இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தார். அவரது உடல் 72 மணி நேரத்தில் இந்தியா வந்து சேர்ந்தது. அதேபோல் பிழைப்புக்காக வெளிநாடு சென்ற சாமான்ய மனிதன் அங்கு இறந்துவிட்டால் அவர் உடலை சொந்த ஊர் கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும்...?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நீரோட்டம் பார்த்துக்கொண்டே, சமூகம் சார்ந்து செயல்படும் விஜய் சேதுபதி, மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காகப் போராடுகிறார். அவரது நேர்மையான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷும் போராட்டக் களத்தில் குதிக்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஊருக்காக உழைத்தால் மட்டும் போதாது தன் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரை வேலைக்காகாக துபாய்க்கு அனுப்பி வைக்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் நடந்த விபத்தில் விஜய் சேதுபதி இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக அவர் 10 மாதங்கள் வரை போராடுகிறார். இறுதியில் விஜய் சேதுபதியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
எப்போதும் போல் சார்மிங்கான நடிப்பால் ஈர்த்துள்ளார் விஜய் சேதுபதி. கதை முழுவதும் அவர் வந்தாலும் சில காட்சிகளே நடித்துவிட்டு சென்றிருக்கிறார். அதையும் நிறைவாகவே செய்துள்ளார். இப்படி, ஒரு நாயகனாக வெற்றிகரமாக இருக்கும்போதே கதையைக் கருத்தில் கொண்டு நடிப்பது அவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டுகிறது. அச்சு அசல் கணவரை இழந்த கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய்சேதுபதி இப்படத்தின் நாயகனாக இருந்தாலும் படம் முழுவதும் ஒற்றைப் பெண் சிங்கமாக வலம் வந்து படத்தின் நாயகனாகவே மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த அளவிற்கு 'அரியநாச்சி' என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கதையிலும் சரி, அதில் தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரத்தையும் சரி, சிறப்பானதை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்ற கதாநாயகிகள் பட்டியலில் இணைந்து விட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர்களை தவிர படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ரங்கராஜ் மாவட்ட கலெக்டராக வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே நடித்துள்ளார். காமெடி கலந்த குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள முனீஸ்காந்த் மற்றும் நமோ நாராயணன் அவரவர் பங்கை சிறப்பாகச் செய்துள்ளனர். மற்றபடி நடிகர்கள் வேல ராமமூர்த்தி, பூ ராமு, டி சிவா, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி ஸ்ரீ கவனம் ஈர்த்துள்ளார்.
வேலைக்காக வளைகுடா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கு இறந்துவிட்டால் அவர்கள் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களையும், உடலை கொண்டுவர பிடிக்கும் கால அவகாசத்தையும் மிகவும் ஆழமாக விவரிக்கிறது படம். அதை எளிமையான மனிதர்களின் வாழ்வியலோடு கலந்து சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் விருமாண்டி. ஒரு கணவனை இழந்த அபலை பெண்ணின் தனிமனித போராட்டத்தை அப்படியே உடனிருந்து பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். படத்தின் மிகப் பெரிய பலமாக சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் அமைந்துள்ளன. ஆனாலும் திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருக்கலாம். அதோடு எடிட்டர் சிவநாதீஸ்வரன் படத்தின் நீளத்தையும் சற்று கருத்தில் கொண்டு குறைத்திருக்கலாம்.
க/பெ ரணசிங்கம் - பரிதவிப்பு!