எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தேர்தல் தோல்வி பற்றி சிவாஜி கணேசன் கூறியது என்ன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு சிவாஜி கணேசன் எப்படி உயிர் கொடுப்பார் என்பது பற்றியும் அவரது நடிப்புத்திறன் பற்றியும் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடிப்பில் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒருவர் இல்லையென்பது அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். சினிமா தவிர்த்து பிற விஷயங்களை சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு நுணுக்கமாகக் கவனிக்கிறார், வாழ்க்கை குறித்த அவரது புரிதல் என்ன என்பதெல்லாம் பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கும். அதை ஓர் உதாரணத்துடன் உங்களுக்குக் கூறுகிறேன்.
சிவாஜி கணேசன் அரசியலில் தோல்வியடைந்துவிட்டார். அவர் நடித்த காலத்தில் அவருக்குப் போட்டியாக நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் தேர்தலில்களில் வெற்றிபெற்று பின்னாட்களில் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். சினிமாவில் எப்படி மிகப்பெரிய நட்சத்திரமாக எம்.ஜி.ஆர் ஜொலித்தாரோ அதேபோல அரசியலிலும் மிகப்பெரிய அந்தஸ்திற்கு அவர் உயர்ந்தார். ஆனால், திரையுலகில் மிகப்பெரிய நடிகராக வலம்வந்த சிவாஜி கணேசனால் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகக்கூட வெற்றிபெற முடியவில்லை. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசனுக்கு தோல்விதான் கிடைத்தது. கமல், ரஜினி அரசியலுக்கு வருவதாகக் கூறும்போது சிவாஜி கணேசனாலேயே வெற்றிபெற முடியவில்லை, இவர்கள் எப்படி ஜெயிக்க முடியும் என்று பலரும் கூறியதை நாம் கேட்டிருப்போம்.
சிவாஜியின் தோல்வி பற்றி பலரும் பெரிய அளவில் பேசுகிறார்கள். தன்னுடைய தோல்வி பற்றி சிவாஜி கூறியது என்ன? ஒருமுறை, மக்கள் குரல் பத்திரிகையில் சிவாஜி கணேசன் பேட்டி ஒரு வாரம் முழுவதும் வெளிவந்தது. அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து சிவாஜி பேசியிருப்பார். மிக ஆழமான பேட்டியாக அந்தப் பேட்டி இருந்தது. அந்தப் பேட்டியில், “எம்.ஜி.ஆரும் நீங்களும் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த அரசர்களாக இருந்தீர்கள். பின்னாட்களில், அரசியலுக்குச் சென்ற பிறகு எம்.ஜி.ஆர் மிகப்பெரிய உயரத்தை எட்டினார். உங்களால் வெற்றிபெற முடியவில்லையே ஏன்?” என சிவாஜி கணேசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவாஜி கணேசன் கொடுத்த பதில் மிக அற்புதமாக இருந்தது. "எல்லா பறவைகளையும் கடவுள்தான் படைக்கிறார். அதில், சில பறவைகள் மிக உயரத்தில் பறக்கும்; சில பறவைகள் இடைப்பட்ட உயரத்தில் பறக்கும்; சில பறவைகள் தரையில் இருந்து சற்று உயரத்தில் பறக்கும். எல்லாமே பறவைகள்தான். ஆனால், அவை பறக்கும் உயரம் வேறானதாக இருக்கிறது. இதுதான் இறைவனின் படைப்பு. அதுபோல, எம்.ஜி.ஆர் அரசியலில் உயரப்பறக்கும் பறவை. அந்த ஆற்றலைக் கடவுள் அவருக்கு வழங்கியிருக்கிறார். நான் தரையில் இருந்து சற்று உயரத்தில் பறக்கக்கூடிய பறவை. எனக்கு கடவுள் கொடுத்த ஆற்றல் அவ்வளவுதான். அதனால் என்னால் உயரப்பறக்க முடியவில்லை" என சிவாஜி கணேசன் கூறினார்.
இதற்கு மற்றொரு பதிலும் சிவாஜி கணேசன் கொடுத்தார். "நானும் எம்.ஜி.ஆரும் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தோம். ஒரு பேருந்து வந்தது. அதில், எம்.ஜி.ஆர் ஏறிவிட்டார். நான் வேறு பேருந்தில் செல்லலாம் என்று நினைத்து அந்தப் பேருந்தில் ஏறவில்லை. நாட்கள் கடந்தன; நாட்கள் வாரங்களாகின; வாரங்கள் மாதங்களாகின; மாதங்கள் வருடங்களாகின. பின், ஒரு பேருந்து வந்தது. அதில் ஏற படியில் கால்வைத்தபோது என்னால் ஏற முடியவில்லை. என் உடலில் இருந்த சக்தியை இழந்துவிட்டேன். துடிதுடிப்புடன் கால் வைத்து பேருந்தில் ஏற வேண்டிய காலத்தில் நான் ஏறாமல் விட்டுவிட்டேன்" என்றார். திமுக ஆட்சிக்கு வரும்போதே எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். ஆனால், சிவாஜி காலங்கடந்து வயதான பிறகே, தேர்தலில் நின்றார். அந்தச் சமயத்தில் சினிமாவிலேயே அவரது தலைமுறை முடிந்து ரஜினி, கமல்ஹாசன் வந்துவிட்டனர். எந்தவொரு செயலையும் உரிய நேரத்தில் செய்ய வேண்டும். அதைவிடுத்து காலங்கடந்து முடிவெடுத்தால் தோல்விதான் மிஞ்சும் என்பதற்கு சிவாஜி கணேசன் அவர்களின் அரசியல் வாழ்க்கையும் ஓர் உதாரணம்.