கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இவ்விரு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்றுடன் நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், தற்போது வரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 220க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், கேரள அரசின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பிரபலங்களில் விக்ரம் ரூ.20 லட்சம் மற்றும் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ 50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களும், அம்மாநில அரசு அறிவித்துள்ள (keralacmdrf@sbi) யூ.பி.ஐ. மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உதவி வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வயநாடு சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றித்தான் எங்கள் மனம் நினைக்கிறது. பொதுமக்களுக்கு அங்கு ஏற்படும் சேதத்தையும், இழப்பையும் பார்க்கும்போது நிலைகுலைந்து போய்விட்டோம். இந்த நேரத்தில் நமக்கு தேவைபடுதெல்லாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றாக இருப்பதுதான். அதன் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்க, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்குகிறோம். நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் கட்டியெழுப்பி, பழைய நிலைக்கு மீண்டும் வர வலிமையாலும் இரக்கத்தாலும் ஒன்றுபடுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்