ஒரு பசுமையான மலைப் பிரதேசம். அதில் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருக்கும் பெரிய பாழடைந்த பங்களா. அந்தப் பங்களாவுக்குள் நண்பர்கள் கூட்டம் ஒன்று செல்கிறது. அவர்களை அங்கே இருக்கும் பேய் பயமுறுத்துகிறது. இவர்களும் அந்தப் பேய்க்குப் பயந்து அங்கிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அந்தப் பேய் அவர்களை விடுவதாக இல்லை. இறுதியில் அந்தப் பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா..? இந்த அரதப்பழசான கதையில் அப்படி என்ன புதுமை புகுத்தப்பட்டிருக்கிறது?
காட்டுக்கு நடுவே பல ஏக்கர் கணக்கில் இருக்கும் பாழடைந்த பழைய பள்ளியை இடித்துவிட்டு, அதில் ஒரு மிகப்பெரிய வில்லா கட்டுவதற்கான காண்ட்ராக்ட்டை ஒரு பெரிய அரசியல்வாதியிடமிருந்து ஹீரோ விது கைப்பற்றுகிறார். இதற்காக நாயகன் விது, அவரது மனைவியும் மனோதத்துவ டாக்டருமான ஐஸ்வர்யா ராஜேஷ், தோழி சூர்யா கணபதி, ஹீரோவின் தங்கை மாதுரி ஆகியோர் அந்தப் பங்களாவுக்குச் செல்கின்றனர். இதற்கிடையே இவர்களின் நண்பர் ஒருவர் கார் விபத்தில் இறந்துவிடுகிறார். இந்தச் செய்தி தெரியாமல் இருக்கும் இவர்களது தோழி சூர்யா கணபதிக்கு இறந்த நண்பர் ஃபோனில் இருந்து தொடர்ந்து மெசேஜ் வந்துகொண்டிருக்கிறது. தோழியும் தொடர்ந்து ரிப்ளை செய்துகொண்டிருக்கிறார். அப்போது நாயகன் விது மூலம் நண்பர் இறந்த செய்தி தோழிக்குத் தெரியவருகிறது. அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்படியென்றால் இவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது யார், மெசேஜ் அனுப்புவதற்கான காரணம் என்ன, வந்த மெசேஜ்களுக்கும் பங்களாவிற்குள் இருக்கும் அமானுஷ்யத்துக்கும் என்ன சம்பந்தம், இறுதியில் அமானுஷ்யத்திடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதே மீதிக்கதை.
வடிவேலு காமெடியில் வருவதைப் போல், 'திடீர் திடீர்னு உடையுதாம்... சாயிதாம்..' என்ற பகீர் மொமண்ட்ஸ் நிறைந்த க்ளீஷேவான பேய்ப் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ரதீந்திரன்.ஆர்.பிரசாத். எல்லா பேய்ப் படங்களிலும் இருப்பது போல் இந்தப் படத்திலும் ஒரு பெரிய வீடு, அதில் அடிக்கடி கரண்ட் கட் ஆவது, மர்மமான வேலைக்காரர், 'புஸ் புஸ்' என்று பயமுறுத்தும் நிழல்கள் என அரைத்த மாவையே அரைக்கும்படியான திரைக்கதை அமைந்து படத்தை மெதுவாகவே நகர்த்திச் செல்கிறது. முதல் பாதி முழுவதும் மெதுவாக நகர்ந்து பிற்பாதியில் வேகமெடுக்க முயற்சி செய்துள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் கதைக்கரு மட்டுமே. இப்போது உள்ள சூழலில் இந்த உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு மெசேஜ் நிறைந்த கதையை இயக்குநர் கையில் எடுத்ததற்குப் பாராட்டுக்கள். மற்றபடி இந்தக் கதைக்குப் ’பேய்ப்படம்’ ஜானர் அவசியமா என்ற கேள்வி எழுகிறது.
படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா இருந்தாலும், அவரைக் காட்டிலும் மற்ற நடிகைகள் ஸ்கோர் செய்திருக்கின்றனர். குறிப்பாக, தோழி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா கணபதி தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். அதேசமயம் ஹீரோவின் தங்கையாக நடித்துள்ள மாதுரி சில இடங்களில் எரிச்சலடைய செய்யும்படி நடித்துள்ளார். நாயகன் விது நடிப்பில் புதுமுகம் என்ற உணர்வைத் தரவில்லை. ஆட்டிசம் பாதிப்புள்ள பெண்ணாக வரும் சிறுமி அவந்திகா நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி, கதையில் உள்ள ஜீவனைக் குறையாமல் பார்த்துக்கொள்கிறார். இவரது கதாபாத்திரம் மட்டுமே படத்திற்குப் பெரும் மதிப்பை சேர்த்துள்ளது. நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. இறுதியில் மட்டும் வில்லத்தனம் காட்ட முயற்சி செய்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பாவல் நவகீதன் மண் சார்ந்த பாஷை பேசி நடித்துள்ளார். இவரது வசன உச்சரிப்பு படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது.
பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை ஆங்காங்கே பயமுறுத்தியுள்ளது. ராபர்டோ ஜசாராவின் ஒளிப்பதிவில் மலை சூழலும், இயற்கை கொஞ்சும் காடுகளும் அழகாகப் பளிச்சிடுகின்றன. அதேபோல் பங்களாவிற்குள் வரும் காட்சிகளில் கேமரா கோணங்களைச் சிறப்பாகக் கையாண்டு படத்திற்கு வலு சேர்த்துள்ளார். இயற்கைக்கு எதிராக இருக்கும் நம் செயல்பாடுகளை அந்த இயற்கையே சரி செய்துகொள்ள நினைத்தால் என்ன நடக்கும் என்பதை எச்சரிக்கும்படி இப்படம் அமைந்துள்ளதற்காகவே ஒருமுறை பார்க்கலாம்.
பூமிகா - எச்சரிக்கை!