இந்தியாவில் பல ஆண்டு காலமாகவே நடந்து கொண்டிருக்கும் பிஞ்சு குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ஜோதி. அதுவும் கர்ப்பிணி பெண் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய அதிர்ச்சிகரமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை ஈர்த்ததா..?
ராட்சசன் வில்லன் சரவணன், டூலெட் புகழ் ஷீலா தம்பதியினர் ஒரு தனி வீட்டில் வசிக்கின்றனர். டாக்டராக இருக்கும் சரவணன் ஒரு அவசர சர்ஜரிக்காக இரவு வெளியூர் செல்கிறார். சரவணன் சென்றவுடன் அவர் வீட்டுக்குள் நுழையும் ஒரு மர்ம நபர் ஷீலாவின் வயிற்றை கிழித்து பிஞ்சு குழந்தையை எடுத்து சென்றுவிடுகிறார். இந்த விஷயம் போலீசான நாயகன் வெற்றிக்கு தெரியவர அவர் குற்றவாளி யார் என்பதை துப்பு துலக்க களத்தில் குதிக்கிறார். இறுதியில் குழந்தையை கடத்தி சென்ற குற்றவாளியை வெற்றி கண்டுபிடித்து தண்டித்தாரா, இல்லையா? என்பதே ஜோதி படத்தின் மீதி கதை.
சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான ஒரு கருத்தை கதைக் கருவாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா அதை இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் பாணியில் உருவாக்கி ரசிக்க வைத்துள்ளார். கதை சிறியதாகவே இருந்தாலும் அதற்கான காரண காரணிகள், பின்புலம், அதன் வரலாற்று பின்னணி என நன்றாக கிரவுண்ட் ஒர்க் செய்து காட்சிகளை அதன்மூலம் நன்றாக மெருகேற்றி அழுத்தமான விழிப்புணர்வை இப்படம் மூலம் கொடுத்துள்ளார் இயக்குனர். பல்வேறு அரசு மருத்துவமனையில் கிடக்கும் சாமானிய மக்களின் குழந்தைகளை எப்படி இந்த மெடிக்கல் மாபியாக்கள் குறிவைத்து கடத்துகிறார்கள் என்பதை தெளிவான விளக்கங்களுடன் காட்டி பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்படியான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்துள்ளார். படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்து, போகப்போக வேகம் எடுக்கிறது. அடுத்தடுத்து நடக்கக்கூடிய சம்பவங்களை திருப்பம் நிறைந்ததாக அமைத்து ஒரு டீசன்ட் திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா. இருந்தும் காட்சிகளை படமாக்கியதில் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். சில இடங்களில் நடிகர்களும், கதை நகரும் சூழலும் சற்று சீரியல் பார்த்த உணர்வை தந்துள்ளது.
நாயகன் வெற்றி ஜிவி படத்திற்கு பிறகு ஒரு நல்ல பிராமிசிங் ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகளில் பதற்றம் இல்லாத ஒரு போலீஸ் அதிகாரியின் மிடுக்கான தோற்றத்துடன் கூடிய முகபாவனைகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஷீலா தனக்கு கொடுத்த வேடத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு நியாயம் செய்து அனுதாபத்தையும், கைதட்டல்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் கைதட்டல்கள் பெறுகிறார்.
வெற்றியின் மனைவியாக வரும் கிரிஷா குரூப் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். வெற்றியுடன் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் குமரவேல் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளார். குறிப்பாக இன்வெஸ்டிகேட்டிவ் காட்சிகளில் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி மீண்டும் ஒரு முறை கவனம் பெற்றுள்ளார். ராட்சசன் வில்லன் சரவணன் ஆரம்பத்தில் அனுதாபம் கூட்டி பிற்பகுதியில் அமைதியான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார்.
செசி ஜெயா ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசை படத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. குறிப்பாக இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் அளவாக இசையை கொடுத்து அசத்தியுள்ளார்.
இச்சமூகத்தில் பல ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய குற்றத்தை மிக இயல்பாகவும் அதே சமயம் விழிப்புணர்வு ஏற்படும்படியாகவும் இப்படத்தை உருவாக்கியதற்கே ஜோதியை தரிசிக்கலாம்.
ஜோதி - புரட்சிகரமானவள்!