படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக 'ஹனு-மேன்' தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'ஹனு-மேன்'. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட கதா நாயகன் தேஜா சஜ்ஜா பேசுகையில், ''அனுமனின் சிறிய மந்திரத்தை பாடிவிட்டு, பேச தொடங்குகிறேன். ''மனோஜவம் மருததுல்யவேகம்.. ஜிதேந்திரியம் புத்தி மதம் வரிஷ்டம்... வதத்மஜம் வானராயுத முக்யம்... ஸ்ரீ ராமதூதம் சிரஸ நாமானி..'. அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா..?.இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், ''மனம் மற்றும் காற்றைப் போல வேகமானவர். புலன்களின் தலைவன். சிறந்த ஞானம், கற்றல் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்கவர். அவர் வாயு பகவானின் மகன். குரங்குகளின் தலைவன். ஸ்ரீ ராமரின் தூதருக்குத் தலை வணங்குகிறேன்'' எனப் பொருள்.
இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஸ்பைடர் மேனும், பேட்மேனும்தான் சூப்பர் ஹீரோக்கள். ஏனென்றால் நாம் அவர்களை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நமது கலாச்சாரத்தாலும் நமது அனுமனாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்களின் சூப்பர் ஹீரோக்கள் கற்பனையால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் அனுமன் நமது அசலான நாயகன். நமது கலாச்சாரம், நமது வரலாறு, ஹனுமன் எங்களது சூப்பர் ஹீரோ. அப்படிப்பட்ட மகான் அருளால் வல்லமை பெற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான் என்பதே இப்படத்தின் கதை.
இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநரின் நம்பிக்கைக்கு என்னால் நன்றி என்ற ஒற்றை சொல் மட்டும் சொல்வது போதாது. இது நாங்கள் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பு. பிரசாந்த்- ஒரு நுட்பமான படைப்பாற்றல் கொண்ட கலைஞர். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விசயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நேர்மையுடனும், பணிவுடனும் இந்த படைப்பினை உருவாக்கி இருக்கிறோம். அனுமன் பணிவானவர். நேர்மையானவர். ஆனால் அவர் வலிமையானவர். எங்களது படமும் அப்படித்தான். நாங்கள் இதை பணிவாகவும், நேர்மையுடனும் உருவாக்கினோம். அதனால் இது வலுவுள்ள படைப்பாக இருக்கும். மேலும் இந்தத் திரைப்படம் பார்வையாளின் கண்களுக்கு அழகான காட்சி விருந்தாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
எங்களின் தயாரிப்பாளர் சினிமா மீதுள்ள ஆர்வத்தாலும், இந்த கதை மீது கொண்டுள்ள துணிச்சலான நம்பிக்கையாலும் எங்களை ஆச்சரியப்படுத்தினார். திரைத்துறை மீது தீவிர பற்றுடைய இவரைப் போன்ற தயாரிப்பாளர் பிரம்மாண்டமான வெற்றியை பெற வேண்டும் என நான் முழு மனதுடன் விரும்புகிறேன். விரைவில் அவர் ஒரு நட்சத்திர தயாரிப்பாளராக மாறுவார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் ஸ்ரீனு, வினய் ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நான் இந்த திரைப்படத்தில் நன்கு நடிப்பதற்கு முயற்சி செய்தேன். அனைத்தும் நேர் நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் என்று நம்புகிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் '' என்றார்.