சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்து தாடை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட முழுவதும் குணமடைந்து விட்டதற்காகத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே ட்விட்டரில் அவ்வப்போது சமூகம் குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் வட மாநிலத்தைச் சேர்ந்த அதிக நபர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், அதைப் பற்றி அவரது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாகத் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்து வருவதாகப் பேச்சுக்கள் இருந்து வருகிறது. கடந்த மாதம் திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்படுவதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.