அழகிய தீயே, மொழி, அபியும் நானும் உள்ளிட்ட தரமான கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் ஜீ -5 OTTயில் வெளியாகியுள்ளது 'மலேசியா டு அம்னீசியா' படம். எப்படி இருக்கிறது ராதா மோகனின் OTT என்ட்ரி?
நாயகன் வைபவ் பெங்களூரில் வசிக்கும் தன் காதலியை பார்க்க விமானத்தில் செல்கிறார். இதற்காக மனைவி வாணி போஜனிடம் தான் மலேசியா செல்வதாகப் பொய் சொல்லிவிட்டு பெங்களூருக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே இவர் செல்வதாக சொல்லிவைத்த மலேசியா விமானம் வானிலே திடீரென்று மாயமாகி விடுகிறது. அதில் பயணித்த பயணிகளின் நிலை என்ன ஆனது என்றே தெரியாத சூழல் உருவாக இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த வைபவ் தனக்கு அம்னீசியா ஏற்பட்டு பழைய நினைவுகள் மறந்துவிட்டதாக நண்பர் கருணாகரன் மூலம் தன் குடும்பத்துக்குத் தெரிவித்து சென்னை திரும்பிவிடுகிறார். மலேசியா சென்ற வைபவ் எப்படி உயிரோடு வந்தார், அவருக்கு உண்மையில் அம்னீசியா ஏற்பட்டதா என வாணி போஜனின் மாமா எம்.எஸ்.பாஸ்கருக்கு சந்தேகம் ஏற்பட அவர் இந்த கேஸை துப்பறிய ஆரம்பிக்கிறார். இதையடுத்து அம்னீசியா ஏற்பட்ட வைபவுக்கு நினைவு திரும்பியதா, உண்மையில் என்ன நடந்தது என எம்.எஸ்.பாஸ்கர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதே 'மலேசியா டு அம்னீசியா' படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதும் சின்ன சின்ன காமெடிகள் மூலம் உதட்டோரம் ஒரு சின்ன சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும்படியான காட்சிகள் அமைப்பதை தன் பாணியாக வைத்துள்ள ராதா மோகன் இந்தப் படத்திலும் அதே அஸ்திரத்தை பயன்படுத்தி இருக்கிறார். படம் ஆரம்பித்து முதல் அரை மணிநேரம் மெதுவாக நகர்ந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக படம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. எப்போதும்போல் சின்னச் சின்ன வசன காமெடிகள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்துள்ள ராதாமோகன் ஏனோ திரைக்கதையில் தொய்வு ஏற்பட விட்டுவிட்டார். எம்.எஸ்.பாஸ்கர், வைபவ், கருணாகரன் வரும் காட்சிகள் படத்துக்கு ப்ளஸ் ஆக அமைந்து கலகலப்பை வெகுவாக கூடியுள்ளது. ஆனால் இவர்கள் அல்லாத மற்ற காட்சிகள் பெரும்பாலும் அயர்ச்சி தருகிறது. பொதுவாக ராதா மோகன் படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். அதற்கேற்றாற்போல் கதைக்கருவும் அழுத்தமாக அமைந்து நல்ல படம் பார்த்த நிறைவை தரும். ஆனால் இந்தப் படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக அமைந்திருந்தாலும் மற்ற விஷயங்கள் அனைத்துமே மிஸ்ஸிங்! இதனால் ஒரு முழு படம் பார்த்த நிறைவு ஏற்பட மனம் மறுக்கிறது.
இந்தப் படத்திற்காக நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக மாறியிருக்கும் வைபவ் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை தனக்கு செட்டாகும்படி மாற்றி நடித்தாரா அல்லது கதையையே தனக்கு ஏறாற்போல் இயக்குனரிடம் உருவாக்க சொல்லி நடித்தாரா என்ற எண்ணம் படம் பார்ப்பவர் மனதில் எழுகிறது. எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சொதப்பாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் வைபவ். இவர், எம்.எஸ் பாஸ்கர், கருணாகரன் வரும் காட்சிகளில் நன்றாக காமெடி செய்து ஸ்கோர் செய்துள்ளார். படத்துக்கு இன்னொரு ப்ளஸ் வாணி போஜனின் நடிப்பு! அதிகம் ஸ்கோப்பில்லாத மனைவி வேடம் ஏற்ற அவர் அந்த வேடத்துக்கு தன் நடிப்பால் உயிர் ஊட்டியுள்ளார். இவரது அனுதாபம் ஏற்படும்படியான நடிப்பு செண்டிமெண்ட் காட்சிகளை காப்பாற்றியுள்ளது.
வைபவ்வின் நண்பராக வரும் கருணாகரன் கதையோட்டத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளார். வழக்கமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் இவரின் நடிப்பு வழக்கமாக அமைந்து ரசிக்கவைத்துள்ளது. எப்போதும்போல் தன் பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர். துப்பறியும் ஆசாமியாக வரும் இவரின் பாத்திரம் பல இடங்களில் ரசிக்கவைத்தாலும் சில இடங்களில் சற்றே கோபம் வர வைக்கிறது. படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்படியான இவரின் கதாபாத்திரம் இன்னும் கூட எனர்ஜி கொடுக்கும்படி சற்று உற்சாகமாக அமைந்திருக்கலாம். மற்றபடி இவரின் டைமிங் வசனங்கள் பல இடங்களில் சோடைபோகவில்லை. குறிப்பாக கிளைமாக்சில் இவர் கொடுக்கும் ட்விஸ்ட் அருமை. வாட்ச்மேனாக வரும் மயில்சாமி சர்ப்ரைஸ் ப்ளஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றிய மூத்த நடிகை சச்சு கதாபாத்திரம் 'மொழி' படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது.
மகேஷ் முத்துசாமியின் தெளிவான அழகான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது. 'இசை சுனாமி' பிரேம் ஜியின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. ஒரு ஒன் லைன் கதையை வைத்துக்கொண்டு இந்த அளவு திரைக்கதை அமைத்து ரசிக்கவைத்ததற்கு முதலில் ராதா கோகனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்ளலாம். இருந்தும், மொழி, அபியும் நானும், காற்றின் மொழி போன்று மனதுக்கு நெருக்கமான தரமான படைப்புகளை கொடுத்த ராதா மோகன் இந்த படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே சொல்ல தோன்றுகிறது.
மலேசியா டு அம்னீசியா - கேசுவல் காமெடி!