அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இந்த இருபடங்களின் வெற்றியினால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். அதன்பின் ஆர்யா மற்றும் அவரது தம்பி கிஷ்ணாவை வைத்து யாக்கை என்ற படத்தை இயக்கினார். அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரும் தோல்வியடைந்தது. அதன்பின் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு வரலாற்று திரைப்படம் விஷ்ணுவர்தன் இயக்கப்போகிறார் என்றல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் அது தமிழ் படமில்லை, ஹிந்தி படம். ஆம் விஷ்ணுவர்தன் ஹிந்தியில் திரைப்படம் இயக்கப்போகிறார். இந்த திரைப்படம் கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தழுவி உருவாகவுள்ளது. இதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கிறார். இதற்கான கதையை சந்தீப் ஸ்ரீ வத்சவா எழுதுகிறார். கரண் ஜோகரின் தர்மா தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்குகிறது. தமிழிலிருந்து சென்ற ஷங்கர், பாலச்சந்தர் ஆகியோர்போல் ஹிந்தியில் விஷ்ணுவர்தன் வெற்றியடைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.