1996 - 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்போது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என கலவரங்கள் நடந்தன. இந்தப் பின்னணியில் பொடியன்குளம் கிராமத்தைப் பற்றின கதையாக 'கர்ண'னை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
இரண்டு கிராமங்களுக்கிடையேயான பிரச்சனையில் பொடியன்குளம் கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படாமலும், பேருந்து நிறுத்தம் அமைக்கப்படாமலும் இருக்கிறது. அதனால் அந்தப்பக்கம் செல்லும் லாரி போன்ற பிற வாகனங்களைத்தான் பொடியன்குளம் மக்கள் பயன்படுத்தும் சூழல். இந்தத் தகராறில், எதிர்பாராத சூழலில் பேருந்து தாக்கப்படுகிறது. அந்தப் பிரச்சனையைக் கிராம மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பதே மீதிக்கதை.
தனுஷ், லால், லட்சுமி பிரியா, யோகி பாபு இவர்களெல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள் அல்லது பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் கிளிஷே ஆகிவிட்டது. அவ்வளவு சிறந்த நடிப்பு. தலைப்பு உட்பட மொத்த படமுமே தனுஷ் தோளில்... அசால்ட்டாக செய்திருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின்போது அவரது உடல்மொழியும் முகமும் அபாரம். மற்றபடி நட்ராஜ் (நட்டி), ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள் என அனைவருமே அந்தந்த பாத்திரமாகவே தெரிகிறார்கள். அதுவே சிறப்பும் கூட. ஊர்மக்களையும் நடிக்க வைத்திருப்பது, கதையோடு நம்மை ஒன்றிவிடச் செய்கிறது. அவர்களும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.
தலையில்லா புத்தர், தலை வரையப்படாத ஓவியம், மனித தலைக்குப் பதிலாகக் களிமண் சிற்ப முகத்துடன் வரும் சிறுமி, கழுதை - யானை - குதிரை எனக் குறியீடுகளால் புது அழகியலைப் படைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அவை அடிக்கடி வருவது நெருடல். இப்போதெல்லாம் சில காட்சிகளிலேயே நம் மக்கள் புரிந்துகொள்கின்றனர். அதுபோல இறுதியில் வரும் கலவர காட்சியும் அவ்வளவு நீளமாக இருந்திருக்க வேண்டாமோ எனத் தோன்றுகிறது.
"எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் ஏறி மிதிக்கறான்", "அவன் பஸ்ச அடிச்சதுக்காக அடிக்கல, நிமிந்து பாத்ததுக்காக அடிச்சான்", "நாம அழுதது போதும், வா ஆடலாம்" என வசனங்களில் அடித்தள மக்களின் கோபத்தைப் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர்.
கதைக்களத்தின் வெப்பத்தையும் குளுமையையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியதில் வெற்றி பெறுகிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணின் இசையைத் தவிர்த்துவிட்டு கர்ணனைப் பார்க்க முடியாது. சில மாஸான காட்சிகளில் சிறிய இசைத் துணுக்குகளை ஒலிக்கவிடுகிறார். ஆனால் அது உங்களுக்குச் சிலிர்ப்பைத் தராமல் போகாது. முதல் பாதியில் கிராமிய இசையில் பாடல்களைத் தந்துவிட்டு, இரண்டாம் பாதியில் மக்களின் போராட்டத்திற்கு நவீன இசையில் பாடல் அமைத்திருப்பது சந்தோஷ் நாராயணின் இசை அரசியல். சமகால இளைஞர்களுக்குத் தெரியாத களம், பொது பார்வையாளர்களுக்கு நெருடலான கதை, இரண்டையும் மறக்கடித்து படைப்பை ரசிக்க வைத்திருக்கிறது செல்வாவின் படத்தொகுப்பு. சில காட்சிகளில் லிப் சிங்க் தவறுவதையும், முதல் பாதியின் நீளத்தையும் கவனித்திருக்கலாம்.
1990களில் நடந்த சமூக பிரச்சனைகளை வைத்தே இரண்டாவது படத்தையும் இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்திற்கு வந்த சில ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது புரிகிறது. இதிலும் சில சமரசங்கள் செய்திருந்தாலும், சற்று உரக்க ஒலித்திருக்கிறது இயக்குநரின் குரல்.
காட்டுப்பேச்சிகளின் வலிகளையும், கர்ணன்களின் போராட்டங்களையும், பெயர்களில் வரலாற்றைச் சுமக்கும் துரியோதனன்களின் தன்மானத்தையும் புரிந்துகொள்ளத் தைரியமாகச் செல்லலாம் பொடியன்குளத்திற்கு.