Skip to main content

ரீல் மற்றும் ரியல் தங்கலானின் கஷ்டத்தை விவரித்த விக்ரம்! 

Published on 06/08/2024 | Edited on 06/08/2024
Vikram Speech at Thangalaan Audio Launch

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில் “சேது, பிதா மகன், அந்நியன்,ஐ , இராவணன், என எல்லா படங்களிலும் நிறைய கஷ்டப்பட்டு பண்ணியிருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த படங்களை எல்லாம் தங்கலானுடன் ஒப்பிடும் போது 8% கூட கிடையாது. ஏன் இந்த மாதிரி கதாபாத்திரம் பண்றீங்கன்னு நிறைய பேர் கேட்டார்கள். அதைப் பற்றி நான் வீட்டில் உட்கார்ந்து யோசிக்கும் போது தங்கலான் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. தங்கலான் என்பவனுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அதை அவன் சென்றடைய வேண்டும். அவனின் குடும்பத்தையும், மக்களையும் நேசிக்கிறான் அவர்களுக்கு ஒரு விடுதலையோ அல்லது தங்கம் கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமா? என்பது நீங்கள் படத்தில் பார்த்தால் தெரியும். ஆனால் அவன் வாழ்க்கையில் நிறையத் தலைமுறைகளாகக்  கிடைக்க முடியாத  ஒரு விஷயத்தை வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக அவனின் காலும் உடைகிறது.  அதன் பின்பு எப்படி அவனுக்குக் கிடைக்கப் போகிறது என்று அவன் நினைக்கும்போது, அவன் கூட இருப்பவர்களே உன்னால் முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் அவன் என்னால் இதைப் பண்ண முடியும் என்பதில் உறுதியாக இருப்பான். 

இதேபோல் தான் என்னுடைய வாழ்க்கையிலும் இருந்தது. 8ஆம் வகுப்பு வரையிலும் முதல் மூன்று ரேங்கில் தான்  இருப்பேன். நடிக்க ஆசை வந்த பிறகு கடைசி மூன்று ரேங்கில் இருந்தேன். அதற்கு மேல் வரவே இல்லை. நான் கல்லூரியில் ஹீரோ ரோல் ஜுலியஸ் சீசர் கொடுப்பார்கள். அதை வேண்டாம் என சொல்லிவிட்டு காசியஸ், புருட்டஸ் ரோல் கேட்பேன்.  இந்த கதாபாத்திரத்தைத்தான் நடிக்க வாய்ப்பு இருக்கும் அப்படிதான் நான் பண்ணுவேன். இல்லையென்றால் தனியாக நடித்துக் கொண்டு எதாவது பண்ணிக்கொண்டிருப்பேன். அதன் பிறகு ஒரு தனியார்க் கல்லூரியில் பிளாக் காமெடி என்ற  நாடகத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தேன். அன்றைக்கு எனக்குச் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. அதே நாளில் தங்கலான் மாதிரி என்னுடைய காலும் உடைந்தது. காலை வெட்ட வேண்டும் எனச் சொன்னார்கள் அதன் பிறகு  மூன்று வருடம் 23 அறுவை சிகிச்சை பெற்று   மருத்துவமனையில் இருந்தேன். அதன் பின் ஒரு வருடம் ஊன்றுகோலை வைத்துத்தான் நடந்தேன். என் அம்மாவிடம் மருத்துவர்கள் உங்கள் பையனின் காலை மட்டும் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இனிமேல் அவனால் நடக்க முடியாது சொல்லிவிட்டார்கள்.

ஆனால் நான் சினிமாவில் நடிக்க வேண்டுமெனக் கிறுக்கன் மாதிரி இருந்தேன். பெரிய ரோல் கூட வேண்டாம் எதாவது சின்ன ரோலில் சின்ன சீன்ல வந்தா போதும் என்ற வெறியில்தான் இருந்தேன். அதன் பிறகு 10 வரும் தொடர்ந்து போராடினேன். கால் சரியில்லாமல் இருந்தபோது ரூ.750 சம்பளத்திற்கும்  வேலை பார்த்துள்ளேன். சினிமா வாய்புகள் வந்த போது என்னுடைய நண்பர்கள் அதை விட்டுவிட்டு வேறு எதையாவது பண்ணு எனச் சொன்னார்கள். என்னை பரிதாபமாகப் பார்ப்பார்கள். அன்றைக்கு நான் விட்டிருந்தால் இன்றைக்கு இந்த மேடையில் இருந்திருக்க மாட்டேன். ஒரு இலக்கை தேர்ந்தெடுத்து பயணித்தால் கண்டிப்பாகப் பலன் கொடுக்கும். அதனால்தான் இங்கு இருக்கிறேன். ஒரு வேளை சினிமா வாய்ப்பு வராமல் இருந்தால். இன்னும் அதற்காக முயற்சி செய்திருப்பேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்