சூரரைப் போற்று, ஜெய் பீம், நவரசா என ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு தியேட்டர் பக்கம் வந்திருக்கும் சூர்யா; நவீன காலத்து கிராமத்துக் கதைகளை கலர்புல்லாக தரும் இயக்குநர் பாண்டிராஜ்; சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பு என மூன்று துருவங்களின் கூட்டணியாக பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறது படம்; எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கியதா என்றால் பெரிய ஆச்சரியக்குறி வைத்து அருகே சிறிய கேள்விக்குறியை வைக்கலாம்.
பரபரப்பாய் சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிற காவல்துறை அதிகாரி, பள்ளி ஆசிரியர் மற்றும் கல்வித் தந்தை இன்னும் சிலர் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அவர்களைக் கொல்கிறவர் ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்த வழக்கறிஞர், ஏன் கொல்கிறார் என்பதே ப்ளாஷ்பேக் கதையின் ஆரம்பமும் முடிவும்.
இதுவரை தமிழ்சினிமா சொல்லாத கதை ஒன்றுமில்லை; யாருக்கோ எதோ ஒரு வகையில் செத்தவர்களால் கஷ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஹீரோ கொலை செய்திருக்கிறார் என்பதும் யூகிக்கக் கூடிய திரைக்கதைதான். ஆனால், பழைய கஞ்சியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பொறுப்புடன் பரிமாற முயற்சி எடுக்கப்பட்டிருப்பதுதான் பாராட்ட வைக்கிறது.
பொள்ளாச்சியில் பெண்களுக்கு அதிகார வர்க்கத்திலிருக்கும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளால் நடந்த பாலியல் கொடுமைகளை, அதன் பின்னணியில் நடந்த கொலைகளை மிரட்டல்களை, வீடியோ வெளியீட்டின் உளவியல் பிரச்சனைகளைக் கதைக்களமாக கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். கதையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வாங்கித் தரும் முயற்சியில் நேரடியாக வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பம் பாதிக்கப்படுகிறது; காலங்காலமாக சட்டத்தால் தண்டிக்க முடியாதவர்களைத் தர்மத்தின்படி நானே தண்டிக்கிறேன் எனக் களமிறங்கும் கதாநாயகர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் வக்கீல் கோட்டை கழட்டிவிட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு குற்றவாளிகளைக் கதையின் நாயகனும் தனியாளாக தண்டிக்க கிளம்புகிறார்.
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்று முழங்கிய ஜெய்பீம் வக்கீலாக இல்லாமல், தடம்புரண்டு தானே நீதி வழங்க கிளம்பி அங்கேயும் குடும்ப சென்டிமெண்ட் க்ளீசேவ் எல்லாம் வேறு செய்ய வைக்கிறார்கள். இயக்குநர் பாண்டியராஜ் படங்களுக்கே உரித்தான கிராம பின்னணியுடனான அறிமுகத்திற்கும் அதன் பழக்கவழக்கம், கலாச்சார விவரத்திற்கு இப்படத்திலும் பஞ்சமில்லை. அதேபோல காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என்கிற கமர்சியல் தன்மைகளுக்கான மெனக்கிடலிலும் எந்தக் குறையுமில்லை வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட்டுக்குள் இருக்கிறார் வினய். சத்யராஜ், சரண்யா, தேவதர்ஷினி, இளவரசன், திவ்யா துரைசாமி மற்றும் காமெடி பட்டாளங்கள் அவரவர் பாத்திரப்பணியை சிறப்புறச் செய்திருக்கிறார்கள்.
காவலன் SOS அப்ளிகேசன் பிரச்சாரம்; அம்மா சரண்யா ஆண்பிள்ளையை நான் எப்படி வளர்த்திருக்கிறேன், பெண் குழந்தைகளை எப்படி பார்க்க வேண்டுமென சொல்லி வளர்த்திருக்கிறேன் போன்ற வசனங்கள், தன் உடலை தனக்கே தெரியாமல் வீடியோ எடுத்தால் அது தன் தவறல்ல; எடுத்தவனின் தவறு என்று வசனங்கள் வழியே சமூக பாடமெடுப்பெல்லாம் அருமை; ஆனால் சினிமா காட்சி ஊடகம் அன்றோ?
இமானின் இசையில் பாடல்களில் உள்ளம் உருகுதய்யா மட்டும் மனதில் நிற்கிறது.
அடுத்த நிமிடம் பெண்களுக்கு எதோ ஒரு வகையில் சிக்கல் நெருக்கடி வரப்போகிறது என்று தெரிந்தும் சாகவாசமாக இருக்கிற நாயகனின் அலட்டல் இல்லாத தன்மை லாஜிக் ஓட்டை; பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திய கூட்டத்தினர் தண்டிக்கப்படுகிற கிளைமேக்ஸ் தான் நம்ப மறுக்கிற விசயமாய் இருக்கிறது. கமர்சியல் சினிமாவிற்குள் யதார்த்தமான சில விசயங்களையும் சமூக பொறுப்புடன் கொண்டுவர மெனக்கிடல் நடந்திருக்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது; நம்மால் முடியாத ஒன்றை நமது ஹீரோ செய்கிறானே என்று பார்வையாளர்களைக் கவர இறுதியில் ஹீரோயிசம் ஜெயிக்கிறது.
எதற்கும் துணிந்தவன் ஒரு வகையில் பாடம் தான்; கவனிக்கலாம், கவனத்தில் கொள்ளலாம்!