ஒரு படம் சரி இல்லை என்றால், உப்புமா படமாக தெரிந்தால், 'ச்சீ இது கன்னட படம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க' என்று ரசிகர்கள் ஒரு காலத்தில் கமெண்ட் செய்வார்கள். அப்படி மொக்க படம் என்றாலே கன்னட படம் என்று சொன்ன காலம் போய் தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு தரமான படங்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றது கன்னட சினிமா. குறிப்பாக கே ஜி எஃப் படம் கொடுத்த வெற்றி கன்னட சினிமா மேல் ஒரு மரியாதையை உண்டாக்கியது. அந்த வகையில் தற்போது கன்னட சினிமாவின் தரத்தை மேலும் உயர்த்தி பிடிக்கும் முயற்சியாக உருவாகி வெளியாகியுள்ள படம் 777 சார்லி. கே ஜி எஃப் படம் கன்னட திரையுலகிற்கு கொண்டுவந்த நல்லபெயரை இப்படம் தக்கவைத்து கொண்டதா, இல்லையா?
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத இளைஞராக வரும் ரக்ஷித் ஷெட்டி தனக்கென்று ஒரு உறவு, நட்பு என எதுவும் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என தனியே வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இவர் வீட்டிற்கு ஒரு நாய் அடைக்கலம் தேடி வருகிறது. முதலில் அந்த நாயை வெறுக்கும் ரக்ஷித் ஷெட்டி பிறகு அந்த நாயுடன் நெருங்கி பழகி விடுகிறார். நாயில்லாமல் நானில்லை என மாறிவிடும் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர் ஆசை ஆசையாக வளர்க்கும் அந்த நாய்க்கு கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்த ரக்ஷிட் ஷெட்டி நாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
கிரிக் பார்ட்டி, அவனே ஸ்ரீமன் நாராயணா போன்ற படங்கள் மூலம் அறியப்பட்ட கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள படம். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு சாதாரண படமாக தெரியும் இப்படம், எடுக்கப்பட்ட விதத்தில் பார்ப்பவர் கண்களை கலங்க செய்துள்ளது. பொதுவாக நாய் படம் என்றாலே நாயின் குறும்புத்தனம், அதனுடைய சாகசம் என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாகவே எடுக்கப்படும் படங்களின் மத்தியில் ஒரு மனிதருக்கும் நாய்க்குமான பாசப் போராட்டத்தை மிக அருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் கிரன் ராஜ் கே. படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை நாய்க்கும் ரக்ஷித் ஷெட்டிக்குமான கெமிஸ்ட்ரி அருமையாக ஒர்க் அவுட் ஆகி படம் பார்ப்பவர் கண்களை கண்ணீரில் மிதக்க செய்துள்ளது. குறிப்பாக செல்லப்பிராணிகள் விரும்பாதவர்கள் கூட கதையோடு ஒன்றிவிடும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இப்படம். தனியாக வாழும் ஒரு மனிதனுக்கும் அவனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை வெளிப்படுத்தும் நாய்க்குமான பாசப்பிணைப்பை எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் காட்டி ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் கிரன் ராஜ் கே. மீண்டும் மனதைத்தொடும் படியான ஒரு படத்தைக் கொடுத்துள்ளது கன்னட சினிமா.
நாயகன் ரக்ஷித் ஷெட்டி வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத இளைஞராக வருகிறார். அதற்கேற்றாற்போல் அவருடைய தோற்றமும், நடை உடை பாவனையும் சிறப்பாக அமைந்து சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நாயுடன் தோன்றும் இவரது நடிப்பு பார்ப்பவர் கண்களை கலங்க செய்துள்ளது. இவருக்கு அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அந்த நாய் மட்டுமே. சார்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நாய் நாயகனுக்கு நிகராக டப் கொடுத்து நடித்துள்ளது. காட்சிக்கு காட்சி காலைத் தூக்குவது, கட்டிப்பிடிப்பது, கூப்பிடும் பொழுது திரும்பி பார்ப்பது, அழைக்கும்போது வருவது, சொல் பேச்சு கேட்பது, சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் கொடுப்பது என ஒரு தேர்ந்த நடிகரை போலவே நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது சார்லி நாய். நாய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த நாய் பிடிக்கும் அளவிற்கு சிறப்பான நடிப்பை சார்லி நாய் வெளிப்படுத்தியுள்ளது. சார்லி நாயை நன்றாக தயார் செய்துள்ளார் அதனுடைய பயிற்சியாளர் பிரமோத். அவருக்கு பாராட்டுக்கள். அதேசமயம் சார்லி நாயை அது பாணியிலேயே காத்திருந்து, காத்திருந்து சிறப்பாக வேலை வாங்கியதற்கு இயக்குநருக்கும் பாராட்டுக்கள்.
ரக்ஷித் ஷெட்டி மற்றும் சார்லி நாய் தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களுக்கும் படத்தில் அதிக வேலை இல்லை. இந்த இருவருமே படம் முழுவதையும் தாங்கி பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து சம்பிரதாய நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா ஸ்ரிங்கேரி கடமைக்கு வந்து சென்றுள்ளார். அதேபோல் டாக்டராக வரும் ராஜ் பி செட்டி, சிறப்புத் தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹா, எதிர்வீட்டு குழந்தையாக வரும் சிறுமி அத்ரிகா ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து மனதில் பதிகின்றனர்.
படத்தின் பாடல்களை காட்டிலும் நோபின் பாலின் பின்னணி இசை பல இடங்களில் பார்ப்பவர் கண்களை கலங்க செய்யும்படி செய்துள்ளது. அந்த அளவு நெகிழ்ச்சியான இசையை உணர்ச்சிப்பூர்வமாக கொடுத்துள்ளார். அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவில் நாய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பனிமலை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
முதல் பாதி முழுவதும் சற்று கலகலப்பாகவும் இரண்டாம் பாதி முழுவதும் உணர்ச்சி பூர்வமாக கண்களை கலங்கவைத்து நெகிழ்ச்சி ஏற்படும்படியும் உருவாகியுள்ளது இந்த 777 சார்லி திரைப்படம். இருந்தும் இரண்டாம் பாதியில் இருக்கும் நீளம் மட்டும் படத்திற்கு சற்று பாதகமாக அமைந்துள்ளது. இரண்டாம்பாதி நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னமும் இந்த படம் நன்றாக பேசப்பட்டிருக்கும்.
777 சார்லி - அன்கண்டிஷனல் லவ்!