கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற ஆறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி படமாக வெளியாகியுள்ளது 'கசட தபற' திரைப்படம். என்னதான் இது ஆந்தாலஜி வகை படமாக இருந்தாலும் அதில் ஒரு சிறிய மாற்றம் செய்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி என்ன மாற்றம் அது..?
'கவசம்' கதையில், ஒரு மருந்து கம்பெனியில் வேலைசெய்யும் பிரேம்ஜியும் ரெஜினாவும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை ரெஜினாவின் தந்தை சதி செய்து பிரிக்க நினைக்கிறார். அவருக்கு 'சதியாடல்' கதையில் வரும் ரவுடி சம்பத் உதவுகிறார். இவரது மகன் சாந்தனு, நீதிபதியின் மகள் சாந்தினியை காதலிக்கிறார். இந்தக் காதலை சேர்த்து வைக்க நினைக்கும் ரவுடி சம்பத்தை 'தப்பாட்டம்' கதையில் வரும் என்கவுண்டர் போலீஸ் சந்தீப் கிஷன் போட்டுத் தள்ளுகிறார். இதையடுத்து சம்பத்தின் தாதா அந்தஸ்தை சாந்தனு கைப்பற்றுகிறார். இவருக்கு உதவிசெய்து 'பந்தயம்' கதையில் வரும் ஹரிஷ் கல்யாண் நண்பராகிறார். ஹரிஷ் கல்யாணின் நண்பர் அரவிந்த் ஆகாஷ் பணத்தை விலையுயர்ந்த வைரங்களாக மாற்ற சாந்தனு உதவி செய்கிறார். அப்போது சந்தீப் கிஷனின் என்கவுண்டரில் இருந்து இருவரும் தப்பிக்கிறார்கள். இதையடுத்து நண்பர் அரவிந்த் ஆகாஷ் இறந்துவிட அவரது குடும்பத்தில் தத்துப்பிள்ளையாக மாறுகிறார் ஹரிஷ் கல்யாண்.
அவர் ஊரோரம் ஒரு இடம் வாங்கச் சென்ற இடத்தில் 'அறம்பற்ற' கதையில் வரும் சத்துணவு ஆயாவாக இருக்கும் விஜயலட்சுமியை சந்திக்கிறார். அப்போது விஷம் கலந்த ஜூஸை ஹரிஷ் கல்யாணும், விஜயலட்சுமியின் மகனும், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களும் அருந்துகின்றனர். இதையடுத்து விஜயலட்சுமியின் மகன் உடல்நிலை மோசமாகிறது. அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிறுவனுக்கு பிரேம்ஜி, வெங்கட் பிரபு வேலைசெய்யும் மருந்து கம்பெனியிலிருந்து மருந்து வாங்கி கொடுக்கிறார் விஜயலட்சுமி. அது போலி மருந்து என்பதால் அதை உட்கொண்ட விஜயலட்சுமி மகனும், சிறுவர்களும் மேலும் பாதிக்கப்பட்டு சில சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். இதன் காரணமான 'அக்கற' கதையில் வரும் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டு, அவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதையடுத்து அவர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தாரா, இல்லையா? ஹரிஷ் கல்யாண் உடல்நிலை என்னவானது? பிரேம்ஜி ரெஜினா காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா? விஜயலட்சுமி மகன் பிழைத்தாரா இல்லையா? ஷாந்தனு நிலை என்னவானது? சந்தீப் கிஷன் என்கவுண்டரில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
இப்படியான ஒரு குழப்பமான கதையைத் தெளிவான திரைக்கதை மூலம் புரிய வைத்ததற்கே இயக்குநர் சிம்புதேவனை பாராட்டலாம். இந்தக் கதைகளுக்கு ரசிக்கும்படியான திரைக்கதை அமைய இவர் போட்டிருக்கும் கடுமையான உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒவ்வொரு கதைக்குள்ளும் மற்றொரு கதையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக நுழைத்து ரசிக்கவைத்துள்ளார். பொதுவாக ஆந்தாலஜி வகை படங்களில் விதவிதமான கதைகளை வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அமைந்து ரசிக்கவைக்கும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பெரும்பாலும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் இந்தப் படத்திலோ ஆறு கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டாலும், இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைவதுபோல் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்து ரசிக்கவைத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதை ஒரு முழுநீள தரமான படமாக எடுக்க வாய்ப்பு இருந்தும், அதே கதையை வேறுவிதமாக சிந்தித்து ஆறு பகுதிகளாக மாற்றி நம் மூளைக்கும் வேலைகொடுப்பதுபோல் திரைக்கதை அமைத்து சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்துள்ளார் சிம்பு தேவன். இருந்தும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
பிரேம்ஜி, ரெஜினா, யூகி சேது, சம்பத், ஷாந்தனு, சாந்தினி, சென்றாயன், சந்தீப் கிஷன், சுப்பு பஞ்சு, பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் கல்யாண், அரவிந்த் ஆகாஷ், எடிட்டர் ஆண்டனி, பிரிதிவி ராஜன், வெங்கட் பிரபு, விஜயலட்சுமி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தாலும் ஒவ்வொருவரும் மனதில் பதியும்படி நடித்து படத்துக்கு வலு சேர்த்துள்ளனர். இதில் வித்தியாசமாக ஹரிஷ் கல்யாண் ஒரு நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்திலும், விஜயலட்சுமி அவலமான தாய் கதாபாத்திரத்திலும், வெங்கட் பிரபு அப்பாவி கைதி கதாபாத்திரத்திலும், பிரேம்ஜி வெகுளி லவ்வர் பாய் கதாபாத்திரத்திலும் நடித்து படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நட்சத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
படத்தில் ஆறு கதைகள் இருப்பதால், இதில் நிறைய டெக்னீஷியன்களும் வேலை செய்துள்ளனர். இதில் இசையமைப்பாளர்களாக யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் ஆகியோர் பின்னணி இசையில் கலக்கியுள்ளனர். மேலும், யுவனின் டூயட் பாடல் ஈர்த்துள்ளது. அதேபோல் விஜய் மில்டன், எம்.எஸ். பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர். கதிர், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு கதையும் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சம்பவத்தின் இரு வேறு கோணங்களையும் துல்லியமாக காட்சிப்படுத்தி, அதனால் ஏற்படும் விளைவுகள் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நம்மை எப்படி அதில் சம்பந்தப்படுத்துகிறது என்கிற விஞ்ஞான விளக்கத்தை ரசிக்கும்படியும், தெளிவாகவும், எளிமையாகவும் புரியும்படி அமைந்துள்ளது இந்த 'கசட தபற' திரைப்படம்.
கசட தபற - தெளிவான விஞ்ஞான விளக்கம்!