ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ள மற்றுமொரு குடும்ப படம். ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அண்மையில் வெளியான 'ஆனந்தம் விளையாடும் வீடு' படம் குடும்ப ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா..?
குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஜோமல்லூரி இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியின் மகனாக சரவணன். இரண்டாவது மனைவியின் மகனாக சேரன். இருவரும் அவரவர் குடும்பத்தில் மூத்த அண்ணன்கள். இவர்கள் இருவரும் தங்களது தம்பி, தங்கைகள் என குடும்பத்தோடு வெவ்வேறு வீடுகளில் வசிக்கின்றனர். இதில் சரவணன் மகளான வெண்பாவிற்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு வெண்பாவின் பிரசவத்தை தங்கள் சொந்த வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்று குடும்பத்தார் எண்ணுகிறார்கள். இதற்காக சேரன் தனக்குச் சொந்தமான இடத்தை வீடு கட்ட சரவணனுக்கு கொடுக்கிறார். சரவணன் அந்த இடத்தில் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரே வீடாகக் கட்டி அனைவரும் ஒன்றாகக் கூடி வாழ எண்ணி வீட்டைக் கட்டுகிறார். இதைப் பிடிக்காத அங்காளி பங்காளிகள் வில்லன் டேனியல் பாலாஜியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தகராறு செய்கின்றனர். வீட்டைக் கட்ட விடாமல் தடுக்கின்றனர். சொத்து பிரச்சனை பூகம்பமாய் வெடிக்க இறுதியில் அங்காளி பங்காளிகள் வீட்டைக் கட்ட விட்டார்களா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
இது ஒரு குடும்ப படம் என்பதால் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி. அது படத்துக்குச் சாதகமான அம்சம் என்றாலும் அவர்களைப் பயன்படுத்திய விதம் என்பது சற்று அயர்ச்சி தரும்படி இருப்பதால் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே படம் மெதுவாகச் செல்வது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறவு, விட்டுக் கொடுத்துச் செல்வது போன்ற நல்ல விஷயங்கள் படத்தில் காண்பிக்கப் பட்டாலும் அவை ரசிக்கும்படி இல்லாமல் நாடக தன்மையாக இருப்பது படத்துடன் நம்மை ஒன்றவைக்க மறுக்கிறது. குறிப்பாக அழுத்தமில்லாத சில செண்டிமெண்ட் காட்சிகளைச் சற்று குறைத்திருக்கலாம். செண்டிமெண்ட் காட்சிகள் அழுத்தம் குறைவாக இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது.
முதல் மனைவி குடும்பத்தின் மூத்த அண்ணனாக வரும் பருத்திவீரன் சரவணன் சாந்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்திச் சென்றுள்ளார். இரண்டாவது மனைவி குடும்பத்தின் மூத்த அண்ணனாக வரும் சேரன் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. இவர்களே கதையின் பிரதான நாயகர்களாக ஜொலித்துள்ளனர். சேரனின் தம்பியாக நடித்திருக்கும் நடிகர் சௌந்தரராஜா எதார்த்தமான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவரது கதாபாத்திரமே படத்திற்குச் சற்று வேகத்தைக் கூட்டி உள்ளது. இவரது துடுக்கான நடிப்பும் மிடுக்கான நடையும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. இவருடன் இன்னொரு தம்பியாக நடித்துள்ள செல்லாவும் இவருக்கு ஈடுகொடுத்து நடிப்பில் டஃப் கொடுத்துள்ளார்.
சரவணனின் தம்பிகளாக வரும் நடிகர்கள் விக்னேஷ், சினேகன், ஆகியோர் தனக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தின் இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் கௌதம் கார்த்தி ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய படங்களைவிட முதிர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக நடித்துள்ள ராஜசேகர், ஜீவிதா நட்சத்திர தம்பதிகளின் மகளான சிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில் புதுமுகம் போல் தெரியவில்லை. மிரட்டல் வில்லனாக வரும் டேனியல் பாலாஜி, பிற்பாதியில் வழக்கமான வில்லனாக வந்து சென்றுள்ளார். மற்றபடி படத்தில் நடித்துள்ள மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே அவர் அவருக்கு கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். உருக வைக்கும் படியான பின்னணி இசையில் கலக்கியுள்ளார். படத்தில் இன்னொரு நாயகனாக இவரது இசை அமைந்துள்ளது. பால பரணியின் ஒளிப்பதிவில் கிராமத்து வீடு சார்ந்த காட்சிகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் நீளம், திரைக்கதை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் சற்று கவனமாக இருந்திருந்தால் நல்ல குடும்பப் படப் பட்டியலில் இப்படம் இணைய நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனந்தம் விளையாடும் வீடு - செண்டிமெண்ட் தூக்கல்!