
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் லட்சுமன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘சாவா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் மகாராஷ்டிரா பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த 'லெஜிம்' நடனக் காட்சி, மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களால் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனால் அந்தக் காட்சியை படத்தில் இருந்து படக்குழு நீக்கியது.
இந்த நிலையில் இப்படத்தில் மாராஷ்டிரா போர்வீரர்களான கனோஜி ஷிர்கே மற்றும் கன்ஹோஜி ஷிர்கே ஆகியோரை தவறாக சித்தரித்துள்ளதாக அப்போர் வீரர்களின் 13வது வாரிசான லஷ்மிகாந்த் ராஜே ஷிர்கே குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உண்மைகளைத் திரித்து தனது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாக கூறி படத்தின் இயக்குநர் லட்சுமன் உடேகருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதோடு ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர்வதாக எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் லட்சுமன் உடேகர் போர் வீரர்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர், ‘கனோஜி மற்றும் கன்ஹோஜியின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம், அவர்களின் குடும்பப்பெயரைக் குறிப்பிடவில்லை. அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. அப்படி ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.