
இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என வர்ணிக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு படத்துக்கு இசையமைத்தாலே அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும். அப்படி தன் இசையால் கட்டிப்போட்ட ஏ.ஆர் ரஹ்மான் கதை எழுதி, தயாரித்து, இசையும் அமைத்துள்ளார் என்றால் அந்தப் படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்..?
தாயில்லா பிள்ளையான நாயகனுக்குப் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியம். அதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இசையே பிடிக்காத அவரது தந்தை. இதற்கிடையே வாய்பேச முடியாத நாயகி. இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளப் பிடிக்காத நாயகியின் அப்பா. இருந்தும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ள நாயகியின் அப்பா விடும் சவால். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட நாயகன் அதில் ஜெயித்தாரா, அப்படி என்ன அந்தச் சவால்..? என்பதே '99 சாங்ஸ்' படத்தின் கதை.
ஒரு பேன் இந்தியா படமாக இது உருவாகியுள்ளதால் தமிழுக்குப் படம் அந்நியப்பட்டே இருக்கிறது. படம் முழுக்க இசை சம்பந்தப்பட்ட குறிப்புகளும், இசைச் சொற்களும், இசை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களும் என இசை சார்ந்த விஷயங்களே நிரம்பி வழிவதால் சாமானியனுக்கான படமாக இது இல்லாமல் இசைப் பயிலும் மாணவர்களுக்கான படமாக அமைந்துள்ளது. திரைமொழியில் மேஜிக்கலான காட்சிகளைப் படம் நெடுக பரவவிட்ட இயக்குனர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி, அதன் மூலம் சிலிர்ப்பூட்டும் இசையை உணரச்செய்து காட்சிகளை ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார். அதற்குப் பலன் கிடைத்ததா என்றால்..? சந்தேகமே!

கதையாசிரியரான ஏ.ஆர் ரஹ்மான் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தன் வாழ்வில் நிகழ்ந்ததையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு இக்கதையை உத்வேகம் ஏற்படும்படி உருவாக்கியுள்ளார். ஆனால், அதற்கான திரைக்கதை வடிவத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். 'நான்- லீனியர்' திரைக்கதை மூலம் கதையை சுவாரஸ்யப்படுத்த முயற்சி செய்த இயக்குனர் அதை ஒவ்வொரு மொழிக்கேற்ப சற்று பட்டி டிங்கரிங் பார்த்துச் செதுக்கியிருந்தால் படம் கரை சேர பிரகாசமான வாய்ப்பு இருந்திருக்கும்.
நாயகன் எஹான் பட் புதுமுகமாக இருந்தாலும் பார்வையிலே கவர்கிறார். அழகாக இருக்கிறார். நடிப்பில் நல்ல அறிமுகம். வாய்பேச முடியாத நாயகி எடில்ஸி அந்நிய முகமாகத் தெரிந்தாலும் நடிப்பில் கவனம் பெற்றுள்ளார். மனிஷா கொய்ராலா சிறிது நேரமே வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். மற்றபடி படத்தில் நடித்துள்ள முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவருமே வட இந்தியர்களாகவே இருப்பதால், அவர்கள் என்னதான் நன்றாக நடித்தாலும் நம்மால் கனெக்ட் செய்ய சற்று சிரமமாக உள்ளது.
'99 சாங்ஸ்' படத்தில் மொத்தம் 14 பாடல்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்பாடல்கள் அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும் அந்தந்த சமயத்தில் மட்டுமே அது மனதில் நிற்கிறது. மற்ற நேரத்தில் அவை மறந்துவிடுவது ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது. இருந்தும் படத்தின் பின்னணி இசையும், அதற்கான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸும் மெய்சிலிர்ப்பூட்டியுள்ளது. டானே சடம் மற்றும் ஜேம்ஸ் காவ்லேவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம். தயாரிப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாராள மனதால் காட்சிக்குக் காட்சி ஹாலிவுட் படம் பார்ப்பதுபோன்ற உணர்வைச் சிறப்பாக ஏற்படுத்தியுள்ளனர்.

ஓடவே ஓடாத ஃப்ளாப்பான படங்களைக் கூட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்காகப் பார்த்த நம்மால், பல்வேறு வகையான இசையைப் பாரபட்சம் பார்க்காமல் இப்படம் மூலம் அள்ளித் தெளித்திருக்கும் எழுத்தாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்காகப் பார்க்கமுடியுமா என்றால்....? கேள்விக்குறிதான்.
'99 சாங்ஸ்' - ஒரு முழுமையான திரைப்படத்தை எதிர்பார்க்காமல் இசையனுபவத்திற்காகப் போனால் ஒரு முறை கேட்டு ரசிக்கலாம்!