
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. 7 வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பட ப்ரோமோஷனுக்காக மதுரை வந்திருந்த கோப்ரா படக்குழுவினர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசுகையில், “மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது. இங்கு நீங்கள் தரும் அன்பு பிரமிப்பாக உள்ளது. அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர். இது அவர் இயக்கியுள்ள படம். படவேலைகளில் பிஸியாக இருப்பதால் அவரால் வர முடியவில்லை. இந்த கல்லூரியில்தான் என் தந்தை படித்தார். மதுரையில்தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா, அமீர் எல்லாம் இங்குதான் இருந்துள்ளார்கள். அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார். கோப்ரா படம் பொறுத்தவரை நிறைய புதுமைகள் படத்தில் இருக்கும். எமோஷன், காமெடி, ஆக்சன் கலந்த படமாக கோப்ரா இருக்கும். எனக்கு படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.