விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.
ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.
அப்போது விஜய் சேதுபதியிடம், ‘75 வருடமாக இங்கு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா..’ என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இது மாதிரியான கேள்வியை அமீர்கான் வந்தபோதும் கேட்டீர்கள். எல்லா சமயத்திலும் கேட்கிறீர்கள். எதற்கு அந்த கேள்வி. என்னை போன்ற ஆட்களிடம் இந்த கேள்வி கேட்டு என்னவாகப் போகுது. இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு. கேள்வியே தப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை யாரும் இங்க தடுக்கவில்லை. எல்லாரும் படித்துக்கொண்டு தான் வருகிறார்கள். அதற்கான விளக்கம் பி.டி.ஆர் ஒரு இடத்தில் கொடுத்திருப்பார். அதை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்” என சற்று கோபமாகச் சொன்னார்.