ஒரு உப்பளம், ப்ரோக்கன் பிரிஜ் என்றழைக்கப்படும் உடைந்த பாலம், கடற்கரை... இவற்றை இவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்த இவரால்தான் முடியும், அல்லது இப்போதுள்ள இயக்குனர்களில் இவர் மட்டும்தான் இவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்துகிறார். இடங்களை மட்டுமல்ல, நாயகிகளை, நாயகர்களை இவரது படத்தில் பார்க்கும்போது, வேறு விதமாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார்கள். கவிதையான வசனங்கள், வாய்ஸ்-ஓவர் மூலம் சொல்லப்படும் கதை, மயக்கும் அழகுத்தமிழ் பாடல்கள், அசத்தும் காதல், மெக்கானிக்கல் என்ஜினியரிங் ஹீரோ, கெட்ட வார்த்தைகள், திடீரென ஒரு பயணம், அதனால் மாறும் வாழ்க்கை... என இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு, அவரே உருவாக்கிக்கொண்ட தனி அடையாளங்கள் உண்டு. 'GVM சார்' என்று அவரை கொண்டாடும் ரசிகர் கூட்டமும் உண்டு. தமிழ் சினிமா இயக்குனர்களில், தங்களுக்கென தனி திரைமொழி கொண்ட சில இயக்குனர்களில் கெளதம் ஒருவர். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் தனுஷ் ஒருவர். இருவரும் கைகோர்த்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரசிகர்களுக்கு என்ன விதமான அனுபவத்தை கொடுக்கிறது?
இந்த முறை ஹீரோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கவில்லை, படிக்க நினைத்த அவரை கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிக்கவைத்துவிட்டார் தந்தை. இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் ரகுவின் (தனுஷ்) கல்லூரியில் ஒரு திரைப்பட ஷூட்டிங் நடக்கிறது. அந்தப் படத்தின் நாயகி லேகா (மேகா ஆகாஷ்). மந்திரவாதியால் கடத்தப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட இளவரசி போல ஏதோ ஒரு சோகத்துடன் தோன்றும் பேரழகியான மேகாவிடம் காதல் வயப்படுகிறார் தனுஷ். மேகா, ஆதரவற்ற தன்னை வளர்த்து ஆளாக்கிய வில்லன் செந்தில் வீராசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், கட்டாயத்தில் நடிக்கிறார். அவரை பொள்ளாச்சியில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் தனுஷ். பிரச்னை தேடி வருகிறது, பிரிகிறார்கள். இன்னொரு புறம், தனுஷின் அண்ணன் சசிக்குமார் இளம் வயதிலேயே தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். அவரது பிரிவின் வருத்தம் எப்போதும் தனுஷுக்கு உண்டு. தனுஷை பிரிந்து சென்ற மேகா, அண்ணன் சசிக்குமார் இருவரும் ஒரே ஊரில், ஒரே பிரச்னையில் இருப்பது திடீரென ஒரு நாள் தெரிய வர, என்ன செய்தார் தனுஷ் என்பதுதான் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.
ஒரு துப்பாக்கியின் தோட்டா தன்னை நோக்கி பாய்ந்து வரும் வேளையில், தன் கடந்த கால வாழ்க்கையை அசைபோடும் தனுஷின் பார்வை, வாய்ஸ்-ஓவருடன் தொடங்கும் படம், கதை எப்படி விரியும் என்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது. தொடர்ந்து, அழகான காட்சிகள், நாயகி, தனுஷ், என படமாக்கப்பட்டு சில வருடங்கள் கடந்தும் ஃப்ரெஷ் ஃபீலிங் கொடுக்கின்றன காட்சிகள். தினமும் ஒரு ட்ரெண்ட் மாறும் இந்தக் காலத்தில் ஏற்கனவே வெளியாகி ஆண்டுக்கணக்கில் நின்று விளையாடிய பாடல்களும் இசையும் காட்சிகளாகவும் வசீகரிக்கின்றன. தொடக்க நேர வசனங்களில் கெளதம் மேனன் பாணியான சின்னச் சின்ன அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன. தனுஷ் - மேகா இடையே விறுவிறுவென வேகமெடுக்கும் காதலும் பெருக்கெடுக்கும் முத்தங்களும் நம்மை சற்று ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால், நம் இந்த உணர்வுகள் தொடர்கின்றனவா?
முத்தங்களிலும், அணைப்புகளிலும் மட்டும் முன்னேறும் காதல், வாய்ஸ்- ஓவரில் மட்டும் சொல்லப்படும் அண்ணன் தம்பி பாசம் ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அயற்சியைத்தான் உண்டாக்குகின்றன. படமெங்கும் நம்மை நோக்கி பாயும் வாய்ஸ்-ஓவர் ஒரு கட்டத்தில் அலர்ஜி ஆவது உண்மை. இத்தனை படங்களில் ரசிக்க வைத்த ஒரு அம்சம், அதீத பயன்பாட்டால் வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில், "போதும் தனுஷ், போதும் கெளதம், போதும்" என்று சொல்ல வைக்கிறது. முன், பின் என மாறி மாறி நான்-லீனியர் முறையில் தொகுக்கப்பட்டும், சென்னை- பொள்ளாச்சி-மும்பை என இடங்கள் மாறினாலும், படம் நகராமல் அதே இடத்தில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது. காரணம், பலவீனமான திரைக்கதை மற்றும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தாத காட்சிகள், சம்பவங்கள் மற்றும் கௌதமின் மனிதர்கள்.
தனுஷ், செம்ம ஸ்டைலாக, இளமையாக இருக்கிறார். அவருக்கான உடைகள் மிக அழகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தன் பாத்திரத்தில் மிக சிறப்பாகவே நடித்துமுள்ளார். மேகா ஆகாஷ், அழகான இளவரசி. ஆனால், ஆங்காங்கே என்ன செய்வதென தெரியாமல் நிற்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறார். வில்லனாக வரும் செந்தில் வீராசாமி சிறப்பான நடிப்பால், நம் முழு வெறுப்பையும் சம்பாதிக்கிறார். சசிக்குமார், ஒரே ஒரு சண்டைக் காட்சி தவிர மற்ற இடங்களில் புதிதாகத் தெரிகிறார். ஆனாலும், வழக்கமான சத்தமில்லாமல், ஆங்கிலம் கலந்து, நகர தொனியில் அவர் பேசும்போது, அவரை வேறு விதமாகப் பார்த்துப்பழகிய மனதுக்கு 'ஏதோ இடிக்குதே' என்று தோன்றுகிறது. சுனைனா, தனுஷின் அழகான அன்பான சீனியராக வந்து துணை நிற்கிறார். வேல ராமமூர்த்தி என்ற அனுபவம் நிறைந்த காளையை அடக்கி ஒரு அமைதியான பாத்திரத்தில் அடைந்துவிட்டார் கெளதம், பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.
தர்புகா சிவாவின் பாடல்களும் இசையும் படத்தையும் நம்மையும் காப்பாற்றுகின்றன. மிகச் சிறப்பான பாடல்கள், அதற்கேற்ற, ஆனால் சற்றே சமரசம் செய்து கொள்ளப்பட்ட படமாக்கல், இரண்டும் நமக்கு பெரிய ஆசுவாசம். தாமரை, மதன் கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகள், அழகு. ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்ஸா என யார் ஒளிப்பதிவு செய்தாலும் கௌதமின் கண்களின் வழியே பார்ப்பது எல்லாவற்றையும் அழகாகக் காட்டுகிறது. 'மறுவார்த்தை' பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயங்கள் தெரிந்தாலும் இருப்பதை இத்தனை அழகாகக் காட்டியது சிறப்பு. ஆனால், இத்தனை நேர்மறை அம்சங்களையும் ஏற்படுத்திய, ஒருங்கிணைத்த கௌதம், முக்கியமான அம்சமான திரைக்கதையில் குறை வைத்துவிட்டார்.
படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் குறித்து சொல்லும் ஒரு வசனம்... "ஒரு கதை இருக்கும்னு தெரியும், ஆனா இப்படி இருக்கும்னு நினைக்கல". படம் நகர நகர நமக்கும் இப்படித்தான் தோன்றுகிறது.