விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த மாத 28ஆம் தேதி இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இதையடுத்து இந்தி பதிப்பினை வெளியிட தணிக்கை வாரிய குழு லஞ்சம் கேட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்தார் விஷால். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் விஷால் குற்றச்சாட்டுக்கு, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை வாரிய ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்ட சில ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தொடர்புள்ள நான்கு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.