் போலீஸ் இல்லை என்பதற்காக காவல்துறையை இத்தனை முக்கியமற்றா காட்ட வேண்டும்? வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குனர் ராம் மிடுக்காக, கூர்மையான பார்வையுடன் வலம் வருகிறார். ஆனால் அவரும் மேலே சொன்ன அதே வேலையைத்தான் ஒவ்வொரு கொலை நடந்தபின்னும் செய்கிறார். நுணுக்கமான கண்டுபிடிப்புகள் கூட வேண்டாம். எளிதாக புலனாயக்கூடிய சாத்தியங்கள் நிரம்பிய ஒரு கொலையை, அதுவும் ஒரு காவல்துறை ஆய்வாளரின் கொலையைக் கூட துப்பு துலக்க முடியாத நிலையில் காவல்துறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முடிச்சையும் நாயகனேதான் அவிழ்க்கிறான். இப்படியே படம் முடிந்துவிடுமோ என்று நினைக்கும் போதுதான் படத்தின் வேறொரு பரிமாணம் காட்டப்படுகிறது.
கொடூர கொலைகாரனாக காட்டப்பட்ட சைக்கோவின் கதை, அவனது இன்னொரு பக்கம் மெல்ல மெல்ல சொல்லப்படுகிறது. உண்மையில் மிஷ்கின் முத்திரை பரவுவது இந்தப் பகுதியில் இருந்துதான். ஒரு மனிதனுக்கு அன்பு மறுக்கப்படும் போதே அவன் மனிதத்தன்மையை இழக்கிறான் என்பதும் மிருகத்தன்மை நிரம்பிய நிலையிலும் அவன் மேல் காட்டப்படும் அன்பு அவனை மீண்டும் மனிதமாக்கும் என்பதுமே சைக்கோ சொல்லும் அன்பின் கதை. ஆனால் இந்த கரிசனம், மற்ற உயிர்களுக்கு அவன் ஆபத்தை விளைவிப்பான் என்று தெரிந்த நிலையிலும் அவன் மேல் காட்டப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
குழப்பமான நேரங்களில் பாட்டு பாடும் இன்ஸ்பெக்டர், வீல்சேரில் சுற்றும் காவல்துறை அதிகாரி, கண் தெரியாத இசைக் கலைஞன் போன்று வித்தியாசப்படுத்திக் காட்டி ரசிக்கவைக்கும் அம்சங்களுடன் பாத்திரங்கள் வெரைட்டியாக உருவாக்கப்பட்ட அளவிற்கு ஆழமாக உருவாக்கப்படவில்லை. இத்தனை குழப்பங்கள் இருந்தாலும் மிஷ்கினின் மேதமை படத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றது. குறிப்பாக அந்த சைக்கோவின் கதையில், அவனுக்கான முடிவில். மிஷ்கினின் திரைமொழி கேள்விகளுக்கு அப்பாற்பட்டு தலைசிறந்த ஒன்று. ஆனால் அவரது மிகச்சிறந்த எழுத்துக்களை அவரது திரைமொழியில் காண்பதுவே அட்டகாசமான அனுபவம். அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு என பல படங்களை முன்வைக்கலாம். அவரது மற்ற படங்களிலும் இந்த திரைமொழி இன்னும் கூட செழுமையாக இருந்தாலும், அதன் மூலம் சொல்லப்படும் திரை எழுத்து நிறைவாக இல்லாத போது, ஒரு முழுமையற்ற அனுபவமே நமக்கு எஞ்சுகிறது. சைக்கோவும் அத்தகைய ஒரு அனுபவமே!