இயக்குநர் அட்லீ, ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தை காளீஸ் இயக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடித்துள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ட்ரைலரும் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர்.
இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை(25.12.2024) வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பேபி ஜான் படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார். இப்படம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் இந்திக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்துள்ளதாக ட்ரைலர் பார்க்கும் போது தெரிகிறது. இருப்பினும் படக்குழு தெறி படத்தின் ரீமேக் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.