
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜவான்'. முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு முன்னோட்ட நிகழ்வு நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லீ, ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் வந்து படக்குழுவினரை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசுகையில், "அட்லீயால் தான் இந்த படம் தொடங்குச்சு. அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கு. அவருடன் பணியாற்றியது ரொம்ப கம்ஃப்ர்ட்டாக உணர்ந்தேன். ஆனால் நிறைய வேலை வாங்கினார். சாவடிச்சார். ஆனால் அதெல்லாம் ஸ்க்ரீனில் பார்க்கும் போது அழகாக இருக்கிறது. அவர் இயக்கிய தெறி எனக்கு ரொம்ப புடிச்ச படம். அவருடைய கருப்பு ரொம்ப அழகானது.
நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணேன். அது அந்த பொண்ணுக்கு தெரியாது. சேட்டு பொண்ணு அது. அந்த பொண்ணு ஷாருக்கான் சாரை லவ் பண்ணுச்சு. அதற்கு பழிவாங்க இத்தனை வருஷம் ஆகும் என்று தெரியாது. ஒருவழியாக பழி வாங்கிவிட்டேன். ஒரு நடிகரிடம் முக்கியமான விஷயங்களாக பார்ப்பது, சமமாக நடத்துதல். ரத்தமும் சதையுமா இருக்கிற ஒரு மனுஷன சமமாக பார்க்கவில்லை என்றால், கற்பனையாக எழுதும் ஒரு கதாபாத்திரத்தை எப்படி புரிஞ்சிக்க முடியும் என்ற கேள்வி எனக்குள் எப்போதுமே இருக்கும். அது ஷாருக்கான் சாரிடம் இருக்கிறது" என்றார்.