காளி - விமர்சனம்
அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு அம்மா, மகன், ஒரு மாடு முட்டுவது, ஒரு பாம்பு சீறுவது போன்று கனவுகள் வருகிறது. இந்த கனவு ஏன் அடிக்கடி வருகிறது என்று குழப்பத்தில் இருக்கும் விஜய் ஆண்டனியின் தாயருக்கு கிட்னி செயலிழந்து விடுகிறது. பின்னர் தன் அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக முடிவெடுத்த விஜய் ஆண்டனிக்கு இவர் தன் அம்மா இல்லை என்றும் அவருக்கு தன் கிட்னியை கொடுக்கமுடியாது என்ற உண்மை தன் வளர்ப்பு தந்தை மூலம் தெரியவருகிறது. இதனால் தனக்கு அடிக்கடி வரும் கனவுக்கும், தன் பெற்ற தாய்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணி தன் அம்மாவை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி இந்தியா செல்கிறார். இந்தியா வந்த விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை யோகிபாபு உதவியுடன் தேடிச் செல்கிறார். விஜய் ஆண்டனி, தன் தந்தையைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் 'காளி'.
இவர்கள் அப்பாவை தேடிச் சென்ற கிராமத்தில் உள்ள ஊர்த் தலைவரான மதுசூதனன், திருடனான நாசர், ஆகிய இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு இவர்களின் கதையை கேட்கிறார். முடிவில் விஜய் ஆண்டனியின் அப்பா யார்..? விஜய் ஆண்டனியின் அம்மா யார்...? விஜய் ஆண்டனியின் கனவுக்கு விடை கிடைத்ததா...? என்பதே படத்தின் மீதி கதை.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு நான்கு கெட்டப்புகள். ஆனால் நான்கு கெட்டப்புகளிலும் நமக்கு விஜய் ஆண்டனிதான் தெரிகிறார். அமைதியான பேச்சு, தீர்க்கமான பார்வை, எதற்கும் அதிர்ந்து வெடிக்காத தன்மை எல்லாம் நான், சலீம், பிச்சைக்காரன் வரைக்கும் ஓகே. அடுத்தடுத்து அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமே விஜய் ஆண்டனி? சித்த மருத்துவராக வரும் அஞ்சலி கொடுத்த வேலையை அவரது பாணியில் ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஆனாலும், அங்காடித் தெரு அஞ்சலிக்கு இது குறைவுதான். இன்னொரு நாயகியாக வரும் சுனைனா சிறிது நேரம் வந்தாலும் மனதில் பதிகிறார். இன்னொரு நாயகி அம்ரிதா கொடுத்த கதாபாத்திரத்தை செய்துள்ளார். மற்றுமொரு நாயகியாக வரும் ஷில்பா மஞ்சுநாத் முகபாவனைகள் மட்டுமல்லாமல் தன் உடல் உழைப்பையும் கொடுத்து நன்றாகவே நடித்துள்ளார். அச்சு அசலான துடுக்கான கிராமத்து பெண்ணாகவே மாறி ரசிக்க வைத்துள்ளார். இவர் வரும் பாடல் காட்சி அருமை. யோகி பாபு காமெடி காட்சிகளில் அவ்வப்போது கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். மற்றபடி நாசர், மதுசூதனன், வேல ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் எப்போதும் போல் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒரு கனவில் ஆரம்பிக்கும் படம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கி பின்னர் ஏற்கனவே பார்த்துப் பழகிப்போன காட்சிகளால் நகர்த்தியுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. அப்பாவாக நினைத்து ஒவ்வொருவரிடமும் கேட்கும் ஃப்ளாஷ்பேக்கிலும் நாசர், மதுசூதனன், ஜெயபிரகாஷ் என அவர்களது இளமை தோற்றத்தில் விஜய் ஆண்டனியே வரும் புதிய யுக்தியை கடைபிடித்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் கிருத்திகா. ஆனால், அத்தனையிலும் விஜய் ஆண்டனிதான் தெரிகிறார். படத்தில் நான்கு கெட்டப்புகளில் வரும் விஜய் ஆண்டனிக்கு நான்கு கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய கிருத்திகா, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி தன் முதல் படமான 'வணக்கம் சென்னை' படத்தைக் காட்டிலும் இப்படத்தின் கதையில் நன்றாக முதிர்ச்சி காட்டியுள்ளார். சாதி வேறுபாடுகளை சித்தரித்திருக்கிறார்கள், ஆனால் அழுத்தமே இல்லாமல்.
விஜய் ஆண்டனியின் இசையில் 'அரும்பே' பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமை. பின்னணி இசையும் கடந்த சில படங்களை விட சிறப்பாக இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு காலகட்டம், இடம் ஆகிய வித்தியாசங்களை நன்றாகப் பிரித்துக் காட்டியுள்ளது. படம் வெற்றியோ தோல்வியோ, விஜய் ஆண்டனிக்கு கதைத் தேர்வில் ஒரு நல்ல பெயர் இருந்தது. வித்தியாசமாக இருக்கும், தனக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பார், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் இருக்காது ஆகிய நல்ல விஷயங்கள், எமன், அண்ணாமலை, காளி என கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
'காளி' - விஜய் ஆண்டனி சற்று நிதானித்து யோசிக்க வேண்டிய நேரத்தைக் குறிக்கிறது.