கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஹைதராபாத் காவல்துறையினர், "பெண் மருத்துவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை நடித்துக்காட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் சிறப்புப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டி சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் ஒரு போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்ததும் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து பல திரை பிரபலங்கள் தங்களின் கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக நடிகர் விஷால் தெலங்கானா காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில் நீதி வழங்கப்பட்டுவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.