மயிலாடுதுறையில் லோக்கல் சேனல் நடத்தும் உள்ளூர் செலபிரிட்டி ஜீவா. தொகுதி எம்.எல்.ஏவை விட இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். இதனாலேயே எம்.எல்.ஏவுக்கு இவர் மீது வன்மம். ஒரு கட்டத்தில் ஜீவாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்யும் எம்.எல்.ஏ, சென்னையில் இருந்து அதற்காக வருணை வரவழைக்கிறார். வந்த இடத்தில் திடீர் ட்விஸ்ட்டாக, ஜீவாவின் தங்கைக்கு உதவி ஜீவாவின் நட்புக்குப் பாத்திரமாகிவிடுகிறார் வருண். இவர் அவருக்கு உதவ, அவர் உயிரை இவர் காப்பாற்ற, இறுதியில் யார் யாருக்கு எதிரி, யார் யாருக்கு வில்லன் என்பதுதான் இயக்குனர் ரத்னசிவாவின் 'சீறு'.
தமிழில் இது போல ஒரு நூறு படங்களாவது வந்திருக்கும். அந்த டெம்ப்லேட்டில் ஒரு மாஸ் மசாலா திரைப்படம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் ரத்னசிவா. ஒரு மாஸ் ஹீரோவுக்கான பில்ட்-அப்போடு தொடங்கும் படம் சற்றே பயமூட்டி, ஜீவா - வருண் மோதல் பகுதி தொடங்கும்போது பயத்தை போக்குகிறது, சுவாரசியம் கூடுகிறது. அடுத்தடுத்த சிறிய திருப்பங்கள் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. இரண்டாம் பாதியில் ஒரு ஃபிளாஷ்பேக், முடிவில் ஒரு ஃபைட் என தண்டவாளத்திலிருந்து இறங்காமல் செல்லும் படத்தில் வரும் சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளும் சில புதிய காட்சிகளும் சுவாரசியம் தருகின்றன. ஆனால், படத்தின் பெரும்பகுதி நாம் பார்த்துப்பழகிய எளிதில் கணிக்கக்கூடிய காட்சிகளாக இருப்பது படத்தின் பலவீனம். அதையும் தாண்டி, சண்டைக்காட்சி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவரும் முயற்சியில் ஒரு சாராரை கவர்ந்து வெற்றியும் பெற்றிருக்கிறார் ரத்னசிவா.
என்னதான் மாஸ் படமாக இருந்தாலும் சண்டைக்கட்சிகளில் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மை இருந்திருக்கவேண்டும். பிற பில்ட்-அப்புகளும் அளவுக்கு மிஞ்சியே இருக்கின்றன. ஜீவாவின் முதல், முக்கிய எதிரியாக இருந்த எம்.எல்.ஏ, ஒரு கட்டத்தில் காணாமலேயே போய்விடுகிறார். அவருக்கும் ஜீவாவுக்குமான பிரச்னையும் முழுமையான தாக்கத்தை உண்டாக்கும் வகையில் சொல்லப்படவில்லை. சண்டை, செண்டிமெண்ட், ஃப்ளாஷ்பேக் என எல்லாவற்றிலும் மிகைப்படுத்தல் மிகுந்திருக்கிறது. கையில் கிடைத்ததையெல்லாம் ஜீவா உடைத்து அடிக்கும்போது 'கொஞ்சம் ஓவராத்தான் போகுதோ' என்று நம் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வில்லன்கள் மாறுவது படத்தின் பயணத்தை பாதிக்கிறது. இதையெல்லாம் தாண்டி ரசிக்கத்தக்க சில காட்சிகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஜீவா, இப்படிப்பட்ட ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கு எவ்வளவு உழைப்பு, நாயகத்தன்மைக்கான மெனக்கெடல் தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நவ்தீப், சென்னையின் முக்கிய வழக்கறிஞராக, பலம் வாய்ந்தவராக, சிறப்பாக நடித்திருந்தாலும் அத்தனை பில்ட்-அப்புகளை நம்புவது கடினமாக இருக்கிறது. 'வேல்ஸ்' படங்களின் வழக்கமான நடிகரான வருண், வில்லனாக விறைப்பாக முறைக்கிறார். மென்உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டிய இடங்களில் சற்று தடுமாறுகிறார். நாயகி ரியா சுமன், நம் அனுதாபத்தை பெறுகிறார். எந்த வித முக்கியத்துவமும் இல்லாத பாத்திரத்தில் வந்து போகிறார். காயத்ரி, படத்தின் எமோஷனல் பங்களிப்பாளர். அண்ணன் பாசத்தில் அசரடிக்கிறார். சதீஷின் காமெடி அரிதாக சிரிக்கவைக்கிறது. 'பிக்பாஸ்' போன்ற நிகழ்கால ட்ரெண்டிங் விஷயங்களையே பெரும்பாலும் நம்பி காமெடி செய்திருக்கிறார்கள். அது ஆங்காங்கே வேலை செய்கிறது.
இப்படி ஒரு கமர்ஷியல் படத்துக்கு இசையமைப்பது இமானுக்கு எத்தனை சுலபம்? ஏற்கனவே கேட்டது போல இருந்தாலும் 'நல்லாத்தானே இருக்கு' என்று சொல்ல வைக்கின்றது பின்னணி இசை. 'செவ்வந்தியே' பாடல் சுகமான சுமையாக மனதுக்குள் இறங்குகிறது. காட்சிகள் சீறுகின்றவோ இல்லையோ பிரசன்னகுமாரின் கேமரா சீறுகிறது. படத்தை இரண்டு மணிநேரத்துக்குள் பொருத்தி, பெரிதாக போரடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டுள்ளார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ்.
ரத்னசிவா, நாயகனாக ஜீவாவை வைத்து ஒரு மாஸ் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த 'மாஸ்', திரைக்கதையாக இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். அந்த மாஸைத் தாங்கி சரியாகக் கையாள ஜீவாவும் இன்னும் கொஞ்சம் அனுபவப்பட்ட வேண்டும்.