விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.
இதையடுத்து பிரபு தேவா மற்றும் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து போஸ்டரை படக்குழு வெளியிட்டுருந்தது. இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் சிறிய வீடியோ ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 9.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன. அதோடு ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா, அதிரடி கெளப்பட்டுமா...’, ‘லாஸ்டு சொட்டு உள்ள வர, நம்ம பார்ட்டி ஓயாது’ போன்ற வரிகளும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு இடத்தில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள அனைத்து படங்களை குறிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இப்பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் அவரது ரசிகர்கள் குத்தாட்டம் போடும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.