கேரளாவை க்ளீன் சிட்டி ஆக்குவதற்காக அண்டை மாநிலம் அதன் குப்பைத் தொட்டியாக வேண்டுமா?. பல வருடங்களாக தமிழகத்தில் குறிப்பாக நெல்லை தென்காசி மாவட்டங்களின் பொது மக்கள் பட்ட வேதனைக்கும் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் எழுப்பிய கூக்குரல்களுக்கும் தற்போது தான் விடிவு கிடைத்திருக்கிறது.
கேரளாவின் குப்பைகள், கோழி மற்றும் இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள் ஹோட்டல் மற்றும் பேக்கரி கடசல்கள் ஆகியவைகள் கேரளா சென்று காலியாகத் திரும்புகிற கனிம லாரிகளில் மும்மடங்கு வாடகைகளில் கேரள புரோக்கர்கள் மூலமாக ஏற்றப்பட்டு தென்காசி பிரானூர் பார்டர்கள், நெல்லை மாவட்டத்தின் கொண்டா நகரம் கோடகநல்லூர் பகுதிகளின் தனியார் தோட்டப்பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் லாரி லாரியாகக் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வந்தன. அவைகள் மூலம் வரும் கரும் புகைகளினால் சூழல்களின் மாசு கெட்டுப் போவதையும் பகுதி மக்கள் குரலெழுப்பியும் மாவட்ட நிர்வாகங்கள் அசையாமலிருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் தொடர் மழை காரணமாக அந்தக் கழிவுகள் எரிக்காமல் அப்படியே மூடை மூடையாய் போட்டு விட்டுச் சென்றதால் பெரிய அளவிலான வகையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் சுகாதாரச் சீர் கேடுகளை ஏற்படுத்தி ஏரியாவை நாறடித்து வந்தன. மேலும் கொட்டப்பட்ட கழிவுகள் சுத்தமல்லி, கொண்ட நகரம், கோடகநல்லூர் மேய்ச்சல் புறம் போக்குப் பகுதிகளில் குன்றுகள் போன்று பரந்து கிடந்தன.
இந்த நிலையில் தான் திருவனந்தபுரம் மண்டல கேன்சர் மைய மருத்துவமனையின் ஆபத்தான கேன்சர் நோயின் சிகிச்சைக் கழிவுகள் ஆதாரத்துடன் அந்தப் பகுதியின் நீர் நிலை ஏரியாவில் கொட்டி விட்டுச் சென்றது பிரளயத்தைக் கிளப்பிதுடன் நெல்லை மாவட்டக் கலெக்டரான கார்த்திகேயன் மற்றும் பசுமைத்தீர்ப்பாயங்கள் வரை சென்று விட்டன. கேன்சர் கழிவுகளின் பின் விளைவு, சீரியஸ் தன்மை சம்பவத்தை வீரியமாக்கி விட்டன.
வழக்குகளால் களமிறக்கப்பட்ட போலீசாரின் விசாரணையில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக சுத்தமல்லிப் பகுதியைச் சேர்ந்த லாரி ஏஜண்ட்களான மாயாண்டி, மற்றும் மனோகர் இருவரும் கேரள நிறுவனங்களிடமிருந்து செழுமையான பணம் பெற்றுக் கொண்டு இடைத்தரகர்களாகச் செயல்பட்டது தெரிய வர, அவர்களைக் கைது செய்து செய்திருக்கிறார்கள். மேலும் இதில் தீவிரமாகச் செயல்பட்ட சேரன்மகாதேவி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யான சத்யராஜ், பல்வேறு சி.சி.டி.வி. புட்டேஜ்களை ஆய்வு செய்து கேன்சர் மருத்துவக் கழிவுகளை நெல்லைப் பகுதியில் கொட்டிய லாரி பற்றிய விபரம் தெரிய வர, அதனடிப்படையில் சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்லத்துரையைக் கைது செய்ததுடன் அவர் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து கொண்டு வந்திருக்கிறார்.
இதனிடையே கேன்சர் கழிவு கொட்டப்பட்ட விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றதில் நெல்லை கலெக்டருக்கு நெருக்கடியானது. ஏனெனில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் நெல்லைப் பகுதிக்குள் கொட்டப்படுவதைக் கண்காணிக்கிற குழுவின் தலைவராக கலெக்டர் செயல்படுவார் என்று நீதிமன்றத்திற்குத் தரப்பட்ட உத்தரவாதம் தான். அதையும் மீறி நடந்த இந்தச் சம்பவம் தான்.
இந்த நிலையில் கேரளாவிலிருந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்ய வந்த குழுவினர், மருத்துவக் கழிவுகளை வெளியேற்ற நாங்கள் வேறு கண்ட்ராக்ட் முறையில் செயல்பட்டோம் என்று காரணம் சொன்னவர்களிடம் கலெக்டர் கார்த்திகேயன் கேள்வி மேல் கேள்வி கேட்டவர், நீங்கள் சொல்வதன் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டிய விஷயம் என்று கடுமை காட்ட வந்த குழுவினரால் பதில் சொல்ல முடியவில்லையாம்.
தவிர அபாயகரமான கேன்சர் கழிவுகள் கொட்டப்பட்டது இங்கே சர்ச்சையானது கேரள உயர்நீதிமன்றம் வரை எதிரொலித்து விட, கேரள அரசிடம் இது தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது கேரள உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு – கேரளா நட்பு மாநிலம் என்றாலும் பொது மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதால், கேரள அரசு, திருவனந்தபுரம் மாவட்ட சப்-கலெக்டர் சாக்சி தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர், இரண்டு பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கேரள சுகாதார அலுவலர், மருத்துவர் கோபிகுமார் அடங்கிய குழுவை நெல்லைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்தக் குழுவிற்கு சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், நெல்லை சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின் நெல்லை ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் வழி காட்டுதலில் ஈடுபட்டு ஆறு குழுக்களாகச் செயல்பட்டனர்.
இதனிடையே மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரளாவின் கண்ணூர் இடாவேலியைச் சேர்ந்த ஜிரச்த்தன் ஜேர்ச் என்பவரும் கைது செய்யப்பட்டடிருக்கிறாராம். இந்த சம்பவத்தில் தலையிட்ட தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கொட்டிய கழிவுகளை கேரளாவுக்கு எடுத்துச் செல்ல உத்தரவிடவே தமிழ் நாடு, கேரள அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் நிறுவனத்துடன் இணைந்து கழிவுகளை அகற்றுகிற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் இரண்டு நாட்கள் இரவும் பகலுமாக சுமார் 450 டன் மருத்துவக் கழிவுகள் 5 ஜே.சி.பி.களின் மூலம் 38 லாரிகளில் அள்ளப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு திருப்பிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
எந்த வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. தமிழகம் கேரளாவுக்கு கற்றுத் தந்த பாடம் இது தான் என நிம்மதி மூச்சு விடுகிறார்கள் அப்பகுதி மக்கள்.