மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘பரோஸ்’. இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அதே போல் இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் லிடியன் நாதஸ்வரம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகிவுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் 3டி முறையில் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் மோகன் லால், லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் லிடியன் நாதஸ்வரம் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மோகன் லாலின் அறிமுக இயக்கமான பரோஸ் படத்தில் நானும் அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தின் பின்னணி இசையை வடிவமைக்க பணியாற்றிய மார்க் கிலியானுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் சிறந்த முறையில் பணியாற்றி கொடுத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் வெற்றிபெற்ற சந்தோஷத்தை கொண்டாடினேன்.
அடுத்த நாள் மோகன் லாலிடமிருந்து எனக்கு கால் வந்தது. முதலில் நான் வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்தினார். அதோடு அவர் இயக்கி, நடிக்கும் குழந்தைகளுக்கான படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அப்போது எனக்கு 13 வயது. அந்த 13 வயதில் அவர் என்மேல் வைத்த நம்பிக்கையால் அவருக்குதான் எல்லா கிரிட்டும் போய் சேரனும். லாக் டவுனால் இப்படத்திற்கான பணி ஐந்து வருடம் நடைபெற்றது. என்னைப்பொறுத்தவரை சிறப்பாக என்னுடைய பணியை செய்துள்ளேன். நானும் இப்படத்திற்காக பணியாற்றும்போது, நிறைய இசைகளை கற்றுக்கொண்டேன். படக்குழுவினருக்கு என்னுடைய நன்றி. படம் வருகிற கிறிஸ்துமஸ்க்கு வெளியாக போகிறது எல்லோரும் சந்தோஷமாக படம் பாருங்கள்” என்றார்.