சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் கிடப்பில் இருந்த படம் ‘மதகஜராஜா’. இப்படத்தில் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர்களுடன் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இவரது இசையில் விஷால், ‘மை டியர் லவ்வரு..’ பாடலை பாடியிருந்தார். இப்பாடலின் லிரிக் வீடியோ அப்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படம் 2015ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட், இப்படத்துக்கு முன்பு தயாரித்திருந்த படங்களை விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. பின்பு கடந்த ஆண்டு சிக்கல் முடிவுக்கு வந்ததாகவும் ரிலீஸூக்கு படம் தயாராகி வருவதாகவும் பேச்சுகள் எழுந்தது. பின்பு அண்மையில் திடீரென இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 12 வருடம் கழித்து இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது படக்குழு. அந்த வகையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முகம் வீங்கியும் பேசும் போது கை நடுங்கியும் காணப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும் அதனுடனே நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் அந்நிகழ்ச்சியிலே தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் விஷால் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதை பார்த்த பலரும் அவரது உடல்நிலை குறித்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். மேலும் அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர்.