![Vijay made the students take the pledge](http://image.nakkheeran.in/cdn/farfuture/H_c0-2x6f3haOu75_pJyhGVKhTYh-ZjzuCFLG5Jo7ZI/1719554446/sites/default/files/inline-images/vjjjni.jpg)
இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார். அதன்படி, முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல் , நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கும் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில், இன்று (28-06-24) விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்.
இதில் பேசிய விஜய், “நல்லதை கெட்டது மாறியும், கெட்டதை நல்லது மாறியும் சோஷியல் மீடியாவில் புரணி பேசுகிறார்கள். அதையெல்லாம் பாருங்கள். ஆனால், எது உண்மை என்று அறிந்து செயல்படுங்கள். அப்பொழுதுதான் இந்த நாட்டில் உண்மையான பிரச்சனை என்ன, மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூகத்தில் நடக்கிற தீமை, நன்மை பற்றியெல்லாம் தெரியவரும். அப்பொழுதுதான் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரத்தையெல்லாம் நம்பாமல் இருக்கலாம். எது நல்லது, எது கெட்டது என அறிந்துவிட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்ககூடிய ஒரு விசாலமான உலக பார்வையை உங்களால் வளர்க்க முடியும். அது விட்டுவிட்டாலே அதைவிட சிறந்த அரசியல் எதுவுமே இருக்க முடியாது. அதுதான் நம் நாட்டுக்கு நீங்கள் செய்யக்கூடிய பங்களிப்பு ஆகும்.
பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில் தான். எனவே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து நல்ல நட்பை வளர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களது நண்பர்கள் யாராவது சிலர் தவறான பாதையில் சென்றியிருந்தால் முடிந்தவரை அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். தவறான பழக்கங்களில் மட்டும் ஈடுபடாதீர்கள். ஈடுபடக் கூடாது. உங்களுடைய அடையாளத்தை எக்காரணம் கொண்டு இழக்காதீர்கள். தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஆகியிருக்கிறது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற முறையிலும் எனக்கு இது அச்சமாக இருக்கிறது.
இதில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், ஆளும் அரசு இதையெல்லாம் தவற விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அதைப் பற்றியெல்லாம் இங்கு பேச வரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை. சொல்ல போனால், அரசாங்கதை விட நம்ம வாழ்க்கையை நம்மதான் பார்க்க வேண்டும். ‘உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். Say to temporary pleasures, say no to drugs’ எனக்காக இதை ஒருமுறை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறினார். அதை கேட்டு மாணவர்களும் அதை கூறுங்கள். மேலும், அவர், “இந்த உறுதிமொழியை நீங்கள் எல்லாரும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள், கவலைப்படாதீர்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பார்த்து கற்றுக்கொண்டாலே தோல்வி நம்மகிட்ட வருவதற்கே பயப்படும். ‘Success is never ending, Failure is never final’. நான் 3ஆம் தேதி சந்திக்கப் போற மாணவர்களுக்கும் சேர்த்து தான் இப்போது பேசுகிறேன்” என்று பேசினார்