'க்ரௌட் ஃபன்டிங்' என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டபோது கிட்டத்தட்ட அதே சமயத்திலேயே கேள்விப்பட்ட பெயர் லூசியா. கன்னட சினிமாவில் ஒரு புயலாக வந்த படம், புதிய பாதையை திறந்த படம் லூசியா. அந்தப் படத்தை இயக்கிய பவன் குமார் கன்னட சினிமாவின் முக்கிய இயக்குனர். அவர் கன்னடத்தில் இயக்கிய மற்றொரு நல்ல படமான 'யூ-டர்ன்' அவராலேயே தமிழ் மற்றும் தெலுங்கில் (தெலுங்கு மற்றும் தமிழ் என்று சொல்வதுதான் சரி) உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. அவரே இயக்கியது மிக நல்ல முடிவு. 'லூசியா' தமிழில் 'எனக்குள் ஒருவன்' ஆன அனுபவத்தால் இந்த முடிவாக இருக்கலாம். கன்னடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தமிழில் ஏற்படுத்துகிறதா யூ-டர்ன்?
ஒரு படத்தின் கதை, மிக நீண்ட வரலாற்றிலிருந்து உருவாகலாம், பல வருட நிகழ்வுகளிலிருந்து வரலாம், ஒரு சம்பவத்திலிருந்தும் வரலாம். நாம் தினம் தினம் செய்யும் ஒரு அலட்சியமான தவறிலிருந்து உருவாகியிருக்கிறது இந்தப் படத்தின் கதை.ஒரு ஆங்கில பத்திரிகையில் பயிற்சி பத்திரிகையாளராக (intern) சேரும் சமந்தா, அனைவரின் கவனத்தையும் பெறுமளவுக்கு ஒரு அசைன்மென்ட் செய்யவேண்டுமென இறங்குகிறார். அவர் பேட்டியெடுக்கவேண்டுமென பட்டியலிட்டவர்களெல்லாம் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். போலீஸ் சமந்தாவை சந்தேகிக்க, சமந்தா யாரை சந்தேகிக்கிறார், கொலைகளின் உண்மைப் பின்னணி என்ன என்று பல டர்ன்கள் அடித்து சுவாரஸ்யமாக சொல்லுவதே இந்த யூ-டர்ன்.
முதல் நொடியிலிருந்தே கதைக்குள் பயணப்படும் திரைக்கதை இடையிடையே மெதுவாகப் பயணித்தாலும் எங்குமே 'கமர்ஷியல்' என்ற பெயரில் 'டேக் டைவர்ஷன்' எடுக்காமல் கதைக்குள்ளேயே பயணிப்பது மிகப் பெரிய புத்துணர்வை தருகிறது. காதல், எமோஷன்ஸ் என அனைத்துமே கதையின் மையத்துக்குத் தேவையானவை. அதனாலேயே அனைத்தையும் ரசிக்க முடிகிறது. த்ரில்லர் என்பதால் மிரட்டிக் கொண்டே இருக்காமல், சற்றும் எதிர்பாராத சமயத்தில் நடக்கும் ஓரிரு அதிர்வுகளே போதும் நமக்கு என்னும் அளவுக்கு அழுத்தமாக இருக்கின்றன. தமிழில் ஒரு நல்வரவுதான் இயக்குனர் பவன்குமாரின் வரவு. இயக்குனரின் நேர்பார்வைக்கு உதவியாக இருக்கின்றன நிகித் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவும் சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பும். இந்த இரண்டும் சஸ்பென்ஸ் த்ரில்லரில் ஒரு புதிய அனுபவத்தைத் தருகின்றன. இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு வரிசையில் கடைசியாகத்தான் நிற்கிறது பூர்ண சந்திர தேஜஸ்வியின் இசை.
சமந்தா தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மிகச் சிறந்த படம், அதற்கேற்ற சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறார். அழகையும் அச்சத்தையும் அனாயசமாக அள்ளித் தெளிக்கிறார். பொறுப்புகள் வரும்போது திறமைகள் வெளிப்படுமென்பதை நிரூபித்திருக்கிறார் சமந்தா. சமந்தா - ராகுல் ரவீந்திரன்... இந்த 'மாஸ்கோவின் காவிரி' ஜோடி இந்தப் படத்தில் ரசிக்க வைக்கிறார்கள். நிகழ் கால காதல் உரையாடல்களை படமாகியிருப்பதற்கு 'ஹார்டின்' ரியாக்ஷன் போடலாம். ஆதி, பெர்ஃபெக்ட் போலீஸ். 'ஈரம்' உள்ள போலீசாக சிறப்பாக நடித்திருக்கிறார். 'ஆடுகளம்' நரேன், 'சித்திரம் பேசுதடி' நரேன் இருவரும் தங்கள் பாத்திரங்களை எளிதாகக் கையாண்டிருக்கிறார்கள். பூமிகா, தன்னைத் தேடிப் பிடித்தது சரியென நிரூபித்திருக்கிறார். இப்படி நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்க, சமயங்களில் சரியாகப் பொருந்தாத வாயசைப்புதான் பின்னிழுக்கிறது. தெலுங்கு வசனங்களுக்கு தமிழில் வாயசைப்பது டப்பிங் படம் பார்த்த உணர்வு. மேலும் சென்னையை அறிந்தவர்களுக்கு 'இது சென்னையில்லை' என்ற உணர்வு படத்துக்கும் நமக்கும் இடையே நிற்கிறது.
இந்தக் குறைகளைத் தாண்டியும், கதையை அணுகிய விதத்திலும், தேவையில்லாத விஷயங்களை சேர்க்காமல் இருந்ததாலும், த்ரில்லிங் உணர்வை நம்மை அடைய வைத்ததாலும் நம்மை சுழற்றி ரசிக்கவைக்கிறது இந்த யூ-டர்ன். இந்தப் படத்தைப் பார்த்தால் போக்குவரத்து விதிகளை நம் போக்கில் மீறிச்செல்லும் நாம் ஒரு நிமிடம் வெட்கப்படுவோம், திருந்துவோமா என்பது கேள்விக்குறியே.