ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு படத்தில் நடித்துள்ளார் ஜீவி பிரகாஷ். யூனிக்கான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லவந்ததைச் சிறப்பாகவே சொல்லியிருக்கிறது இந்த செல்ஃபி.
அப்பாவின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் ஜீவி பிரகாஷுக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் பார்ட் டைமாக சம்பாதிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்காக பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் சீட் வாங்கித் தரும் புரோக்கர் வேலையை தன் நண்பர்களுடன் இணைந்து செய்கிறார். அப்படி சீட் வாங்கித் தரும் போது ஏற்படும் ஒரு பிரச்சனையில் தன் நண்பர்களுடன் இணைந்து சிக்கிக்கொள்கிறார் ஜீவி பிரகாஷ். இதனால் ஜீவியின் நண்பன் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அவருக்கு கல்லூரி தரப்பிலிருந்தும் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் இருந்து ஜீவி பிரகாஷ் மீண்டாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையைத் திறம்படக் கையாண்டு அதை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் மதிமாறன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி இல்லாதவாறு மிகவும் இயல்பான காட்சி அமைப்புகள் மூலம் படத்தை வேகமாக நகர்த்தி ரசிக்கும்படி கொடுத்துள்ளார். கதைக்களம் கல்லூரி என்பதால் அதற்கு ஏற்றவாறு அதிகமான ஷாட்களை பயன்படுத்தி அதன் மூலம் வேகமாகத் திரைக்கதை அமைத்து அயர்ச்சி ஏற்படாதவாறு படத்தை நகர்த்தியுள்ளார். படம் ஆரம்பித்து சிறிது நேரம் வரை சற்று ஸ்லோவாக நகர்ந்து பின் வேகம் எடுத்து இறுதியில் ஸ்மூத்தாக முடிந்துள்ளது. சமூகத்தில் உள்ள பெற்றோருக்கும், மாணவருக்கும் தேவையான ஒரு கருத்தைக் கையில் எடுத்து, அதை எந்தளவுக்கு நேர்த்தியாகச் சொல்ல முடியுமோ அந்த அளவு அதற்கு நியாயம் செய்துள்ளார் இயக்குநர்.
ஜெயப்பிரகாஷ், வாகை சந்திரசேகர் இடையேயான காட்சிகள் நெகிழ்ச்சியால் கண்களைக் கலங்க வைக்கின்றன. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவரது கதாபாத்திரம் படத்திற்கு எந்த ஒரு பாதகமும் செய்யவில்லை, உதவியும் செய்யவில்லை.
பக்காவான ஒரு கார்ப்பரேட் வில்லனாக ஜொலித்துள்ளார் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு மிகப்பெரிய சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தரும் மாபியா கும்பலின் தலைவன் குணாதிசயங்கள் எப்படி இருக்குமோ அதை அப்படியே தத்ரூபமாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இவரின் கதாபாத்திரமே படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வேகத்தைக் கூட்டியுள்ளது. இவருக்கு நன்றாக டஃப் கொடுத்து நடித்துள்ளார் ஜீவி பிரகாஷ். அதேபோல் இவர்களுடன் தன் அனுபவ நடிப்பால் மிளிர்கிறார் நடிகர் சங்கிலி முருகன்.
ஜீவி பிரகாஷின் நண்பனாக நடித்திருக்கும் குணாநிதி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டு நடித்துள்ளார். துடுக்கான இளைஞனாக வரும் அவர் பரபரப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் பாதியிலேயே தடாலடியாக மறைந்து விடுகிறார். ஜீவி பிரகாஷின் தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் நடிப்பால் பார்வையாளர்களைக் கலங்க வைத்துள்ளார். வழக்கமான சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டைகர் கார்டன் தங்கதுரை காமெடி மட்டுமல்லாது சீரியஸான நேரத்திலும் சிறப்பாக நடித்து கவனம் பெறுகிறார்.
ஜீவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை படத்திற்கு வேகம் கூட்டியுள்ளது. பாடல்களைப் பார்க்கும் பொழுது சூரரைப்போற்று, அசுரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜீவியா இந்த படத்திற்குப் பாடல்கள் போட்டுள்ளார்? என்று கேள்வி எழ வைக்கிறது. அந்த அளவிற்கு பாடல்கள் சுமார் ரகம். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவில் கல்லூரி மற்றும் நண்பர்கள் சார்ந்த காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுவது இளையராஜாவின் படத்தொகுப்பு. படத்தில் நிறைய ஷாட்கள் இருந்தாலும் அதைச் சரியான இடங்களில் அளவாகப் புகுத்தி, கத்திரியை ஷார்ப்பாக பயன்படுத்திப் படத்தின் வேகத்தைக் கூட்டி கவனம் பெற்றுள்ளார். திரைக்கதைக்குப் பிறகு படத்தின் இன்னொரு நாயகனாகப் படத்தின் எடிட்டிங் அமைந்துள்ளது.
படத்தின் கதையும், கதைக் களமும் புதியதாக இருப்பதாலும். அது சமூகத்திற்கு அவசியமான ஒன்றாக இருப்பதாலும், இப்படம் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
செல்ஃபி - வெட்ட வெளிச்சம்!