கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'கவலுதாரி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வந்துள்ளது 'கபடதாரி' படம். சிபிராஜ் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'சத்யா' படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ள 'கபடதாரி' அதே கவனம் பெற்றதா?
ட்ராஃபிக் போலீசாகப் பணிபுரியும் சிபிராஜுக்கு எப்படியாவது க்ரைம் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. அதற்கு அவரது மேலதிகாரி முட்டுக்கட்டை போடுகிறார். இப்படி சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட ஒரு குழியில் மூன்று எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அந்த கேஸை க்ரைம் போலீஸ் சரியாக துப்பறியாததால் டிராஃபிக் போலீசான சிபிராஜ் அதை அன்-அஃபிஷியலாக தன் கையிலெடுக்கிறார். அந்த வழக்கை துப்பறியும்போது ட்ராஃபிக் போலீஸ் சிபி எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, அதனால் அவருக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து அவர் தப்பித்தாரா, வழக்கை வெற்றிகரமாகத் துப்பறிந்தாரா இல்லையா என்பதே 'கபடதாரி'.
கதைக்களம் பழக்கப்பட்டதாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை புதிதாக, வலுவாக இருக்கிறது. த்ரில்லர் படங்களுக்கே உரித்தான திருப்புமுனைகள் சிறப்பாக அமைந்துள்ளன. காட்சிக்குக் காட்சி அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாதபடி சிறப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அதேபோல் வின்டேஜ் பிளாஷ் பேக் காட்சிகள் சரியான கோர்வையில் ரசிக்கும்படி அமைந்துள்ளன. மூலப் படத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அழுத்தமான காட்சிகளை கையாண்டு சுவாரசியமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரதீப். இருந்தும் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் நாயகியை பயன்படுத்திய விதத்தை இன்னும் கூட கூடுதல் கவனத்தோடு கையாண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிபிராஜுக்கு ஒரு சிறந்த படமாக இது அமைந்துள்ளது. அவருக்கு சக்ஸஸ்தான். தன் பாத்திரத்தை நிறைவாகவே செய்துள்ளார். சின்ன சின்ன முகபாவனைகளிலும் நல்ல முன்னேற்றம்! நாயகி நந்திதா ஸ்வேதா பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறார். அவரது கதாபாத்திரமும் அப்படியே. நாசரும், ஜெயப்ரகாஷும் படத்திற்கு இரண்டு தூண்களாக இருந்து படத்தை தாங்கிப் பிடித்துள்ளார்கள். அவர்களின் கதாபாத்திரங்களும் அழுத்தமானதாக அமைந்துள்ளது திரைக்கதைக்கு வலுசேர்த்துள்ளது. இவர்களின் நேர்த்தியான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
திரைக்கதைக்குப் பிறகு இந்தப் படத்தின் மற்றுமொரு ஹீரோவாக சைமன்.கே கிங்கின் பின்னணி இசை அமைந்துள்ளது. படத்தில் முழுநீள பாடல்கள் இல்லையென்றாலும் காட்சிக்குக் காட்சி தனது அதிரவைக்கும் பின்னணி இசையால் உயிரூட்டியுள்ளார். பல இடங்களில் படம் வேகமெடுக்க இசையும் ஒரு காரணம். ராசாமதியின் ஒளிப்பதிவில் வின்டேஜ் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சிறப்பு.
'கபடதாரி' - கவனம் பெறும்!